ராமன் வழிபட்ட சாஸ்தாம்கோட்டை ஐயப்பன் Sasthamcotta Sree Dharma Sastha Temple

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இணையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
Sasthamcotta Sree Dharma Sastha Temple

கோவில் தோற்றம்

ராவணனைப் போரில் கொன்று, சீதையை மீட்டுத் திரும்பிய ராமர், தனக்குப் போரில் கிடைத்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழிபட்ட தருமசாஸ்தா எனும் ஐயப்பன் கோவில், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சாஸ்தாம்கோட்டை எனுமிடத்தில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் தருமசாஸ்தாவான ஐயப்பன், மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகன் ஆகியோருடன் இணைந்து கோவில் கொண்டிருக்கிறார்.

தல வரலாறு

வானரப்படைகள் உதவியுடன் கடல் கடந்து சென்ற ராமர், ராவணனுடன் போரிட்டு அவனைக் கொன்று சீதையை மீட்டார். ராவணனின் தம்பி விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார். அதன் பிறகு, மனைவி சீதா, தம்பி லட்சுமணன் மற்றும் வானரப்படையினரை அழைத்துக் கொண்டு ராமர் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நீண்ட தூரம் வந்திருந்த அவர்கள், பெரிய ஏரி ஒன்றின் அருகே தங்கி ஓய்வெடுக்கத் தொடங்கினர். அவ்விடத்தில் சுயம்புவாகத் தோன்றியிருந்த தர்மசாஸ்தாவை, தனக்குப் போரில் கிடைத்த வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக ராமர் வழிபட்டார். பின்னர் அவர், அங்கிருந்த ஏரிக்கரையில் முன்னோர் வழிபாடு (பித்ரு தர்ப்பணம்) செய்தார்.

அங்கிருந்து அயோத்திக்குக் கிளம்புவதற்கு முன்பாகத் தன்னுடன் வந்த வானரப்படைகளில் நீலன் எனும் வானரத்தை அழைத்து, அவ்விடத்தில் தங்கித் தர்மசாஸ்தா வழிபாட்டைத் தொடர்ந்து செய்யும்படி கூறியதுடன், நீலனுக்குத் துணையாகச் சில வானரங்களையும் அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். நீலன் மற்றும் அதனுடனிருந்த வானரங்கள் சாஸ்தா வழிபாட்டிற்குத் தேவையான பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வந்தன என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் கட்டுமான வரலாறு

பந்தள நாட்டு இளவரசர்களில் ஒருவர், அதிக வசதிகள் கொண்ட காயங்குளம் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவர், பந்தளத்தை விட்டுக் காயங்குளத்திற்குச் செல்ல நேரிட்டது. இதனால் மாதந்தோறும் வழிபட்டு வந்த சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியாத நிலை இளவரசருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அரச குடும்பத்தில் ஐயப்பன் அதிருப்திக்கான அறிகுறிகளாகச் சில நிகழ்வுகள் நடைபெற்றன.

தன் தவறை உணர்ந்த இளவரசர், சபரிமலைக்குச் சென்று, தனது தவறுகளை மன்னிக்க வேண்டியும், தான் சபரிமலைக்கு மாதந்தோறும் வந்து வழிபடுவதில் இருக்கும் சில சிக்கல்களைத் தீர்க்க வேண்டியும் ஐயப்பனை வழிபட்டு வந்தார். அதில் இருந்து பன்னிரண்டாம் நாளில், அவரது கனவில் தோன்றிய ஐயப்பன், இனி சபரிமலைக்கு வந்து வழிபடுவதற்குப் பதிலாக சாஸ்தாம்கோட்டை எனுமிடத்திற்கு வந்து தன்னை வழிபடும்படி சொன்னார். அந்த இடத்தைக் காயங்குளம் அரண்மனையில் நடைபெறவிருக்கும் வில்வித்தைப் போட்டிக்கு வரும் இளைஞர் ஒருவர் உனக்கு அடையாளம் காட்டுவார் என்றும் சொன்னார்.

காயங்குளத்தில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்டவர்களில், இளவரசரும், இளைஞர் ஒருவரும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி இருந்தனர். போட்டிக்கான நடுவர்கள், “இருவரும் கிழக்கு திசையில் அம்பை எய்திட வேண்டும். அதிகத் தூரம் அம்பு எய்தவர் போட்டியில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்” என்று அறிவித்தனர்.

அதன்படி இளவரசரும், இளைஞரும் கிழக்குத் திசையில் அம்பைச் செலுத்தினர். இருவரது அம்புகளில் அதிக தூரம் சென்ற அம்பைத் தேடிச் சென்றவர்கள், அழகிய ஏரிக்கரை ஒன்றை அடைந்தனர். அந்த ஏரியின் நடுவில் அமைந்திருந்த நிலப்பரப்பில் இளைஞர் செலுத்திய அம்பு கண்டறியப்பட்டது.

அம்பு இருந்த இடத்தின் அருகில் மேடைப்பகுதியில் சுயம்புவாக இருந்த சிலையை, ஒரு குரங்கு வழிபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அப்போது அவர்களுடன் இருந்த இளைஞர் மறைந்து போனார். இளவரசருக்குச் சபரிமலை ஐயப்பன் கனவில் சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த இடத்தில் தற்போதிருக்கும் கோவிலை இளவரசன் கட்டியதாக கோவில் கட்டப்பட்ட வரலாறு சொல்லப்படுகிறது.

மனைவி- மகனுடன் வீற்றிருக்கும் ஐயப்பன்

கோவில் அமைப்பு

கேரளக் கட்டுமானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவிலில், தர்மசாஸ்தாவான ஐயப்பன், மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகனுடன் கோவில் கொண்டிருக்கிறார். மேலும் கணபதி, சிவபெருமான், நாகயட்சி, நாகராஜா, யட்சி, யோகீஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் சன்னிதிகள் இருக்கின்றன. ஆலய வளாகத்திலும், சுற்றுப்பகுதிகளிலும் குரங்குகள் அதிக அளவில் உலாவிக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் ராமர், சாஸ்தா வழிபாட்டுக்காக விட்டுச் சென்ற நீலன் மரபு வழியிலான குரங்குகள் எனும் தொன்ம நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது.

இக்கோவிலில் திருவோணம், நவராத்திரி, மண்டல பூஜை நாட்கள், மகர சம்கிரபூஜை, சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மாசி மாதம் பத்து நாட்கள் ஆண்டுத் திருவிழா நடக்கிறது. வைகாசி மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில், ஆலயத்தில் சிவபெருமான் சிலை நிறுவப்பட்ட நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இணையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம்,
கொல்லம் மாவட்டத்தில் சாஸ்தாம்கோட்டை
எனுமிடத்தில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.

கொல்லம் நகரிலிருந்து 29 கிலோமீட்டர்,
அடூர் நகரில் இருந்து 11 கிலோமீட்டர்,
கருநாகப்பள்ளி என்னும் இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. மேற்காணும் மூன்று ஊர்களில் இருந்தும் கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com