வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி விழாவில் நாளை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

இதில் 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான நேற்று நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

இன்று (திங்கட்கிழமை) பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். பின்னர் அவர்காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளுகிறார். காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவையுடன் பொது ஜன சேவை நடைபெறும். காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை ராவணவதம் அரையர் இரண்டாம் சேவை நடைபெறும். பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படும்.

மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜன சேவை நடைபெறும். மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு ஆர்யபடாள் வாசல் அடைந்து இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருடமண்டபம் சேருகிறார். இரவு 8.30 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

இன்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி கிடையாது.

மார்கழி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாவை நோன்பின் முதல் நாளான நேற்று பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் ஆண்டாள், நந்தகோபன் குமரன் அலங்காரத்தில் காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

நாளை (செவ்வாய்க் கிழமை) வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

இதனையொட்டி நாளை அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்படுகிறார். அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் 5.45 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசமாகி காலை 7 மணிக்கு சாதரா மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

8 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார்.

நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 7 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கோவில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்காக சவுக்கு கம்புகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவான் தலைமையில் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com