பிரசாதமாக வழங்கப்படும் தங்கம்

பொதுவாக கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு, குங்குமம், பூ, பழம், நைவேத்தியப் பொருட்களைத் தான் வழங்குவார்கள். ஆனால் ஒரு கோவிலில் தங்கம் வழங்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

ஆம்.. அத்தகைய பெருமைக்குரிய ஆலயம் மத்திய பிரதேச மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த ஊரின் பெயர் ரத்லம். ரத்னபுரி என்ற வரலாற்று பெயரைக் கொண்ட திருத்தலம். இங்குள்ள மகாலட்சுமி ஆலயத்தில் தான் தங்கத்தை பிரசாதமாக வழங்குகிறார்கள்.

ஏழை எளியவர்களின் வறுமையை அகற்றுவதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் யாரும் காணிக்கையாக பணம் செலுத்துவது இல்லை. வேண்டுதல் நிறைவேறி நேர்த்திக் கடன் செலுத்தும் அனைவரும், தங்களால் இயன்ற அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

அப்படி வருடம் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ளியானது மலை போல் குவித்து வைக்கப்பட்டிருக்கும். பொதுவாக அனைத்து கோவில்களிலும் சேரும் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை கோவில் திருப்பணிக்காக பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் கோவிலில் காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளியை, தீபாவளித் திருநாள் அன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

இது இறைவனால் தரப்படும் பிரசாதமாக பக்தர்கள் பார்க்கின்றனர். எனவே இந்த ஆலயத்தில் வழங்கப்படும் தங்கத்தை பக்தர்கள் யாரும் விற்பனை செய்வது கிடையாது என்கிறார்கள்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com