பாவம் போக்கி நன்மையருளும் மாசிலாமணீஸ்வரர் வழிபாடு

gallery Sivan

ஆவடியை அடுத்த வட திருமுல்லைவாயலில் 500 ஆண்டு பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்பகுதி வனமாக இருந்தது. அப்போது இங்கிருந்த வாணன், ஓணன் என்ற 2 அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். அவர்களை எதிர்த்து போர் செய்ய வந்த தொண்டைமான் என்ற அரசனை அசுரர்கள் கொல்ல முயன்றனர். இதனால் அச்சம் அடைந்த மன்னன் பட்டத்து யானை மீதேறி தப்பி சென்று கொண்டிருந்தான். அப்போது யானையின் கால் அங்கிருந்த முல்லை கொடியில் சிக்கி கொண்டது. அதனை அரசன் வெட்டினான். வெட்டிய இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது.

அதிர்ச்சி அடைந்த மன்னன் கீழே இறங்கி பார்த்த் போது, மண்ணில் புதைத்திருந்த சிவலிங்கத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் மனம் உடைந்த மன்னன் உயிரை மாய்க்க முயன்றான். அதற்குள் சிவபெருமான் தோன்றி மன்னனுக்கு அருள்பாலித்தார். நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார். சிவன் தன்னை மாசில்லாதவன் என கூறியதால் இறைவனுக்கு மாசிலாமணீஸ்வரர் என மன்னன் பெயர் சூட்டினார். மேலும், அசுரர்கள் வைத்திருந்த 2 வெள்ளெருக்கம் தூண்களை கொண்டு வந்த மன்னன் கோயில் கட்டினான் என வரலாறு எடுத்துரைக்கிறது.

இந்த தூண்கள் இன்றும் கோயிலில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிகிறார் மாசிலாமணீஸ்வரர். லிங்கத்தின் மேல் பகுதியில் வெட்டுப்பட்ட தடம் உள்ளது. கொடி போன்ற இடை கொண்டதால் இங்குள்ள அம்பாள் கொடியிடை நாயகி என அழைக்கப்டுகிறாள். ஆலய பிரகாரத்தில் சோழபுரிஸ்வரர், லவகுசர்கள் வணங்கிய குசல்புரீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. வலம்புரி விநாயகரும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த ஆலயத்தில் வீற்றிருகும் நந்தி அசுரர்களை அழிப்பதற்காக மன்னன் தொண்டைமானுக்கு துணையாக சென்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நந்தி சுவாமியை பார்த்தபடி இல்லாமல் எதிர் திசையை நோக்கி திரும்பிய படி உள்ளது.