பங்குனி உத்திரம்: விரதம் இருந்து அண்ணாமலையார் வழிபாடு செய்யவும்

அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்து இருக்கும் பரபிரம்மம் சிவபெருமானே. பிரணவத்தின் ரூபமாகவும், தேஜோமயமாகவும், பிரம்ம, விஷ்ணு மூர்த்திகளே காண இல்லாத மூர்த்தியான அண்ணாமலையார், நமக்கு கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் தினமே பங்குனி உத்திர தினமாகும்.
இப்படி பெருமைமிக்க திருவண்ணாமலையில் ‘பங்குனி உத்தரம்’ திருக்கல்யாண உற்சவ வைபவம் பெரும் சிறப்புடையது. அன்றையதினம் உச்சிக்காலத்தில் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்காரம் செய்விக்கப்படும். அதன்பின் எங்குமே காணாத வண்ணம் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான அருணாசலேஸ்வரர் போகசக்தி தாயாருக்கும் அதனை தொடர்ந்து உபசாரம் நடைபெறும். பின்னர் மாலை பொழுதில் உண்ணாமலை அம்மன் குமரக்கோவிலில் இருந்து மணப்பெண்ணாக சீர்வரிசையுடன் திருமணக்கோலம் கொண்டு திருக்கோவிலுக்குள் அழைத்து வரப்படுவார்.

அங்கே மாப்பிள்ளையாக அலங்கார ரூபமாக அண்ணாமலையார் மேளதாளம் முழக்க தன் யதஸ்தானம் விட்டு வெளியே வருவார். அக்காட்சி காண நமக்கு நூறு கண்கள் வேண்டும். பின் சுவாமி கொடிமரம் அருகில் உற்சவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்து அருளுவார்கள். பின்னர் பூஜைகள் முடிவுற்று மூலஸ்தானம் முழுக்கு, வேதகாம மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் ‘அரகர’ கோஷம் விண்ணை பிளக்க திருமாங்கல்ய தாரனம் என்னும் திருதாலி கட்டப்படும். பின்பு உபசாரங்கள், சைவாகமங்கள், திருமுறைகள் பாராயணம் செய்து அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் சமர்ப்பணம் செய்யப்படும். பின் தர்மத்தின் வடிவான ரிஷப வாகனம் மீது (தங்க ரிஷபம்) பவனி வருதல் நடைபெறும்.

மறுநாள் கீழ்நாத்தூர் சென்று மருவுண்ணலும், அதனை தொடர்ந்து நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். இக்காலத்தில் காலையில் ஹோமமும், இரவு பொழுதில் ஊஞ்சல் சேவையும் காணலாம். பின்பு மறுநாள் உச்சிக்காலம் முடிவு பெற்று பாலிகை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு தேவியரும், ஈசணாரும் தாமரை குளத்திற்கு செல்வார்கள். அங்கு நிகழ்ச்சி நிறைவு பெற்று தாமரைகுளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும், மாலை குமரகோவிலில் மண்டகப்படி, காமாட்சியம்மன் கோவிலில் மண்டகப்படி ஏற்று திருவீதி உலா வந்து திருக்கோவில் அடைவர்.

இப்படி மிக, மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழா பங்குனி உத்திர விழா. மேலும் அந்த தினத்தில் அனேக கோவில்களில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும். இந்த பெருமைமிக்க வைபவத்தில் இருக்க கூடிய விரதத்தின் பலன் ஏராளம். முன்பொரு சமயம் பிரும்மதேவர், சரஸ்வதி தேவியையும், தேவேந்திரன் இந்திரராணியையும் தங்கள் மனைவிகளாக அடைந்தார்கள். சந்திரன் இந்த விரத மகிமையால் அசுவினி முதலான இருப்பத்தியேழு நட்சத்திரங்களை தம் மனைவிகளாக அடைந்தான்.

அகஸ்திய முனிவரும் பூர்வத்தில் இந்த சிறந்த விரதத்தை, அனுஷ்டித்து, அதன் பயனாக லோபாமுத்திரையை தம் மனைவியாக அடைந்தார். இந்த விரத மகிமையாலேயே மன்மதன் ரதிதேவியை தன் மனைவியாக அடைந்தான்.

பங்குனி விரதத்தை முறைப்படி குறைவில்லாது அனுஷ்டித்து வரும் இளைஞர்களுக்கு நல்ல பெண்ணும், கன்னிப் பெண்களுக்கு நல்ல வரனும் அமையும். தம்பதிகள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் புத்திரச் செல்வங்களையும் விரும்பிய பொருட்களையும் பெற்று மகிழ்வார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த நன்நாளில் பரம்பொருளான அண்ணாமலையாரை அன்போடு முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்வில் எத்துனை இகபர இன்பங்கள் உண்டோ, அத்தனை இன்பங்களையும் பெறலாம். இத்தகைய சிறப்புகள் கொண்ட பங்குனி உத்திரம் விழாவை கண்டு வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற எல்லாம் வல்ல உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com