நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை

நரசிம்மர் பக்தர்களுக்கும் தன் அன்பர்களுக்கும் கண்கூடாகப் பலனைக் கொடுக்கக் கூடியவர். அதனால்தான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

தெய்வங்களில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் நரசிம்மர். இரணியனைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையும் மனித உடலும் கொண்டு தூணிலிருந்து வெளியே வந்தவர். இரணியனைக் கொல்வதற்காகவே அவதரித்ததால் கோபமே உருவான இந்த மூர்த்தி, பார்ப்பதற்கே பயங்கரமாக இருப்பார்.

உக்ர நரசிம்மர், சம்கார நரசிம்மர் என்று பல மூர்த்தங்களில் இவருடைய தோற்றங்கள் உள்ளன. என்றாலும் பக்தர்கள் வணங்கிப் பரவசப்படுவது சாந்த சொரூபமாய் விளங்கும் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆகியோரைத்தான்.

மற்ற தெய்வங்களைப் போல் அல்லாமல் நரசிம்மர் நினைத்தவுடன் பலனைக் கொடுக்கக் கூடியவர். பக்திக்கு வசப்பட்டு பிரத்தியட்சமாய் வரக்கூடியவர். தான் வணங்கும் ஆதிசங்கரரை அழைத்துச் சென்ற கபாலீசனை, அவருடைய சிஷ்யன் மீது ஆரோகணித்து அடித்துக்கொன்றதைப் போல் பக்தர்களுக்கும் தன் அன்பர்களுக்கும் கண்கூடாகப் பலனைக் கொடுக்கக் கூடியவர். அதனால்தான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

கண்கண்ட தெய்வமாக விளங்கும் நரசிம்மர் சோளிங்கரில் யோக நரசிம்மராகவே எழுந்தருளி இருக்கிறார். சப்த ரிஷிகள் நரசிம்மரை தரிசனம் செய்ய விரும்பி இம்மலையில் தவம் செய்ய ஒரு நாழிகை நேரத்திற்குள் தரிசனம் கிடைத்ததால் அகமகிழ்ந்து கடிகாசலம் என்று இத்தலத்திற்கு பெயர் சூட்டினார்கள்.
‘அக்காரக்கனி’ என்பது மூலவருக்கு தமிழ்ப் பெயர். பேய் பிசாசு பிடித்தவர்கள், பைத்தியம், சித்தப்பிரமை கொண்டவர்கள், ஏவல், பில்லி சூனியம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் சிலநாள் தங்கி இருந்தால் சகல உபாதைகளும் நீங்கி, நன்மை பெறுவதாக நம்பிக்கை யோடு சொல்கிறார்கள்.

குறை தீர்த்து வைக்கும் குன்றுப் பெருமாள்கள் இருவரையும் தரிசித்தால் மட்டுமே பலன் உண்டாகும் என்று சொல்கிறார்கள். அதிகாலையில் அடிவாரத்தில் உள்ள தக்கான் குளத்தில் நீராடிப் பெரிய மலை மீது ஏறி, நரசிம்மனை தரிசித்து விட்டு இறங்கி வந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டு சிறிய மலை ஏறி யோக ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். ஒரே நாளில் தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிடலாம்.

பெரியமலை சற்று செங்குத்தானது. நடக்க இயலாதவர்களையும் நோயாளி களையும் டோலிகள் மூலம் தூக்கிச் செல்ல வசதி இருக்கிறது. அடிவாரத்தில் குளக்கரையில் கருடாரூட வரதராஜரின் சந்நிதி இருக்கிறது. இந்தக் கோவிலில் மூலவர் இல்லை. உற்சவர் மட்டுமே இருக்கிறார். இக்கோவிலை உச்சிகால வேளையில் மட்டும்தான் திறக்கிறார்கள். ‘தொட்டாச் சாரியார்’ என்ற தன் பக்தருக்கு பகவான் காஞ்சி வரதராஜப் பெருமாளாகக் கருடசேவை தந்தருளியதாக ஸ்தலபுராணம் கூறுகிறது.

இந்த உற்சவ மூர்த்திக்குப் பக்தவத்சலர் என்றுபெயர். இவருடைய சந்நிதிக்குப் பின்புறம் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் உள்ளது. அதில் ஆண்டாள், ஆழ்வார்கள், எறும்பியப்பா, தொட்டாச்சார்யார் முதலியவர் களுக்குத் தனி சந்நிதிகளும் உள்ளன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com