நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையருளும் வீரமாகாளியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வாரி வழங்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டு முழுவதும் நவராத்திரி உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆடி மாதம் நடைபெறும் திருவிழா தனித்துவம் வாய்ந்தது. இதையொட்டி, அம்மனுக்கு தினமும் அபிஷேக அலங்கார தீபாராதனை வெகு விமர்சையாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.

இவ்விழா கடந்த பல்லாண்டுகளாக 18 நாட்கள் நடைபெற்று வந்தது. இதனிடையே, அம்மனுக்கு திருவிழாவை ஆர்வமுடன் ஏற்று நடத்தும் மண்டகப்படிதாரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் 29 நாட்கள் திருவிழா எழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சை பழத்தில் தீபமேற்றி வழிபடும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் ஐதீகம். இதே போல், மா விளக்கேற்றி வழிபடுவோருக்கு மனதில் எவ்வித குறைகளும் இருக்காது. அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு வந்து தன்னை மனதார நினைத்து வழிபடும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வாரி தந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார் வீரமாகாளியம்மன்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com