மரண பயத்தை போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோரிடமும் உண்டு. எழுந்து நடமாட முடியாத முதியவர்கள் கூட இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் தீர வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள். அதே சமயம் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதில் கவலைகொள்வார்கள்.
ஒருவருக்கு மரண பயம் வந்து விட்டால், யாராலும் அவரைத் தேற்ற முடியாது. மரணத்தை விடவும் கொடியது அதன் மீதான பயம். அத்தகைய மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம்தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.

சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில், இங்கு எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார், ஈசன். எனவே இங்கு காலசம்ஹார மூர்த்தியாக அவர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூல வருக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர். அம்பிகையின் திருநாமம், அபிராமி. இத்தல அம்மனுக்கு குங்குமார்ச்சனை செய்து, தினமும் அபிராமி அந்தாதி பாராயணம் செய்துவந்தால் அடியவர் களின் இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி வீசும் என்பது நம்பிக்கை.

பாற்கடலில் தோன்றிய அமிர்தம் இருந்த குடம் (கடம்), இங்கு சிவலிங்கமாக இருப்பதால் ஈசனுக்கு ‘அமிர்தகடேஸ்வரர்’ என்று பெயர் வந்தது. பிரம்மதேவர் இங்குள்ள ஈசனை வழிபட்டு ஞான உபதேசம் பெற்றுள்ளார். அமிர்தகடேஸ்வரர் மேற்கு பார்த்த வண்ணமும், அபிராமி அம்மன் மூலவரை பார்த்தபடி கிழக்கு நோக்கியும் வீற்றிருப்பது சிறப்புக்குரியது.

மிருகண்டூயர்-விருத்தை தம்பதிகளின் புதல்வன் மிருகண்டு மகரிஷி. இவருக்கும் முற்கல முனிவரின் மகளான மருத்துவதிக்கும் திருமணமானது. ஆனால் அவர்களுக்கு நெடுநாட்களாக புத்திரபாக்கியம் வாய்க்கவில்லை. திருக்கடையூர் அருகில் உள்ள மணல்மேடு என்னும் இடத்தில் தவச்சாலை அமைத்துத் தங்கியிருந்த இந்த தம்பதியர், தினமும் திருக்கடையூர் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தனர்.

ஒருநாள் மிருகண்டு மகரிஷியின் கனவில் தோன்றிய ஈசன், “அன்பனே! உனக்கு 16 வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும் நிறைந்த அறிவோடும், உயர்ந்த ஒழுக்கத்தோடும் வாழும் குழந்தை வேண்டுமா? அல்லது மந்த அறிவோடும், தீய குணங்களோடும் 100 வயது வரை வாழும் பிள்ளை வேண்டுமா?” என்று கேட்டார்.

மிருகண்டு முனிவர், “குறைவான காலம் வாழ்ந்தாலும், நல்ல அறிவோடு விளங்கும் மகனே வேண்டும்” என்று வேண்டினார். ஈசனும் அப்படியே வரம் அளித்து மறைந்தார்.

சில காலத்திலேயே மிருகண்டு முனிவருக்கும், மருத்துவதிக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மார்கண்டேயன் என்று பெயரிட்டனர். சிறு வயதிலேயே சிறந்த அறிவோடும், சிவ பக்தியோடும் அந்த பிள்ளை விளங்கியது.

பல ஆண்டுகள் கடந்தது. மார்கண்டேயனுக்கு பதினைந்து வயது நிறைவுற்று, பதினாறாம் வயது பிறந்தது. தங்கள் மகனின் ஆயுட்காலம் முடியப்போவதை உணர்ந்த மிருகண்டுவும், மருத்துவதியும் மனம் கலங்கினர். தன் பெற்றோரின் முக வாட்டத்தை பார்த்தே, தனக்கான பிரச்சினையை அறிந்து கொண்டான், அறிவில் சிறந்த மார்கண்டேயன்.

இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்ததும், சிவத்தல யாத்திரைச் செல்ல மார்கண்டேயன் விரும்பினான். அதன்படி காசியில் இருந்து தனது யாத்திரையைத் தொடர்ந்தான். ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று, இறைவனை தரிசித்து விட்டு, இறுதியாக திருக்கடையூர் வந்தான். அன்றோடு அவனுக்கு பதினாறு வயது நிறைவடைகிறது. சிவனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தான், மார்கண்டேயன்.

அவனது உயிரைப் பறிக்கப் பாசக்கயிற்றுடன் அங்கு வந்தான், எமதர்மன். அதைக் கண்டு பயந்து போன மார்கண்டேயன், மூலவரான அமிர்தகடேஸ்வரரை இறுக தழுவிக் கொண்டான். அப்போது எமதர்மன் வீசியப் பாசக்கயிறு மார்கண்டேயன் மீதும், அவன் இறுக தழுவி இருந்த சிவலிங்கம் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், சிவலிங்கத்தை பிளந்து கொண்டு வெளிப்பட்டு, எமனை தன் காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார். இத்தல அமிர்தகடேஸ்வரர் காலனை சம்ஹாரம் செய்ததால் ‘கால சம்ஹார மூர்த்தி’ ஆனார்.

பின்பு அருகிலிருந்த மார்கண்டேயரை அழைத்த ஈசன், “குழந்தாய்! நீ என்றும் பதினாறு வயதுடன், சிரஞ்சீவியாய் இருப்பாய்’ என்று அருளி மறைந்தார்.

காலன் என்னும் எமதர்மன் சம்ஹாரம் செய்யப்பட்டதால், பூமியில் இறப்பு என்பதே இல்லாமல் போனது. பூமியின் பாரத்தை பூமாதேவியால் தாங்கமுடியவில்லை. அவள் தன் வேதனையைத் தீர்க்கும்படி சிவபெருமானை பிரார்த்தித்தாள். பூமாதேவிக்கு இரங்கிய ஈசன், எம தர்மனை உயிர்ப்பித்தார். எமனுக்கு மீண்டும் உயிர் அளித்ததும் இந்தத் தலத்தில் தான் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

காலனை இங்கு ஈசன் சம்ஹாரம் செய்ததால், தீராத நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நோய் குணமாகி நீண்ட ஆயுள் பெறுவார்கள். குறைவான ஆயுள் கொண்டவர்கள், ஆயுள் கண்டம் உள்ளவர்கள், இங்கு வந்து முறைப்படி தீபம் ஏற்றி வழிபட்டால், அதில் இருந்து விமோசனம் பெறலாம்.

மிருத்யுஞ்ச ஹோமம், ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, உக்ரரத சாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், சஹஸ்ர சந்திர தரிசன சாந்தி முதலியன இங்கு நாள்தோறும் நடைபெறுகின்றன. மேற்கண்ட ஹோமங்களை வேறு தலங்களில் செய்ய நேர்ந்தாலும் திருக்கடையூர் ஈசனை நினைத்தே செய்ய வேண்டும் என்பது நியதியாக உள்ளது.

சித்திரை மாதம் வரும் மகம் நட்சத்திர நாளின் பின்னிரவில் ‘எம சம்ஹார விழா’, இந்த ஆலயத்தில் நடை பெறுகிறது. அன்று இரவு பஞ்ச மூர்த்திகளும் இத்தல நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு காலசம்ஹார மூர்த்தி வீர நடனமிடுவார். பின்பு நூற்றுக்கால் மண்டபம் அருகில் மார்கண்டேயன் பல்லக்கை, சிறுவர்கள் சுமந்து வருவர். காலசம்ஹார மூர்த்தி பாலாம்பிகையுடன் அப்போது எழுந்தருளுவார். திடீரென அங்கு மிகப்பெரிய வடிவிலான எருமை வாகனத்தில் எமதர்மன் கையில் பாசக்கயிற்றுடன் வந்திடுவார். அவர் மார்கண்டேயரை துரத்துவார்.

அப்போது மார்கண்டேயர் ஓடிவந்து காலசம்ஹார மூர்த்தியை சுற்றிவந்து சரணடைவார். உடனே காலசம்ஹார மூர்த்தி சூலத்தால் எமனை சம்ஹாரம் செய்திடுவார். இவை அனைத்தும் இந்த ஐதீக விழாவில் நடத்திக் காண்பிக்கப்படுகிறது. பின்னர் காலசம்ஹார மூர்த்தி நள்ளிரவில் திருவீதி உலா வருவார்.

திருக்கடையூர் திருத்தலம் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com