வெங்கடாஜலபதி தாடையிலும் நாமம் இருப்பதன் ரகசியம்

திருப்பதி ஏழுமலையானின் நெற்றியில் பெரிய திருநாமம் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் கீழே மோவாய்க்கட்டையில் வட்ட வடிவில் வெண்ணிறம் கொண்ட நாமம் போன்ற குறி? இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா? அதன் பின்னணியில் சுவையான கதை ஒன்று உண்டு.

முதன் முதல் வெங்கடேசப் பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து வந்தவர்கள் திருமலை நம்பியும், அனந்தாழ்வாரும் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அதில் அனந்தாழ்வாரின் பக்தி சற்று அதீதமானது. ஒருநாள் பட்டருடைய சீடர்களுள் ஒருவர் அனந்தாழ்வாரைப் பார்த்து ‘வைணவன் எப்படி இருப்பான்’ என்று கேட்டாராம், அதற்கு அனந்தாழ்வார்,

கொக்கு போல் இருப்பான்
கோழி போல் இருப்பான்
உப்புப் போல் இருப்பான் – என்றாராம்

வெள்ளை உள்ளம் படைத்தவனாய், உண்மை களைப் பொறுக்கி அனுபவிக்கும் தன்மை உடைய வனாய், தான் அழிந்து பரிமளிக்கச் செய்பவனாய் இருப்பான் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டாய் ஆனந்தாழ்வார் விளங்கினார்.

நந்தவன கைங்கர்யம் செய்த அவருக்கு ஒரு யோசனை உதித்தது. நீர்நிலை ஒன்று நிறுவினால் மலர்ச் செடிகளுக்கு நீர் பாய்ச்ச உபயோகமாயிருக்குமே என்றுநினைத்தார்.

ஆனால் அதை தன் திரேக கைங்கர்யமாகவே புரிய வேண்டும் என்றும் எண்ணினார். கையில் மண்வெட்டி ஏந்தி மண்தோண்டும் படலம் ஆரம்பமாயிற்று. பள்ளம் ஆழமாயிற்று. ஆனால் குவிந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டுமே. தன் மனைவியையே அப்பணிக்கு ஆளாக்கினார்.

அவ்வம்மையோ கர்ப்பிணியாக இருந்தாள். கணவர் ஆனந்தாழ்வார் வெட்டிக்குவித்த மண்ணை ஒவ்வொரு கூடையாய்த் தொலைவில் பெருமூச்சுடன் கொண்டு கொட்டி வந்தாள். வெங்கடேசனுக்கே பரிதாபமாகிவிட்டது. ஒரு கூலியாள் வேடம் அணிந்து அனந்தாழ்வார் எதிரில் தோன்றி மண்ணைக் கொண்டு கொட்டும் பணிகேட்டு நின்றார். தன் கைகளால் செய்வதே கைங்கர்யம் என எண்ணி கூலிக் காரனை துரத்திவிட்டார் ஆழ்வார்.

என்ன செய்வார் வெங்கடேசன். மலைச்சரிவின் மறைவில் சென்று அம்மையிடம் ஆழ்வார் அமர்த்தியதாகக் கூறி கூடையைச் சுமக்கும் வேலையில் இறங்கினார். சிறிதுநேரம் சென்றது. ஆழ்வாருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. பெருமூச்சுடன் அவதிப்பட்ட தன் மனைவி எப்படி துரிதமாகக் கொட்டுகிறாள் என்று கொஞ்சம் வேவுபார்த்தார். விஷயம் புரிந்தது.

தன் கைங்கர்யத்தில் பங்கு போடுகிறானே என்ற கோபத்தில் கையிலிருந்த மண்வெட்டியை அவன் மேல் வீசி எறிந்தார். அது அவன் மோவாயைத் தாக்கியது. ரத்தம் கொட்ட அவன் மறைந்துவிட்டான்.

மறுநாள் திருமலையான் கர்ப்ப கிரகத்தில் நுழைந்த அனந்தாழ்வாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. திருமலையான் மோவாய்க்கட்டியில் மண்வெட்டி பாய்ந்த காயம் இருந்தது. அதில் ரத்தம் வழிந்தபடி காணப்பட்டது புரிந்துவிட்டது ஆழ்வாருக்கு. அப்படியே பச்சைக் கற்பூரத்தை அப்ப, காயம் ஆறியது. அந்த நிகழ்ச்சியைத்தான் இன்றும் ஏழுமலையான் முகத்தின் கீழ் வெள்ளை நிறம் உள்ளதை காண்கிறோம்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com