மங்கல வாழ்வு தரும் மார்கழி

மார்கசீர்ஷம் – வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது அல்லது உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி மாதம் இருக்கிறதே என்பதையே ‘மார்கசீர்ஷம்’ என்ற சொல் நமக்கு உணர்த்துகிறது. உண்மைப் பொருளாகும். சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதம் என்பதால், ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை ‘தனுர் மாதம்’ என்று குறிப்பிடுகிறது.

இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும். மார்கழி மாதம் முழுவதும் சகல சைவ, வைணவ ஆலயங்களில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே வழிபாடுகள் நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாராயணம் செய்யப்படும். பக்தர்கள் பலரும் அதிகாலையில் எழுந்து நீராடி, வாசல்களில் அழகிய வண்ணக் கோலங்கள் இட்டு, ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்வார்கள்.

ஒரு நாளுக்கு 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களுக்கான இந்த கணக்கின்படி, ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் தேவர்களுக்கு பகல் நேரம் ஆகும். ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் இரவு நேரம் ஆகும். இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது மார்கழி மாதம் என்று சொல்லப்படுகிறது.

நமக்கு மார்கழி மாதம் என்பது, தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிப்பதாகும். சூரிய உதயத்துக்கு முன்பு வரும் இது ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று அழைக்கப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில் தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் வருகின்றன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக ஜீவராசிகளை காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான் என்கிறது புராணங்கள்.

இந்திரனால் பெருமழை வெள்ளமாக உருவாக்கப்பட்டு, கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் மார்கழி மாதமே. எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருப்பாவையால் திருமாலின் திருவடியைத் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான்.

தேவர்களின் அதிகாலைப் பொழுதான இந்த நேரத்தில்தான், சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் புரிகின்றார். சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக, மிக விசேஷமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

நோன்புக்கு புலனடக்கம் இன்றி யமையாதது. நமது நாட்டில் மழை, குளிர் காலங்களில் தான் பெரும்பாலும் விரத நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவர்களின் பகல் காலமான தை முதல் ஆனி வரை சுப காரியங்கள், அதாவது விவாகப் பேச்சுகள், திருமணங்கள் நடத்துகின்றோம்.

தேவர்களின் இரவு காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் விரதம், தியானம் முதலியவற்றைச் செய்கிறோம். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிக்க மார்கழியை போற்றுவதே நாம் இறைவனை அடைவதற்கான சிறந்த வழி.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com