பாரம்பரிய மாங்கொட்டை திருவிழா – திருவாதவூரில் இன்று தொடக்கம்

மேலூர், திருவாதவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் மாங்கொட்டை திருவிழா, மதுரை மாவட்டத்தில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5-ம் நாளில் திருவாதவூர் கோவிலில் இருந்து திருமறைநாதர், பஞ்சமூர்த்திகளுடன் பல்லக்கில் எழுந்தருளி மேலூருக்கு வருவார்.

மாம்பழம் அதிகமாக விளைச்சலாகும் வைகாசி மாதம் நடக்கும் இந்த திருவிழாவில் விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த மாம்பழங்களை நேர்த்திக்கடனாக சாமி வருகையின்போது சூறை விடுவது வழக்கம். அப்போது பக்தர்கள் மாம்பழங்களை சாப்பிட்டு கீழே போடும் மாங்கொட்டைகள் தெருக்களில் பரவலாக சிதறிகிடக்கும். இந்த மாங்கொட்டைகள் மீது கால் மிதித்து பலர் கீழே விழுவதும் வேடிக்கையாக இருக்கும். இதனால் இந்த திருவிழாவிற்கு மாங்கொட்டை திருவிழா என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் வைகாசி மாங்கொட்டை திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மாலை 6 மணி அளவில் வாஸ்து சாந்தியுடன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் தலைமையில் விழா தொடங்குகிறது.

திருவிழாவில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் கொடியேற்றம் நடைபெறும். 10-ந்தேதி சிம்ம வாகனத்தில் சாமி கோவிலில் வலம் வருவார். 11-ந்தேதி கைலாச வாகனம், காமதேனு வாகனங்களிலும், 12-ந்தேதி ரிஷப வாகனத்திலும் சாமி எழுந்தருளி வீதிஉலா வருவார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 13-ந்தேதி திருமறைநாதர் மேலூருக்கு புறப்பாடாகிறார். அன்றைய தினம் காலை 6 மணிக்கு திருமறைநாதர் பல்லக்கில் எழுந்தருளி மேலூருக்கு புறப்படுவார். அப்போது வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு சாமி அருள்புரிகிறார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் மாங்காய்களை சூறையிடுவார்கள். மேலூர் வந்த பின்னர் நகராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்படும் தாசில்தார் மண்டகப்படிக்கு சென்றடைகிறார். அங்கு தற்போதைய மேலூர் தாசில்தார் சிவகாமிநாதனுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. அதன்பிறகு மேலூர் நகரில் சாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். பின்னர் இரவு முழுவதும் ஆன்மிக சொற்பொழிவு, கச்சேரிகள் நடக்கிறது. மறுநாள் சாமி திருவாதவூர் திரும்புவார். அதன்பிறகு திருவிழாவின் 8-ம் நாளான 16-ந்தேதி திருக்கல்யாணம், 9-ம் நாளில் தேரோட்டம், 10-ம் நாளில் திருவிழா முடிவடைகிறது.

திருவிழாவை முன்னிட்டு மேலூரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்டகப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாங்கொட்டை திருவிழாவுக்காக திருவாதவூர்-மேலூர் இடையே சாலையோரங்களில் மண்டகப்படிகள் அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com