பெருமைமிகு வாழ்வருளும் பசவனகுடி நந்தியம் பெருமான்

நந்திக்கு என்று ஒரு தனிக்கோயில் கர்நாடக மாநிலம் பெங்களூரு ‘பசவனகுடி’ திருத்தலத்தில் அமைந்துள்ளது. பொதுவாக, சிவாலயங்களில் சிவலிங்கத்தைப் பார்த்தபடி ‘நந்தி’ காட்சி தருவதைத் தரிசிக்கலாம். ஆனால், சிவபெருமான் இல்லாமல் நந்தி மட்டும் எழுந்தருளியிருக்கும் தனிக்கோயில் பசவனகுடியில் அமைந்துள்ள ஆலயமாகும். இத்திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் நந்தி பகவான், மிகப்பெரிய திருவுருவில் காட்சி தருகிறார். பதினாறு அடி உயரமும், இருபத்தோரு அடி நீளமும் கொண்டு திகழ்கிறார். இவர் பெயரிலேயே இந்த ஊர் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். ‘பசவா’ என்ற கன்னட மொழிச்சொல்லுக்கு ‘நந்தி’ என்று பொருள். அதனால், நந்தி வீற்றிருக்கும் ஊர் ‘பசவனகுடி’ ஆனது என்று கூறப்படுகிறது.

இத்திருத்தலத்தில் நந்தி கோயில் கொண்டிருப்பது குறித்து ஒரு பரம்பரைக்கதை உண்டு. இந்த நந்தி ஐநூறு வருடங்களுக்குமுன் உயிருடன் நடமாடிக் கொண்டிருந்ததாம். தற்பொழுது கோயில் அமைந்துள்ள இடத்தைச்சுற்றியுள்ள கிராமங்களில் விருப்பப்படி சுற்றித் திரிந்துகொண்டிருந்த நந்தி, விவசாயிகள் பயிரிட்டிருக்கும் நிலக்கடலைச் செடிகளை ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவில் வந்து தின்றுவிட்டுப் போய்விடுமாம். இதனை அறியாத விவசாயிகள், தங்கள் நிலக்கடலைப் பயிரை யாரோ பௌர்ணமி இரவில் வந்து நாசம் செய்வதாக வருத்தப்பட்டார்கள். அது யாரென்று அறிய ஒரு பௌர்ணமி இரவில் மறைந்திருந்து காவல் காத்தார்கள். இரவு முழுவதும் கண் விழித்து கவனித்துக்கொண்டிருந்தும் யாரையும் காணாமல் ஏமாந்தார்கள். ஆனால், விடிந்து பார்த்தால் வழக்கம்போல் சில இடங்களில் பயிர்கள் நாசமாகி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

அப்பொழுது, வயதான விவசாயி ஒருவர், ‘‘ஏதோ ஒரு மிருகம் வயலில் சுற்றித்திரிவதுபோல் தெரிந்தது, உற்றுப்பார்த்தேன். வைரம்போல் மின்னும் கண்களுடைய பொன்னிறமான காளை அது. அதைப் பிடிக்கலாமென்று மற்றவர்களை அழைத்து வருவதற்குள் அந்த மலை மேல் ஏறி மாயமாகி விட்டது. எப்படியும் அடுத்த பௌர்ணமியில் பிடித்து விடலாம்’’ என்றார். அதற்குப்பின் கடலைப் பயிர் நாசமாகவில்லையாம். அந்தக்காளை மாட்டையும் யாரும் பார்க்கவில்லை. ஆனால், அருகிலிருந்த மலை மீது ஒரு நந்தியின் பெரிய திருவுருவச்சிலை இருப்பதைக்கண்டார்கள். அதற்கு பூஜை செய்தார்கள். தங்கள் நிலத்தில் பயிரான வேர்க்கடலையைக் கொண்டுபோய் படைத்தார்கள். நாளடைவில் அந்த நந்தியை வழிபட்டே விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். விளைச்சலும் நன்கு கண்டது. விவசாயப் பெருமக்கள் செல்வந்தர்கள் ஆனார்கள்.

ஆரம்ப காலத்தில் சிறியதாகக் காட்சி தந்த நந்தியின் உருவம் நாளடைவில் வளர்ந்துகொண்டே வந்து பெரிய உருவில் காட்சி தந்தது. ‘இப்படியே போனால் மலையைப்போல பெரிதாக வளர்ந்துவிடுமோ’ என்ற அச்சத்தில் நந்தியின் தலை உச்சிப்பகுதியில் திரிசூலம் போல் ஒரு பெரிய ஆணியை அடித்தார்கள். அதற்குப்பின் வளர்ச்சி நின்றுபோனதாம். ஆனால் அந்தத் திரிசூலம் இன்றும் நந்தியின் தலையில் காணப்படுகிறது. அக்காலத்தில் பெங்களூரை ஆட்சிபுரிந்து கொண்டிருந்த ‘கெம்பே கௌடா’ என்ற மன்னர் மலை மீது திறந்த வெளியில் நந்தி இருப்பதை அறிந்து, மாறு வேடத்தில் அங்கு சென்று மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதைக் கேட்டார். அந்த நந்தியைக் கண்டு அதிசயித்தவர் ‘திறந்தவெளியில் இருக்கிறதே’ என்று கவலைப்பட்டார். அன்றிரவு மன்னர் கனவில் தோன்றிய நந்தி தனக்கு ஒரு கோயில் கட்டும்படி கட்டளையிட்டது.

அந்த அருள்வாக்கின்படி மன்னர் நந்திக்கு அழகிய கோயில் ஒன்று கட்டினார். அதுதான் இன்றைய ‘பசவனகுடி நந்தி கோயில்.’சிவபெருமானே நந்தி வடிவமெடுத்து இங்கு வந்தமர்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கடைசித் திங்கட்கிழமையன்று இங்கு திருவிழா நடைபெறும். அப்போது, இக்கோயிலைச்சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த கடலையை நந்திக்கு சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். அன்று ஒவ்வொருவரும் பிரசாதமாக கடலை சாப்பிட வேண்டும் என்பது விதியாகும். இதனால் உடல்நலம் வலிவு பெறும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், புதிதாக காளை பசுக்களை வாங்கும்போதும், பசு சினையாகும்போதும் இங்கு அழைத்து வந்து பூஜை செய்து செல்கிறார்கள்.

இதனால் பசுவும் கன்றும் ஆரோக்கியமாகத் திகழும் என்பதுடன் அதிகமாக பால் கறக்கும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த நந்தி பார்வதி பரமேஸ்வரன் வாசம் செய்யும் கயிலை மலையைப் பார்த்த வண்ணம் வடக்கு திசை நோக்கி அமர்ந்திருப்பது தனிச்சிறப்பாகும். பசவனகுடி நந்தி மலையின் அடிவாரத்தில் மிகப்பெரிய ‘மகா கணபதி கோயில்’ ஒன்று உள்ளது. இந்த விநாயகர் பத்தடி உயரம், பதினைந்து அடி அகலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேலும் இக்கோயிலுக்கு அருகில் ஒரு சிவன் கோயிலும் இருக்கிறது. நந்தியை தரிசிக்க வருபவர்கள் இந்தக் கணபதியையும், சிவனையும் தரிசிப்பது வழக்கம். பசவனகுடி மலைமேல் அமைந்துள்ள நந்தி கோயில் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது. வாகன வசதிகளும் உள்ளன.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com