மீனாட்சி அம்மனுக்கு கிரீடம் சூடி பட்டாபிஷேகம்

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக ஐதீகம்.

அதன்படி மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை நினைவுபடுத்தும் வகையில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் நடந்தது. இந்த விழாவையொட்டி இரவு 8 மணி அளவில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ‘ராயர் கிரீடம்’ எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரவு 8.10 மணி அளவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டி, நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. மீன் கொடியும் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்பட்டது. அப்போது பச்சை நிற பட்டுப்புடவை அணிந்திருந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும், மகிழம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டன. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை கொடுத்தார்.

பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். இதைத்தொடர்ந்து மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குகிறது.

சிவபெருமானை மீனாட்சி அம்மன் போருக்கு அழைத்த சம்பவத்தை நினைவூட்டும் திக்கு விஜயம் இன்று(செவ்வாய்க்கிழமை) மாசி வீதியில் நடக்கிறது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலில் 4 கோபுர வாசல்களிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. இதுதவிர திருக்கல்யாண மேடை ரூ.10 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. 50, 100 ரூபாய் டிக்கெட் மற்றும் புதிய உபயதாரர்கள் என 6,400 பேர் வடக்கு கோபுரம் வழியாகவும், 3,500 பேர் முன்னுரிமை அடிப்படையில் தெற்குகோபுரம் வழியாகவும், மிக முக்கிய பிரமுகர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாணத்தை காண அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் 11 இடங்களில் திருக்கல்யாண மொய் பணம் கோவில் சார்பில் வசூலிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அவ்வப்போது பிஸ்கட் மற்றும் சோர்வு நீங்க நீர், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com