மகிழ்ச்சியான வாழ்வு தரும் சொர்ணபுரீஸ்வரர்

செம்பனார் கோயில் கடைவீதியில் அழகுற அமைந்துள்ளது, சொர்ணபுரீஸ்வரர் ஆலயம். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம் வரவேற்கிறது. இடதுபுறம் திரும்பி நடந்து எதிரே தென்படும் படிகளைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். மாடக்கோயில் அமைப்பில் அமைந்த ஆலயம் இது. இறைவியாக சுகந்த குந்தாளம்பிகை அருள்கிறாள். மருவார் குழலியம்மை என்பது அன்னையின் இன்னொரு பெயர். மகாமண்டபத்தில் இறைவனின் சந்நதிக்கு முன் நந்தியும் பலி பீடமும் உள்ளன. மகாமண்டபத்திலிருந்து அர்த்த மண்டபத்திற்கு செல்லும் நுழைவாயிலின் இடதுபுறம் சூரிய மகா கணபதி, சூர்யலிங்கம், வலதுபுறம் சந்திரலிங்கம், வள்ளி தெய்வானை, முருகன் திருமேனிகள் உள்ளன. மகாமண்டபத்தின் வடபுறம் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தைக் கடந்தபின் உள்ள அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது. உள்ளே இறைவன் லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

தேவக் கோட்டத்தில் தெற்கே கோஷ்ட கணபதி, மேற்கே தட்சிணாமூர்த்தி, கிழக்கே அர்த்தநாரீஸ்வரர், வடக்கே பிரம்மா, சிவதுர்க்கை அம்மன் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. சண்டீஸ்வரரின் சந்நதி வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. தெற்குப் பிராகாரத்தில் இறைவி அருள்மிகு சுகந்த குந்தாளம்பிகை தனிக்கோயிலில் மேற்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். மேற்கு பிராகாரத்தில் பிரகாச பிள்ளையார், நால்வர், ஸ்ரீநிவாச பெருமாள், காசி விஸ்வநாதர், பாலசுப்ரமணியர், கெஜலட்சுமி, ஜேஷ்டா தேவி, நாகர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. கிழக்குப் பிராகாரத்தில் வீரபத்திரர், நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் இது. இந்த ஆலயத்தின் தலவிருட்சம் இரண்டு. அவை: வில்வம், வன்னி.

தங்க அணிகலன்களை புதிதாக வாங்கிய பின் இங்குள்ள இறைவிக்கு அவற்றை அணிவித்து அழகு பார்த்த பிறகு, தான் அணிந்து கொள்ளும் பழக்கம் இங்குள்ள பெண்களிடையே சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது. இதனால், தங்களுக்கு மேலும் ஆபரணங்கள் சேரும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த ஆலயத்தில் சப்தமாதர்கள் மிகவும் பிரசித்தம். தெற்கு பிராகாரத்தில் அருள்பாலிக்கும் இந்த சப்தமாதர்களிடம் இங்கு சுற்று வட்டாரப் பெண்களுக்குப் பக்தி அதிகம். ஆம். திருமணத்துக்காகக் காத்திருக்கும் பெண்கள் இந்த சப்த மாதர்களைப் பூஜித்து எட்டு ரவிக்கைத் துண்டுகளை வைத்துப் படைத்து அதை ஏழைப் பெண்களுக்கு தானமாகக் கொடுக்கின்றனர். அவர்களுக்கு விரைவாக திருமணம் நடப்பது கண்கூடாகக் காணும் உண்மை என்கின்றனர் பக்தர்கள். மயிலாடுதுறை ஆக்கூர் பேருந்து தடத்தில் மயிலாடு துறையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது செம்பனார்கோவில் என்ற இந்த தலம்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com