மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது

மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை திருவிழாவுக்கான முன்னோட்டமாக மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இதில் கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். வாஸ்து சாந்தி பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடந்தன.

இந்த நிலையில் இன்று உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சரியாக இன்று காலை 10.10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது.

இதையொட்டி மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதையடுத்து வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலில் உள்ள குலாளர் மண்டகப் படியில் சுவாமி-அம்மன் எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

கொடியேற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தக்கார் கருமுத்துகண்ணன், கோவில் நிர்வாக அதிகாரி நடராஜன், மதுரை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் புறப்படும் சுவாமி-அம்மன் ஆகியோர் 4 மாசிவீதிகளில் எழுந்தருளி உலா வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடர்பறி லீலை வருகிற 12-ந்தேதியும், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை 13-ந்தேதியும், பட்டாபிஷேகம் 15-ந்தேதியும், திக்கு விஜயம் 16-ந்தேதியும், 17-ந் தேதி திருக்கல்யாண வைபோகமும் அன்று இரவு திருக்கல்யாண கோலத்தில் அம்மன் பூப்பல்லக்கில் திருவீதிஉலா வருதலும் நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக தேரோட்டம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் பிரமாண்ட தேர்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் பவனி நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக் கானோர் 2 தேர்களையும் வடம் பிடித்து இழுக்கிறார்கள். அப்போது 4 மாசி வீதிகளிலும் லட்சக்கணக் கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

வருகிற 19-ந்தேதி தேவேந்திர பூஜையுடன் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

சித்திரை திருவிழா தொடங்குவதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் 4 கோபுர வாயில்கள் மற்றும் சித்திரை வீதிகளிலும் பக்தர்கள் வசதிக்காக தகர கூரையுடன் கூடிய நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com