மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

இத்தனை சிறப்புவாய்ந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த 8-ந்தேதி விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது.

அதை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் கன்யா லக்கனத்தில் தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் இரவு சுவாமி-அம்பாள் கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) இரவு சுவாமி கற்பகத்தரு வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும், நாளை(வெள்ளிக்கிழமை) இரவு சுவாமி பூதம் வாகனத்திலும், அம்பாள் கமலம் வாகனத்திலும் புறப்பாடு நடைபெறும்.

வருகிற 13-ந்தேதி சுவாமி கைலாசபர்வதம் வாகனத்திலும், அம்பாள் அன்னவாகனத்திலும் புறப்பாடு செய்யப்படுகிறது. வருகிற 14-ந்தேதி காலை 10 மணிக்கு செட்டிபெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று மாலை அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷபவாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வருகிற 15-ந்தேதி மதியம் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணமும், அன்று இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். 16-ந்தேதி சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் யாளி வாகனத்திலும், 17-ந்தேதி சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் புறப்பாடாகி, வேடுபறி காணும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வருகிற 18-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 4.55 மணிக்கு மேல் 5.53 மணிக்குள் திருதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். தேர்கீழ ஆண்டாள் வீதி, சின்ன கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு, நந்தி கோவில் தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை அடையும்.

வருகிற 19-ந்தேதி காலை நடராஜர் தரிசனமும், பிற்பகலில் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், அன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் காட்சியளித்தல் நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. 20-ந்தேதி காலை திருக்குறிப்பு தொண்டர் உள் புறப்பாடும், அன்று இரவு சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும், புறப்பாடு செய்யப்படுகிறது.

வருகிற 21-ந்தேதி தாயுமான அடிகள் உற்சவம் மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனையும், இரவு 7 மணிக்கு மேல் திருமுறை பாராயணத்துடன் சுவாமி, அம்பாள் யாதாஸ்தானம் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெறகிறது. வருகிற 22-ந்தேதி இரவு பிச்சாடணார் வீதிஉலாவும், 23-ந்தேதி இரவு சண்டிகேஸ்வரர் வீதி உலாவும் நடைபெறுகிறது. 24-ந்தேதி பிரயாசித்தல் அபிஷேகம் ஆகியவற்றுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com