வரன் கிடைக்க வரம் தரும் கல்யாண விரதம்

“வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்” என்பது ஒரு பழமொழி. அதாவது வீடு கட்டுவதும் கடினம். கல்யாணம் பண்ணுவதும் கடினம். பெரும் முயற்சி எடுத்துத் தான் இரண்டையும் முடிக்க வேண்டும் என்று கருதியே, முன்னோர்கள் இந்த முத்தான பழமொழியைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

கல்யாணம் சீரும், சிறப்புமாக நடைபெற வேண்டுமானால், குருவின் அருள் தேவை. குரு பகவான் பச்சைக்கொடி காட்டினால் தான் காலா காலத்தில் கல்யாணம் நடைபெறும். புத்திரப் பேறும் வாய்க்கும். குருவின் மூர்த்தமாக செந்தூரில் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள் வழங்குவதால் தான், திருச்செந்தூர் குரு பீடமாக விளங்கு கிறது.

அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு 6 முகமும், 12 கரங்களும் இருப்பதால், தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக அவர் விளங்குகிறார். பக்தர்கள் கூப்பிட்டதும் பறந்து வந்து வரம் தர மயிலும் வைத்திருக்கிறார். அவரை பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வரமும் கிடைக்கும், நல்ல வரனும் அமையும். எனவே இந்த விரதத்தைக் ‘கல்யாண விரதம்’ என்றும் கூடச் சொல்லலாம்.

21.3.2019 (வியாழக்கிழமை) அன்று பங்குனி உத்திரத் திருவிழா வருகிறது. அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து மாங்கனியை நைவேத்தியமாக படைத்து, மால் மருகனை வழிபட்டால் வாழ்க்கைத் துணை அமைய வழி பிறக்கும். அதுமட்டுமல்ல, வந்த வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை மாற்றி இனிமையாக்கும்.

அன்றைய தினம் இல்லத்து பூஜை அறையில் வள்ளி- தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை நைவேத்தியமும் படைத்து, கவச பாராயணங்களை படிப்பது நல்லது.

குத்து விளக்கின் கீழே இடும் கோலம், பின்னல் கோலமாக இல்லாமல், நடு வீட்டுக் கோலம் என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண சதுரங்கள் அமைந்த கோலங்களாக போட வேண்டும். கோலத்தில் புள்ளி அதிகம் இருந்தால் தான் ‘புள்ளி’ எனப்படும் ‘வாரிசு’ பெருகும் என்பார்கள்.

பல தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன. மன்மதன் உயிர்பெற்ற நாளும், பங்குனி உத்திரத் திருநாள் தான். மக்களைக் காக்கும் சிவபெருமான், உமையவளை மணம் புரிந்த நாளும் உத்திரம் என்று சொல்லப்படுகிறது.

எனவே இந்த இனிய நாளில் விரதம் இருந்து கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம் நைவேத்தியம் வைத்து கவசம் பாடி வழிபட்டால் கல்யாண மாலை வரும் வாய்ப்புக் கிட்டும்.

மாங்கனி கிடைத்தால் மாங்கனி, இல்லையேல் தேன்கதலி வைத்து, அதை நாமே சாப்பிட வேண்டும். பிறகு முருகப்பெருமான் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும். விவகாரமான பிரச்சினைகள் விலகவும், விவாகம் முடியவும் முருகன் சன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்வது சிறப்பாக வாழ்க்கையை அமைத்துத் தரும்.

வள்ளி மணவாளனை பங்குனி உத்திரத் திருநாளில் வழிபட்டால், பொருள் வளம் கூடும், புகழும் அதிகரிக்கும். ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்று சொல்வார்கள். அந்த பன்னிரு கரத்தான், தன்னை வழிபட்டோருக்கு எண்ணிய வரங்களை எளிதில் வழங்குவான்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com