நல்வாழ்வு அருளும் நயினா தீவு நாகபூஷணி அம்மன் திருக்கோவில்

இலங்கை நாட்டின் பழம்பெரும் அம்மன் கோவில், 64 சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழும் ஆலயம், அம்மன் சுயம்புவாக தோன்றிய திருத்தலம், தலபுராணச் சிற்பங்கள் நிறைந்த சித்திரத் தேர் கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு விளங்குவது, நயினா தீவு நாகபூஷணி அம்மன் திருக்கோவில்.

முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வழிபாட்டுத் தலங்களில், ஈழ நாட்டில் உள்ள ‘நயினா தீவு’ம் ஒன்றாகும். 64 சக்தி பீடங்களில் இது, புவனேஸ்வரி பீடமாக திகழ்கின்றது. காளிதாசரால் வணங்கப்பட்ட தலங்களுள் இதுவும் ஒன்று.

Image result for நயினா தீவு நாகபூஷணி அம்மன்நயினா தீவில் கோவில் கொண்டுள்ள நாகபூஷணி அம்மன் வரலாறு, மிகவும் தொன்மையானதாகும். கருவறையில் உள்ள மூலவர் சிலையானது, காந்தார சிற்பக் காலத்தைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையின் வடிவத்தை, இந்தியாவில் இருந்து வந்த நயினாபட்டர் என்ற வேதியர் பூஜித்து வந்தார். நயினா தீவுக்கு அருகில் உள்ள புளியந்தீவில் இருந்த நாகமொன்று, அம்மனைத் தரிசிக்க தினந்தோறும் கடலில் நீந்தி வருவது வழக்கமாக இருந்தது.

அவ்வாறு வரும் போது, அம்மனுக்கு அர்ச்சனை செய்ய, புளியந்தீவில் இருந்து பூக்களை கொண்டு வருவது வாடிக்கை.

ஒருநாள் வழக்கம் போல் பூக்களுடன் நீந்தி வந்த நாகத்தை, கருடன் ஒன்று உணவாக்க முயன்றது. இதனால் பதறிய நாகம், கடலில் எழும்பி நின்றிருந்த கல் பாறை ஒன்றில் ஒதுங்கியது. அந்த இடத்திற்கு வந்த கருடனுக்கும், நாகத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வாணிகம் செய்வதற்காக காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து, கப்பல் மூலம் இலங்கை சென்று கொண்டிருந்தான் மாநாயக்கன் என்ற வணிகன். அவன் நாகத்தை கருடன் கொல்ல முயல்வதைக் கண்டு மனம் இரங்கினான். நாகத்தை காப்பாற்றும் நோக்கில் கருடனிடம், ‘நாகம் அம்மனை வழிபடும் நோக்கத்தைத் தடுக்க வேண்டாம்’ என்று வேண்டினான்.

அதற்கு கருடன், ‘ஐயா! அம்மன் மீது உமக்கு பக்தி இருக்குமானால், கப்பலில் உள்ள உன் பொருட்கள் அனைத்தையும் அம்மன் ஆலயத்திற்குத் தர சம்மதம் சொல்வீரா?. அப்படி நீ ஒப்புக்கொண்டால், நானும் உமக்காக இந்த நாகத்தை விட்டு விடுகிறேன்’ என்றது.

கருடனின் சவாலுக்கு வணிகன் ஒப்புக்கொண்டான். தான் கப்பலில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கோவிலுக்கு வழங்கி விட்டான். இதனால் நாகம் விடுதலை பெற்று, வழக்கம் போல அம்மனை வழிபட்டது. வணிகன் கொடுத்த பொருட்களைக் கொண்டு கோவில் அழகாகவும், சிறப்பாகவும் கட்டமைக்கப்பட்டது.

நயினா தீவின் அருகே பாம்பு சுற்றிய கல் இருப்பதையும், கருடன் கல் இருப்பதையும் இன்றும் காணலாம். இது இத்தலம் குறித்து கூறப்படும் கர்ண பரம்பரைக் கதையாகும்.

இவ்வாறு சிறப்புற்றிருந்த ஆலயம், ஒல்லாந்தர் என்னும் போர்ச்சுக்கீசியர் காலத்தில் தரைமட்டமாக்கப்பட்டது. இதன் சுவடுகள் இன்றும் கடலின் அடியில் காணப்படுவது, இதனை உறுதி செய்கின்றது. போர்ச்சுக்கீசியர் போர்தொடுக்கும் முன்பாக, ஆலயத்தின் முக்கிய மூர்த்திகள், பொருட்களை பக்தர்கள் மறைத்து வைத்தனர். அம்பாளை ஆலய மரப் பொந்தில் வைத்து வழிபட்டனர். டச்சுக்காரர் ஆட்சிக்குப் பின்பு, நயினா தீவில் நாகேஸ்வரி கோவில் சிறிய அளவில் மீண்டும் எழுப்பப்பட்டது. இதன்பிறகு அழகிய கோபுரம் அமைக்கப் பட்டது. 1935-ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலைச் சுற்றி மடங்களும் உருவாக் கினர். 1951-ல் விமானங்கள் புனரமைக் கப்பட்டு குட முழுக்கு நடைபெற்றது.

நாகபூஷணி அம்மன் :

கருவறையில் அமைந்துள்ள சுயம்பு நாகபூஷணி அம்மன், நீள்உருளை வடிவத் திருமேனியராக எழிலாக காட்சி தருகின் றாள். என்றாலும், அலங்காரத்தால் அன்னை யின் முகம் மட்டுமே காட்சியளிக்கிறது. பின்புறம் சீறும் நாகமாக ஐந்து தலை நாகம் உள்ளது. இத்திருமேனிகள் பழமையானவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இங்கு ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. சிவன், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், விஷ்ணு ஆகிய ஐவரின் பூஜை நாட்கள் மாதந்தோறும் நடத்தப்படுகின்றன. பகலில் சங்காபிஷேகம், இரவில் ஸ்ரீசக்கர பூஜை நடைபெறுகிறது. விஜயதசமி மற்றும் வன்னிமர பூஜையும் நடத்தப்படுகின்றன.

நாகபூஷணி அம்மன், கோவில் உட்புறத் தோற்றம்

ஆனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற் சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் இலங்கை மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். திருவிழாவின் 14-ம் நாள் தேரோட்டம் நடைபெறும்.

இவ்வாலயம் 1986-ம் ஆண்டு முதல் பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் சபையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. ஆலய பூஜைகள், கயிலாசநாத குருக்கள் என்பவரது பரம்பரையால் சுமார் 250 ஆண்டுளாக நடத்தப்படுகின்றன. ஆலய தல மரம் வன்னி, தல தீர்த்தம் தீர்த்தக்கேணி ஆகும்.

இலக்கியங்கள் :

யோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய ‘மனோன்மணி மாலை’, அமரசிங்கப்புலவர் இயற்றிய ‘நயினை நாகபூஷணியம்மை திரு ஊஞ்சல்’, வரகவி முத்துக்குமாருப் புலவர் இயற்றிய ‘நயினை நாகபூஷணியம்மை திருவிருத்தம்’, வரகவி நாகமணிப்புலவர் எழுதிய ‘நயினை மான்மியம்’, வேலனை தம்பு உபாத்தியார் இயற்றிய ‘திருநாக தீபப் பதிகம்’, க.ராமச்சந்திரன் இயற்றிய தேவி பஞ்சகம், நயினைத் தீவு சுவாமிகள், கவிஞர் செல்வராஜன் இயற்றிய பாடல்கள் என எண்ணற்ற இலக்கியங்கள் அன்னையைப் புகழ்கின்றன.

நாகபூஷணித் தேர் :

இலங்கை நாட்டின் தேர்களில் நாகபூஷணி ஆலயத் தேர் தனித்துவம் வாய்ந்தது. இத்தேரில் வரலாற்று நிகழ்வு, கிருஷ்ணர், அஷ்டலட்சுமி, நாகம் புளியந்தீவில் பூப்பறித்தல், கருடன் காத்திருப்பது, மணல் லிங்கம் எழுப்பி வழிபடும் காமாட்சி போன்ற வரலாறுகள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், தேரில் நாகபூஷணி பவனிவர, தேரோட்டியாக பிரம்மனின் மனைவி பிரமாணி இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மூன்று வரிசையில், எட்டுத்திசைகளிலும், மரச்சிற்பங்கள் கலைநயத்தோடு மிளிர்கின்றது.

தொன்மைச் சிறப்பு :

ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம், நயினா தீவை ‘மணிபல்லவம்’ என்று குறிப்பிடுகிறது. குலோதர, மகோதர என்ற இரண்டு நாக அரக்கர்களுக்கிடையே மணியாசனம் காரணமாக எழுந்த பெரும் போரை விலக்கி வைக்க, புத்தர் இங்கு எழுந்தருளியதாக பவுத்த நூல்கள் கூறுகின்றன. இத்தீவில் பழமையான பவுத்த கோவில்கள் இருந்ததற்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. அம்மன் ஆலயத்திற்கு சற்றுத் தொலைவில் புனரமைக்கப்பட்ட பவுத்த ஆலயம் ஒன்றும், படித்துறையும் உள்ளது. இந்து சமயத்தவருக்கும், பவுத்த சமயத்தவருக்கும் புனித தலமாக நயினா தீவு விளங்குகின்றது.

நயினா தீவு பண்டைய காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியதை இங்கு கிடைத்த தொல்லியல் சான்றுகள் உறுதி செய்கின்றன.

ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 2 மணி, மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.

அமைவிடம் :

இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்து மகாசமுத்திரத்தில் உள்ள நயினா தீவில் நாகபூஷணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து 431 கி.மீ. தூரத்திலும், யாழ்ப்பாணம் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும் நயினா தீவு அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் படகுத்துறை வரை பேருந்து செல்கிறது. அங்கிருந்து எந்திரப்படகு மூலம் நயினா தீவுக்குச் சென்று வர வேண்டும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com