வள்ளிமலை சிறப்பு

Future News gallery Murugar

வள்ளிமலை முருகன் கோயில், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே அமைந்த குன்றின் மீதுள்ளது. வேலூர் – பொன்னை செல்லும் பேருந்துகள் வள்ளிமலை அடிவாரம் வழியே செல்கிறது. இக்கோயில் வேலூரிலிருந்து 25 கி மீ தொலைவில் உள்ளது

வேலூர் பகுதியில் திருவலம் எனும் ஊருக்கு வடக்கே 16 கி.மீ தூரத்தில் இந்த வள்ளிமலை அமைந்துள்ளது. முருகப்பெருமானின் இரு மனைவியருள் ஒருவரான வள்ளி இம்மலையில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. வள்ளிமலைக்கோயில் முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

கோயில் அமைப்பு

வள்ளிமலைக் கோயிலிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.

அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில்; குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. வள்ளி கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.

அருணகிரியால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று என்றழைக்கிறார்கள்.

புராண வரலாறு

இக்கோயில் தலத்தில் மஹாவிஷ்ணுவின் இரண்டு புத்திரிகளான வள்ளியும் தேவயானையும் சாத்வீக குணம் கொண்ட கணவர்களை அடைய விரும்பி துதித்ததாகவும் இறுதியில் இருவரும் முருகப்பெருமான மீதே காதல் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தலத்தில் வளர்ந்த வள்ளி, முருகனை கணவனாக அடைய விரும்பி, திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த வள்ளியின் வளர்ப்பு தந்தை நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.

மேலும், புராதன காலத்தில் இம்மலைப்பகுதியில் ஜைனம் தழைத்திருந்ததும் தெரிய வருகிறது. இங்குள்ள குகைகளில் ஜைன பிக்குகள் வசித்திருந்ததற்கான ஆதாரமாக அவற்றின் சுவர்கள் கன்னட மொழியில் அமைந்த சுவர்ப்பொறிப்புகள் காணப்படுகின்றன. இயற்கை அழகு, குகைகள், அகழ்வு செய்யப்பட்ட பாறைப்படிவங்கள், குளங்கள் மற்றும் இயற்கைப்பசுமை போன்ற அம்சங்கள் நிறைந்து காணப்படும் வள்ளிமலைப்பகுதி சுற்றுலாப்பயணிகளை வெகுவாக வசீகரிக்கிறது. சுப்ரமணிய சுவாமி கோயில், சரவணப்பொய்கை கோயில மற்றும் வள்ளி கோயில் என மொத்தம் மூன்று கோயில்கள் வள்ளிமலைப்பகுதியில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பு

மூலவர்:முருகன்-ஒருமுகம்-2கரங்கள்.

ஆறுமுகன்-12கரங்கள்-

வள்ளி தேவயானையுடன் நின்றகோல

தீர்த்தமும் சடாரியும்,

அருணகிரிநாதர்- திருபுகழ் பெற்ற தலம்.

சுக்கிர தோஷநிவர்த்தி-வெள்ளிக்கிழமை சிறப்பு.