பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமானோர் வருகை புரிந்தனர்.

இதனால் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையத்தில் நேற்று பக்தர் கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளில் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதுதவிர பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்தனர். மதுரை கோச்சடையை சேர்ந்த 7 பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புத்தாண்டையொட்டி மலைக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.


பழனி முருகன் கோவிலுக்கு அலகு குத்தி வந்த மதுரை கோச்சடையை சேர்ந்த பக்தர்கள்.

இதேபோல் திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

புத்தாண்டை கொண்டாட பழனியில் பக்தர்கள் குவிந்ததால் திருஆவினன்குடி கோவில், அடிவாரம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதுமான போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

எனவே விழாக்காலங்களில் போக்குவரத்தை சரி செய்ய கூடுதல் போலீசாரை கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com