நாவன்மை நல்குவார் நாராயணன்

சாதாரணமாக முன்னோர்களுக்கு வருடா வருடம் அவர்கள் மறைந்த தினத்தில் திதி கொடுப்பது என்பது நம் மரபில் வேரூன்றிய விஷயம். ஆனால், தெய்வமே கருணையோடு இறங்கி வந்து மனிதர்களுக்காக திதி கொடுக்கும் அற்புதத் தலம் ஒன்று உள்ளது! அது, நென்மேலி. 17ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் செங்கல்பட்டு உள்ளிட்ட பிரதேசத்தை ஆண்டு வந்தான். ஊருக்கு ஊர் திவான்களை நியமித்து அவர்கள் மூலம் வரி வசூல் செய்தான். அவர்களில் ஒருவர் யக்ஞநாராயண சர்மா. அவரது மனைவி, சரசவாணி. குழந்தை பாக்கியம் இல்லாத அவர்களுக்கு ஸ்ரீமந் நாராயணனிடம் அளவு கடந்த பக்தி. அந்த நாராயணனையே தம் மகனாக எண்ணி வாழ்ந்தனர்.

நென்மேலியில் நாராயணன் கோயிலை நிர்மாணிக்கும் பணியை அந்த தம்பதியர் மேற்கொண்டனர். எந்த கட்டத்திலும் போதும் என்று அவர்களால் திருப்தியடைய இயலாததால் மேலும் மேலும் செலவு அதிகரித்துகொண்டே போயிற்று. திவானாக இருப்பவர், வரி வசூலிக்கும் அதிகாரம் உள்ளவர், அந்த வசூல் பணத்தில்தானே கோயில் கட்டுமான செலவை சரிகட்டுகிறார் என்ற சந்தேகம் தம்பதியைச் சுற்றிப் படர ஆரம்பித்தது. அதுவே கேள்வியாகக் கேட்கப்பட்டபோது, ‘இவ்வூரையே காத்து பரிபாலிப்பவனுக்குத்தானே செய்தேன்?’ என்று அப்பாவியாகக் கேட்டார்கள். ஆற்காடு நவாப் வரை இந்த செய்தி சென்றது. மக்களின் வரிப்பணத்தை தன் இஷ்டப்படி கோயிலுக்குச் செலவழிப்பதா என்று கோபமானான் நவாப். சிறிதும் யோசிக்காமல் அவர்களுக்கு மரண தண்டனை அளித்தான்.

வம்பு பேசிய ஊர்தான் என்றாலும் யக்ஞசர்மா தம்பதி மீது அளவற்ற அன்பும் கொண்டிருந்தது. காட்டுத்தீயாக, மரண தண்டனை விஷயம் காஞ்சிபுரம் தாண்டி நென்மேலியை வந்தடைந்தது. ஊருக்குள் அதிகாரிகள் சூழ்ந்தனர். ஊரிலுள்ளோர் பலர் விசும்பத் தொடங்கினார்கள். தனக்கான தண்டனையை அறிந்த யக்ஞநாராயணர் கண்களை மூடினார். வைகுந்தப் பாற்கடல் அவரை வா, வா என்பது போல அலைகளால் ஆரவாரித்தது. யக்ஞநாராயணர் தம்பதி, லட்சுமி நாராயண பெருமாள் சந்நதியின் முன்பு கண்களில் நீர் பெருக நின்றனர். மௌன மொழியில் பெருமாளுடன் பேசினர். அவர்கள் மனசுக்குள் திருவிடந்தை ஆதிவராஹரை சுட்டிக் காட்டினார் நாராயணர்.

உடனிருந்தவர்களிடம், ‘நாங்கள் திருவிடந்தை செல்கிறோம். மரண தண்டனையை அங்கே ஏற்றுக்கொள்ளப் போகிறோம்’ என்று சொன்னார்கள். ஊர்ப் பெருங்கூட்டம் அமைதியாக வழிவிட்டது. அதற்குள் நவாபிற்கு நெருங்கிய ஒருவர் அவரிடம் திவான் யக்ஞநாராயண சர்மாவின் பக்தி ஈடுபாட்டைப் பற்றி சொல்லத் தொடங்கினார். ஊருக்காக அவர் உழைத்த விதத்தைச் சொன்னார். கோயில் பணி என்பது நவாப் தானாகச் செய்யவேண்டிய ஒரு பணி என்பதை அறிவுறுத்தினார். அவருக்கு பதிலாக திவான் செய்திருக்கிறார் என்று பாராட்டினார். அதைக் கேட்டு நவாப் கண்கலங்கினார். உடனேயே நென்மேலியை அடைந்தார். அதேசமயம் திருவிடந்தை திருக்குளத்தின் படித்துறையில் கைகள் இரண்டையும் சிரசுக்கு மேல் கூப்பி யக்ஞநாராயண சர்மாவும், சரசவாணியும் பிரார்த்திக்கத் தொடங்கினார்கள்.

‘‘முன் ஜென்ம பாவமோ, வினையோ தெரியவில்லை. நாங்கள் இறந்தால் எங்களுக்கு ஈமக்கிரியை செய்ய ஒரு மகன் இல்லை. ஒரு சொட்டு நீரும், எள்ளும் விடக்கூட வாரிசில்லாமல் இப்படி அனாதைகளாக இறக்கிறோமே என்கிற வேதனை எங்களை வாட்டுகிறது. இறப்பது பற்றி கவலையில்லை. ஆனால், அதற்குப்பின் சாஸ்திரம் சொல்லும் கர்மாக்களை எங்களுக்குச் செய்ய யார் இருக்கிறார்கள்? இறப்புக்குப் பின் எங்கள் ஆத்மாக்கள் நிம்மதியின்றி அலையத்தான் வேண்டுமா? பூரணத்வம் பெறாத நிலையில், எங்கள் ஆத்மாக்கள் வேதனையுறத்தான் வேண்டுமா? நாராயணா, எங்களுக்கு நீதான் மகன். உன் மனைவி மகாலட்சுமி எங்கள் மருமகள். இருவரும் எங்களுக்கு ஈமக்கிரியைகள் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

நாங்கள் மட்டுமல்ல, எங்கள் நிலையில் இவ்வுலகில் எவர் இருந்தாலும் உன் சந்நதிக்கு வந்துவிட்டால் அவரவர்களின் முன்னோர்களுக்கு நீயே சிராத்தம் எனும் நீத்தார் கடனை செய்துவிடு’’ என்று உள்ளம் உருகிக் கரைந்தார்கள். பிறகு திருக்குளத்தில் இறங்கி மறைந்தார்கள். நாராயணன்திருவடி சேர்ந்தார்கள்.
நவாபும் ஊர் மக்களோடு சேர்ந்து கலங்கினார். மாபெரும் தவறு செய்து விட்டேனே என்று கவலையுற்றார். இதற்கென்ன பிராயசித்தம் என்று லட்சுமி நாராயணப் பெருமாளை நோக்கி கைகூப்பினார். அப்போது லட்சுமி நாராயணர் முன்பு ஒரு பெருஞ்ஜோதி தோன்றியது. அது அசரீரியாகப் பேசியது: ‘‘யக்ஞநாராயண சர்மா&சரசவாணியைப் பற்றி கவலையுற வேண்டாம். நானே அவர்களுக்கு மகனாக இருந்து எல்லா ஈமக்கிரியைகளையும் செய்கிறேன். அவர்கள் ஆத்மா சாந்தியடையும். இன்னொன்றும் சொல்கிறேன்.

இத்தலத்தில் எவர் வந்து, இறந்தோர் ஈமக்கிரியைகளை செய்ய வேண்டினாலும் நானே அவர்களுக்காக அந்தக் கடன்களை நிறைவேற்றுகிறேன்.’’ ஊர்மக்கள் பிரமை பிடித்ததுபோல் இருந்தனர். வியப்பு தாங்காமல் வெகுநேரம் அமைதி காத்தனர். நவாப் கைகள் இரண்டையும் கூப்பி தொழுதான். அதன்படி இத்தலத்தில் சிராத்தம் எனும் நீத்தார் கடன் நிறைவேற்றும் சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள் எனும் திருநாமத்தோடு நாராயணன் சேவை சாதிக்கிறார். நென்மேலி தென்றல் தாலாட்டும் அழகிய கிராமம். மத்தியில் குடி கொண்டிருக்கிறார் லட்சுமி நாராயணப் பெருமாள். சிறிய கோயிலாக இருந்தாலும் கீர்த்திக்கு குறைவில்லை. கருவறையில் பிராட்டியை மடியில் அமர்த்திக்கொண்டு சேவை சாதிக்கிறார், வைகானஸ ஆகம மகான்களால் ஆராதிக்கப்பட்ட இந்த மூர்த்தி. காந்தம் இரும்பைக் கவர்வதுபோல தரிசிப்போரை வசீகரித்து கருணையால் ஈர்த்துப் பிணைக்கிறார். தாயாருக்கு தனி சந்நதி இல்லை.

ஆனால், அபூர்வமாக சாளக்கிராம வடிவில் தாயார் அருள்பாலிக்கிறாள். அருகேயே இந்த தலத்தின் சிறப்பு மூர்த்தியான சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இவர்தான் இங்கு நீத்தார் கடன் நிறைவேற்றுகிறார். இக்கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர், அர்க்கிய புஷ்கரணி ஜீயர் குளம், சௌலப்பிய கயா என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. திவசம், திதி, சிராத்தம் என்று பலவிதமாக அழைக்கப்படும் நீத்தார் கடன்களை ‘அபர காரியங்கள்’ என்பார்கள். அதாவது சுபமற்ற காரியங்கள். ஆனால், இக்கோயிலில் அதெல்லாம் சுபமான, நல்ல கிரியைகளாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அதைச் செய்பவர் பெருமாளே அல்லவா? அதனால், ‘சுப சிராத்தம்’ என்கிறார்கள். பித்ரு வேளை எனும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்தக் கிரியைகளை பெருமாள் இங்கு செய்கிறார்.

இந்த ஒரு காலம் மட்டும் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம். பெருமாள் திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் 11 மணிக்குள் பெருமாள் சந்நதிக்கு வந்து விடுகிறார்கள். மஞ்சள் அட்சதையைத்தான் இங்கு பயன்படுத்துவர். எனவே, மஞ்சள் அட்சதை, எள், தர்ப்பைப் புல், விரலில் அணிந்துகொள்ளும் பவித்ரம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளுக்கு முன்பு வைத்து சங்கல்பம் செய்து கொள்கிறார்கள். அதற்குப் பிறகு, கோயிலின் பின்புறத்திலுள்ள விஷ்ணுபாதம் எனும் பெருமாளின் திருவடிக்கருகே சாஸ்திர பண்டிதர் வழிகாட்ட, திதி கொடுக்க வந்தவர்கள் அமர்ந்து தங்கள் மூதாதையருக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிக்கிறார்கள்.

இவ்வாறு சமர்ப்பிப்பதே சிராத்த ஸம்ரக்ஷணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நதிக்கு வருகிறார்கள். பெருமாளுக்கு மகாசங்கல்பமும், சகல உபசாரங்களுடன் பூஜைகளும் நிகழ்த்தப்படுகின்றன. இறுதியில் சம்பிரதாயமான திவச சமையல் போலவே வெண் பொங்கல், தயிர் சாதம், பிரண்டைஎள் துவையல் போன்றவை நைவேத்யம் செய்யப்படுகின்றன. இந்த எளிமையான உணவுகளை ஏற்று நம் மூதாதையர்களின் ஆத்மாக்களை பெருமாள் திருப்தி செய்வதாக ஐதீகம்.

இன்றும் இத்தலத்தில் தந்தையை இழந்த மகன், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள், பெற்றோரை நிர்க்கதியாக விட்டுவிட்டு, அவர்கள் மறைவுக்குப் பின் மனம் திருந்தி அவர்களுக்காக திதி கொடுக்க வரும் மகன் என்று விதவிதமாக யார் வந்தாலும் அவர்கள் சார்பில் தானே அவர்கள் ஸ்தானத்தில் நின்று சிராத்தம் எனும் திதி கொடுக்கிறார், சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள். கருணை கடலினும் பெரிது என்பார்கள். ஆனால், இத்தலத்தை பொறுத்தவரையிலும் நாராயணன் கருணைக் கடலாகவே திகழ்கிறார். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் அமைந்துள்ளது. சென்னை தாம்பரத்திலிருந்து பேருந்து வசதிகள் நிறைய உண்டு.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com