மூன்று தோஷங்களை போக்கும் ராமேஸ்வரம்

Future News Sivan
 ராவணனிடம் குணம் தான் கெட்டுப் போய் கீழானதாக இருந்தது. ஆனால் அவனது பலமும், பக்தியும் அனைவரையும் விட உயர்வானதாகவே அமைந்திருந்தது. அந்த அதீத பக்தி அவனிடம் இருந்த காரணத்தினால் தான், ராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டன. அவையே பிரம்மஹத்தி தோஷம், வீரஹத்தி தோஷம், சாயாஹத்தி தோஷம் என்பன.

ராவணன் அசுரனாக வாழ்ந்தாலும், பிராமண குலத்தில் தோன்றியவன். ஆகையால் தான் அவனைக் கொன்ற ராமருக்கு, ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்துக்கொண்டது. மேலும் ராவணன் மிகச் சிறந்த மாவீரராக அறியப்பட்டவன். கார்த்தவீர்யார்ஜூனன், வாலி ஆகிய இருவரையும் தவிர, தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன்.

ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு, ‘வீரஹத்தி தோஷம்’ உண்டானது. மூன்றாவதாக, ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ராமரை ‘சாயாஹத்தி தோஷம்’ பற்றிக்கொண்டது.

சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமபிரான். அதே போல் வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திருமறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு `பிரம்மஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. இந்த தோஷத்தை அவர் போக்கிக்கொண்ட இடம்தான் ராமேஸ்வரம்.

மதுரையில் இருந்து 152 கிலோமீட்டர் தூரத்தில் ராமேஸ்வரம் அமைந்து உள்ளது.