வேண்டும் வரம் தரும் திருச்சி வேதநாராயணப் பெருமாள்

திருச்சி அருகே உள்ள திருநாராயணபுரம் எனும் ஊரில் திருமால், வேதநாராயணப்பெருமாள் எனும் திருப்பெயரில் வேதநாயகியுடன் அருள்கிறார். தல விருட்சமாக வில்வமும், தலதீர்த்தமாக காவிரியும் உள்ள தலம் இது. பாஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கும் இத்தலத்தின் புராணகாலப் பெயர் வேதபுரி என்பதாம். கோயில் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் ஏதேனும் பிரச்னை உண்டானால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். இப்பகுதியில் யாராவது பொய் சொன்னாலோ, பிறரை நயவஞ்சகமாக ஏமாற்றினாலோ, கம்பத்தடியார் முன் சத்தியம் செய்து தரும்படி கேட்கும் வழக்கமும் இருக்கிறது. பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார்.

அவருக்கு வேதத்தை உபதேசித்த பெருமாள், இங்கேயே பள்ளி கொண்டார். அதனாலேயே சுவாமிக்கு வேதநாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் சுவாமி சிலை மண்ணால் மூடப்பட்டது. வானவராயர் என்ற மன்னர், ஒருமுறை இவ்வூர் வந்து தங்கினார். அவரது கனவில் தோன்றிய சுவாமி, தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதைக் கூறினார். சிலையைக் கண்டெடுத்த மன்னர், கோயில் எழுப்பினார். மூலவர் வேதநாராயணர், புஜங்க சயனத்தில் தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்து, நாபியிலுள்ள பிரம்மாவிற்கு வேதத்தை உபதேசிக்கும் கோலத்தில் இருக்கிறார். இரணியனை அழித்தபோது உக்கிர நரசிம்மராக பிரகலாதனுக்குக் காட்சி தந்த சுவாமி, அவனுக்கு இங்கு குழந்தை வடிவில் காட்சி தந்தார். சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன் இருக்கிறார்.

ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம். இதுபோன்ற அமைப்பு வெகு அபூர்வமானது. நாக தோஷம், களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இந்த பாம்புடன் காட்சியளிக்கும் பெருமாளை வழிபட, தோஷம் நிவர்த்தியாகும். பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி, ஆறு குழந்தைகளுடன் சுவாமியை தரிசிக்க வந்தார். அப்போது சுவாமி சந்நதிக்கு மேலே பனை ஓலை வேயப்பட்டிருந்தது. அந்த ஓலையில் தீப்பற்றும்படி சுவாமியே மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார். அதிர்ந்துபோன பக்தர் சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக விழுந்து தன்மீது தீப்பிழம்புகள் விழுமாறு ஏற்றுக்கொண்டார்.

குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட அவருக்கு காட்சி தந்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிராகாரத்திலுள்ள ஆழ்வார் சந்நதியில் பிள்ளைத்திருநறையூர் அரையரை தரிசிக்கலாம். பிறப்பற்ற நிலை வேண்டியும், ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு வேண்டியும் இவரை பக்தர்கள் வழிபடுகின்றனர். பங்குனி உத்திர தினத்தன்று சுவாமி, வேதவல்லித்தாயார் சந்நதிக்கு எழுந்தருளி காட்சி தருவார். ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பிள்ளை லோகாச்சாரியார், மணவாளமாமுனிகள் ஆகியோர் பிராகாரத்தில் உள்ளனர். மூலவர் விமானம் வேதவிமானம் எனப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், கல்வியில் சிறப்பாக திகழ விரும்புவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

பிரம்மா உபதேசம் பெற்ற தலமென்பதால், இக்கோயில் கல்வி வழிபாட்டிற்குரிய தலமாகவும் திகழ்கிறது. வேதநாராயணருக்கு திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது. தோஷம் காரணமாக திருமணத்தடை உள்ளவர்கள், வேதநாராயணருக்கு துளசி மாலை அணிவித்து, சந்நதி யில் 27 நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டை வியாழன் அல்லது தோஷம் உள்ளவரின் பிறந்த நட்சத்திரத்தன்று செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது. ராமானுஜர் இங்கு வந்தபோது, சுவாமி அவரிடம், ‘காவிரியில் நீராடி காவி உடுத்தி வா!’ என்றாராம். ராமானுஜரும் அவ்வாறே வந்தார். அதனாலேயே சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர் காவியுடை அணிந்து புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவருக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com
Facebook Auto Publish Powered By : XYZScripts.com