பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா இன்று தொடக்கம்

கோவை- மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அரங்கநாதர் கோவில் உள்ளது. ‘தென்திருப்பதி’ என்று பக்தர்களால் போற்றப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் பவுர்ணமியன்று தேர்த்திருவிழா கொண்டாடப்படும்.

இதேபோல் இந்த வருடம் தேர்த்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று திருமுனை நகர சோதனையுடன் கோவிலில் பூஜை நடை பெற்றது.

இன்று (சனிக்கிழமை) 13-ந் தேதி சிறப்பு பூஜையுடன் கொடியேற்றுதல் நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. 14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் என ஒவ்வொரு வாகனத்திலும் பாலமலை அரங்கநாதர் அமர்ந்து கோவிலை சுற்றி வந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

இதன் பின்னர் செங்கோதையம்மன் அழைப்பு, திருக்கல்யாணம், யானை வாகன உற்சவம் மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் கட்டளைதாரர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. 19-ந்தேதி சிகர நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாலமலை கோவிலின் பரம்பரை அறங்காவலர் யு.ஜெகதீசன் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் அன்னதான கமிட்டி, மலைவாழ் மக்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com