பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பகல் முழுவதும் நடைதிறப்பு

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஐயப்பன் மற்றும் முருகப் பக்தர்களின் வசதிக்காக பகல் முழுவதும் நடை திறந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொறு வருடமும் கார்த்திகை மாதம் தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடைத்திறந்திருக்கும்.

பொதுவாக கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களும், மார்கழி மாதம் முருகப்பக்தர்களும் மாலை அணிவிந்து விரதம் இருக்க தொடங்குவது வழக்கம். இதை முன்னிட்டு பக்தர்கள் சபரிமலை, பழனி கோவிலுக்கு செல்லும் வழியில் பிரசித்திப்பெற்ற கற்பக விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்காக இந்த கோவிலில் கார்த்திகை பிறந்தவுடன் பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும்.

இந்தாண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரையும், வருகிற 16-ந்தேதி முதல் அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

இந்த நடைமுறையின்படி கற்பக விநாயகர் திருக்கோவில் தைப்பூசம் வரை பகல் முழுவதும் நடை திறந்து இருக்கும். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை கோவில் டிரஸ்டிகள் அமராவதி புதூர் ஆர்.எம்.அண்ணாமலை செட்டியார் மற்றும் தேவகோட்டை எம்.நாகப்பசெட்டியார் தெரிவித்துள்ளனர்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com