நிம்மதி அளிக்கும் சம்மோஹன கிருஷ்ணன் ஸ்லோகம்

இது கிருஷ்ணனின் துதி. மோஹினியாய் அவதரித்து உலகங்கொண்ட மாயனின் துதி! மோஹினியும் நானே, மோஹம் அளிப்பவனும் நானே, மாயையும் நானே, மாயை விலக்குபவனும் நானே என மாயன் காட்டி நின்ற கோலம்.

தானே மாயனுமாய் மோஹினியாய் காட்டி நின்ற சம்மோஹன கிருஷ்ண ரூபத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வின் மயக்க நிலை நீங்கும்.

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத் தெம்மானைக் கூறுதலே.

எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதென்றால் அது மிகவும் சிரமமானது. காரணம், அவன் ஆணும் அல்லன், பெண்ணும் அல்லன். அப்படி என்றால் இரண்டும் அல்லாத மூன்றாம் பாலினத்தவனா என்றால், அதுவும் அல்லன்! அவனை எங்கே காட்டென்று சொன்னால் அவன் நம் கண்ணால் காண்பதற்கு இயலாதவன். உள்ளவனா என்றால் அவன் உள்ளவன் அல்லன். அப்படி என்றால் அவன் இல்லையா என்று கேட்டால், அவன் இல்லாதவனும் அல்லன். ஆனால் அடியார் என்ன விரும்புகின்றனரோ அதற்கு ஏற்ப, அவர்கள் விரும்பிய வடிவை உடையவன் ஆவான். அப்படி அல்லாதவனாகவும் இருப்பான். ஆகவேதான் அவனை குறிப்பிட்டு அவன் தன்மையைச் சொல்லுதல் சிரமம் என்றார் நம் ஆழ்வார்.

ஆயினும் நமக்காக இப்பூவுலகில் அவதரித்து நம்முடனே வாழ்ந்து பக்தியின் பரிணாமத்தை விதைத்த கண்ணன் தன் மாயையினால் தோற்றுவித்த சம்மோஹன வடிவத்தை தியானித்து நலம் பெறலாம்.

உலக மக்களின் நன்மை கருதி மரீசி மகரிஷி நமக்கு அளித்துள்ள அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ண ஸ்லோகம் இது. நிம்மதி இழந்து தவிக்கும் குடும்பங்களில் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் அருமையான சுலோகம். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்வை தரும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அளித்தருளும்.

க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
த்ரிபங்கீ லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இஷீசாபம் வேணுவாத்தியம் ச தாரயந்தம் புஜாஷ்டகை:
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே ||

தாமரை இதழ் போன்ற கண்களும் பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும் அழகிய வில் போல் வளைந்த திருமேனியும் அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமுமாகத் திகழ்பவரும் பாதி புருஷாகார சரீரரும் பாதி பெண்மையான சரீரமும் வலது நான்கு இடது நான்கு கரங்களில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கரங்களில் வேணு வாத்தியம் (புல்லாங்குழல்) வாசித்த படி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவிதமான மனோகரமான புஷ்பங்களைத் தரித்தவரும் இன்னல் படும் மக்களை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தர வல்லவருமான மோஹன ரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிக்கிறேன்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com