பெரியகோவிலில் வராகி அம்மனுக்கு 1-ந்தேதி ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இதில் வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

அன்று காலை கணபதிஹோமம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகமும், மாலையில் அம்மனுக்கு அலங்காரமும் நடைபெறுகிறது.

அதன்படி 2-ம் நாள் அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும், 3-வது நாள் குங்கும அலங்காரமும், 4-வது நாள் சந்தன அலங்காரமும், 5-வது நாள் தேங்காய்ப்பூ அலங்காரமும், 6-வது நாள் மாதுளை அலங்காரமும், 7-வது நாள் நவதானிய அலங்காரமும், 8-வது நாள் வெண்ணெய் அலங்காரமும், 9-வது நாள் கனிவகை அலங்காரமும், 10-வது நாள் காய்கறி அலங்காரமும், 11-வது நாள் புஷ்ப அலங்காரமும் நடை பெறுகிறது.

கடைசி நாள் அன்று மாலை அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் செல்வம், சுரேஷ், மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com