பழனியில் இருந்து லண்டனுக்கு செல்லும் தங்க ஆசனம்

Future News Murugar
தங்க ஆசனம், முருகனின் பாதத்தையும், பக்தர்கள் கோபுர காவடி எடுத்து சென்றதையும் படத்தில் காணலாம்.

லண்டன் வேல்ஸ் நகரில் புதிதாக தான்தோன்றி ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளது. அங்கு பிரதிஷ்டை செய்வதற்காக, ரூ.20 லட்சம் மதிப்பில் தங்க ஆசனம் மற்றும் முருகன் பாதங்கள் பழனியில் செய்யப்பட்டன. இந்தநிலையில் லண்டனை சேர்ந்த கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் நேற்று பழனிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் பழனி ஐவர்மலை முருகன் கோவில், பழனி மலைக்கோவில் ஆகியவற்றுக்கு தங்க ஆசனம், பாதங்கள் எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பிறகு ஆசனம், பாதங்களை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏற்றி கிரிவீதியில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள், 8 அடி உயரம் கொண்ட கேரள பாரம்பரியமிக்க 3 கோபுர காவடிகளுடன் பங்கேற்றனர். இன்று (திங்கட்கிழமை) பாதம் மற்றும் ஆசனம் கார் மூலம் சென்னை கொண்டு செல்லப்படுகிறது. அதன்பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் லண்டனுக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.