மாறுபட்ட வகையில் கொண்டாடப்படும் தீபாவளி

தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுப்பட்டதாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என பிரத்யேகமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன.

மாறுபட்ட வகையில் கொண்டாடப்படும் தீபாவளி
தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுப்பட்டதாக கொண்டாடப்படுகிறது. பிராந்திய, இன, மொழி வேறுபாடுகள் கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என பிரத்யேகமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன. அதுபோல் இந்து மதத்தினர் தவிர பிற மதத்தினரும் தீபாவளியை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். சீக்கிய மதம், சமணமதம், புத்தமதம் போன்றவாறு பிற மதங்களில் தீபாவளி என்பது வேறு சில காரணங்களுக்காகவும், மாறுபட்ட கொண்டாட்ட நிகழ்வுகளுடன் கலந்து உள்ளது. அவர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை பற்றி அறிந்திடுவோம்.

சமண மதத்தின் தீபாவளி

சமண மதத்தினரின் முக்கியமான பண்டிகை தீபாவளி. மகாவீரர் நிர்வாணம் அடைந்தது அல்லது மகாவீரர் மோட்சம் அடைந்ததை குறிக்கும் வகையில் சமண தீபாவளி கொண்டாடப்படுகிறது. பீகாரின் பாவபுரியல் மகாவீரர் மோட்சத்தை அடைய முற்பட்டார். மகாவீரர் அமாவாசையன்று பரி நிர்வாணம் அடைய முற்பட்டார். அந்த அமாவாசை இருளில் மகாவீரரின் அறிவு ஒளி பிரகாசம் அடைந்தது. “தீபாளிகா” என்றவாறு கொண்டாடப்பட்ட அதன் அர்த்தம் உடலை விட்டு ஒளி வெளியேறுதல் என்பதாம். தீபாளிகா என்பதே தீபாவளி என மாறிவிட்டது. ஜெயின் சமூகத்தினர் ஜெயின் புத்தாண்டு எனப்படும் பிரதிபதா என்பதும் தீபாவளியன்று வணிக நிறுவனங்களில் புதிய கணக்குகளை தொடங்குகின்றனர்.

தீபாவளியன்று ஜெயின் சமூகத்தினர் கொண்டாட்டம் என்பது சற்று மாறுபட்டவாறு உள்ளன. ஆம் ஜெயின் சமூகத்தினர் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கமாட்டார்கள் அகிம்சை, அமைதி என்பதை வலியுறுத்தும் சமணத்தில் சத்தம் மிகுந்த பட்டாசு வெடிப்பு நிகழாது. அனைத்து ஜெயின் கோயில்களிலும் மகாவீரரை வணங்கி வழிபட்டபிறகு “நிர்வாண் லட்டு” என்பது வழங்கப்படும். மேலும் ஜெயின் ஆலயம், அலுவலகங்கள், கடைகளில் மின் விளக்குகள் எரிய விடப்படும். சுவதம்பர் ஜெயின் பிரிவினர் இரண்டு நாட்கள் விரதமிருந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்வர்.

சீக்கியர்களின் தீபாவளி

சீக்கியர்களின் தீபாவளி கொண்டாட்டம் என்பது சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான, குரு ஹர்கோயிந்த் மற்றும் இதர 52 நபர்களையும் விடுதலை செய்ததை கொண்டாடும் வகையில் அமைகிறது. “பந்த் சோர் தீபாவளி” என்ற பெயருடன் கொண்டாடப்படும். இந்த தீபாவளியின்போது அமிர்தசரஸ்-ல் உள்ள தங்க கோயில் மற்றும் அனைத்து குருத்வாராக்களிலும் வண்ண விளக்குகள் ஒளிர விடப்படும். குருத்வாராக்களில் தியானம், பிரார்த்தனை போன்றவைகளுடன் இனிப்பு மற்றும் உணவு பரிமாற்றம், உறவினர்களுக்கு பரிசளிப்பது போன்றவாறு தீபாவளி கொண்டாடப்படுகிறது. பொது இடங்கள் மற்றும் குருத்வாராக்களில் கண்கவர் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படும்.

புத்த மதத்தினரின் தீபாவளி

புத்த மதத்தினரும் தீபாவளியை கொண்டாடி மகிழ்வர். அதாவது மாவீரர் அசோகர் புத்த மதத்திற்கு மாறிய நாளே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இவர்களின் தீபாவளிக்கு “அசோக் விஜயதசமி” என்று பெயர். தீபாவளியன்று மந்திரங்கள் மற்றும் வேதம் ஓதுதல் போன்றவை அசோகரை நினைவுபடுத்தும் வகையில் ஓதப்படுகிறது. நேவார் புத்தமதத்தினர் லட்சுமி தேவியை வணங்கும் வகையில் தீபாவளி கொண்டாடுகின்றனர்.

புராணங்களில் தீபாவளி

அறுவடை திருநாள் என்றவாறே புராணகாலங்களில் தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. அதாவது பத்மபுராணம் மற்றும் ஸ்கந்த புராணம் இரண்டுமே சூரியனை நினைவுப்படுத்தும் வகையில் விளக்குகளை ஒளிர செய்து வணங்குவது என்பதே. 7-ம் நூற்றாண்டில் நாகநந்தா என்ற நாடகத்தில் தீப பிராபதி உத்சவா என்றபடி தீபாவளி பற்றி குறிப்பு உள்ளது. இதனை ஹர்ஷ மகாராஜா குறிப்பிட்டுள்ளார். 9-ம் நூற்றாண்டில் தீபமாலிகா என்றபடி தீபாவளி கொண்டாடபட்டதாக காவிய மிம்சா-வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த பெர்ஷிய நாட்டு அல்புருனி எழுதிய குறிப்பில் கார்த்திகை மாத பெளர்ணமி தினத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது என குறிப்பிடுகிறார். முகலாயர்களின் காலகட்டத்திலும் தீபாவளி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. அக்பர் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாக குறிப்புகள் உள்ளன. கல்வெட்டுகள் மற்றும் செம்பு பட்டயங்கள் போன்றவைகளிலும் தீபாவளி திருநாள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

தீபாவளி கொண்டாட்டத்தில் அமைதியான தியானம், பிரார்த்தனை போன்றவைகளுடன், பட்டாசு போன்ற அதிர் வெடி கொண்டாட்ட நிகழ்வுகளும் கலந்தே நடைபெற்று வருகின்றன.

அயோத்தி தீபாவளி

ராவண சம்ஹாரம் முடிந்து, ராமன் தன் மனைவி சீதாதேவியுடன் அயோத்தி திரும்பினார். அப்போது நேரம் அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ராமரை தரிசிக்க அயோத்தி நகரவாசிகள், அந்த இரவு நேரத்தில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தார்கள். சீதை, ராமர் முதலானவர்கள் அரண்மனைக்குள் நுழைந்தபோது, கவுசல்யாதேவி, ‘சீதா! விளக்கேற்ற வந்த திருமகளே! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று. அந்தகாரம் விலகி, அருள் வெளிச்சம் பரவட்டும்’ என்றார். தீபங்களை ஏற்றி வரிசையாக வைத்து வழிபாடு செய்தாள் சீதை, அதுவே தீபாவளியானது.

மகாபலி தீபாவளி

பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. மகாபலி முடிசூடிக் கொண்ட நாளே தீபாவளி என்றும் கூறப்படுகிறது. அன்று ஏற்றப்படும் தீபம், ‘எமதீபம்’ என்று அழைக்கப்படும். வாமன அவதாரம் எடுத்து நாராயணர், மகாபலி சக்கரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு ஞான திருவடி சூட்டிய நாளே தீபாவளியாகும்.

மகாலட்சுமியும், தீபாவளியும்

பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி தன் மனம் கவர்ந்த மகாவிஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள். திருமார்பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமாளுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம் பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள், எம்பெருமானை மணந்த நாள் ‘தீபாவளி’ திருநாள்.

பார்வதிதேவி விரதபலன்

கவுதம முனிவர் கூறியபடி பார்வதி தேவி, கேதார கவுரி விரதம் இருந்தார். தீபாவளி நாளில் உமாதேவிக்கு காட்சி கொடுத்த பரமேஸ்வரன் பார்வதி தேவிக்கு சரிபாதி உடம்பைக் கொடுத்தார் என்பது புராண வரலாறு.

மராட்டிய தீபாவளி

மராட்டிய மன்னனான வீரச்செயல்களில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி, தன்னுடைய விரோதிகளின் கோட்டையை தாக்கி கைப்பற்றிய நாள் தீபாவளி. அதன் நினைவாக பொதுமக்கள் தங்களின் வீட்டு வாயில்களில் மண்ணாலான ஒரு சிறிய கோட்டையை கட்டுகிறார்கள். இந்த கோட்டை கட்டும் நிகழ்ச்சியில் சிறார்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொள்வர். தீபாவளி தினத்தன்று மும்பையில் மண் கோட்டை கட்டப்படுவதை இன்றும் காணலாம்.

அசோக தீபாவளி

சாம்ராட் அசோகர் தன்னுடைய திக் விஜய யாத்திரையை நிறைவு செய்து விட்டு, தனது நாட்டிற்கு திரும்பிய நாள் தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டது. அந்த நாளே தீபாவளி.

ஜைனர் தீபாவளி

ஜைனர்களின் குருவான மகாவீரர் முக்தி அடைந்த நாளே தீபாவளி. அந்த ஞான ஒளி மறைந்த தினத்தில் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடுகின்றனர்.

ஜப்பானில் தீபாவளி

முன்னோர்கள் அனைவரும் தம்தம் சந்ததியினருக்கு ஆசி வழங்கும் தினமாக இந்த தீபாவளி பார்க்கப்படுகிறது. முன்னோர்களுக்காக விளக்குகளை ஏற்றி வைத்து, அவர்களை பூமிக்கு வரவேற்கும் வழிபாடாக இது கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் இதுபோன்று தீபாவளி கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. ‘டோரோனாகாஷி’ என்பது தான் ஜப்பானிய தீபாவளிக்கு பெயர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com