பிரம்மஹத்தி தோஷம் போக்கும் லிங்க வழிபாடு

Future News Sivan

கலியுகத்தில் மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்ற வரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடாகும்.சிவ ஆகமங்களில் சிவபெருமானே அன்னை பார்வதிக்கு சொன்ன, அதி உன்னத வழிபாடு தான் ‘பார்த்திப லிங்க’ வழிபாடு.

“கலியுகத்தில் மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்ற வரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடு” என பரமேஸ்வரனே அன்னை பார்வதிக்கு சொல்கிறார். இந்த வழிபாட்டை செய்து தான் அன்னை பார்வதி தேவி முத்தி பேறு அடைகிறார்.

ராமபிரானும் கூட, இலங்கை மன்னன் ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீக்குவதற்காக, ராமேஸ்வரத்தில் மண் லிங்கம் செய்து வழிபட்டு தான் தோஷங்களைப் போக்கிக் கொண்டார்.

இதேபோல் சூரபத்மனை அழித்த போது, முருகப்பெருமானுக்கும் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது திருச்செந்தூரில் கடற்கரையில் பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெற்றார், முருகப்பெருமான்.

இதே வழிபாட்டை செய்து தான் இலங்கையை வளம் மிக்க நாடாக மாற்றினான், ராவணேஸ்வரன். ஆம் ‘திருகோணமலையில், மணலிலே 1,008 சிவலிங்கங்கள் செய்து வழிபட்டான் ராவணன். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு அவன் செய்த அந்த பூஜையின் காரணமாக, இலங்கையை மாபெரும் சிவ பூமியாக, சொர்ண பூமியாக மாற்றினான்’ என மிக பழமையான கிரந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த பூஜையை செய்பவர்கள் மாபெரும் குபேர சம்பத்துகளையும், அனைத்து வல்லமைகளையும் பெருவார்கள் என்பது உறுதி.