திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா உருவானது எப்படி?


திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா உருவானது எப்படி?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா உருவானது எப்படி? என்பதை பற்றி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (புதன் கிழமை) நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, இரவு இரு வேளைகள் வாகன வீதிஉலா நடக்கிறது. இந்த வாகன வீதிஉலா காலையில் 9 மணிக்கு தொடங்கி 11 மணிவரையிலும், இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணிவரையிலும் நடக்கிறது. கருட சேவை அன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணிவரை நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் பிரம்மோற்சவ விழா நடந்ததாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் போருக்குப் புறப்படும் மன்னர் கள் ஏழுமலையானை வழி பட்டுச் செல்வார்கள். போரில் வெற்றி பெற்றால், ஏழுமலையான் கோவிலுக்கு வந்து விழா நடத்துவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அவ்வாறாக ஓராண்டில் 12 மாதங்களிலும் 12 பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

பல்லவ ராணி வழங்கிய வெள்ளி விக்ரகம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில், முதல் முறையாக 614-ம் ஆண்டு பல்லவ பேரரசின் ராணியாக திகழ்ந்த சாமவாய் பெருந்தேவியார் என்பவர் வெள்ளியால் தயார் செய்யப்பட்ட மணவாள பெருமாள் என்கிற போக சீனிவாசமூர்த்தி விக்ரகம் ஒன்றை காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த விக்ரகம் தற்போது ஏழுமலையான் கோவிலில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி கள் தொடங்குவதற்கு முன்பாக போக சீனிவாசமூர்த்தியை கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அதன் பின்னரே பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் மற்றும் வாகன சேவைகள் தொடங்கி நடந்துள்ளன.

அதைத்தொடர்ந்து ஆடி திருநாள், மாசி திருநாள் என்றும் அச்சுதராய பிரம்மோற்சவம் என்ற பெயரிலும் விழா நடந்துள்ளன. அது, 1254-ம் ஆண்டு பல்லவ மன்னரான விஜயகண்டா கோபாலதேவுடு என்பவர் சித்திரை மாதத்தில் நடத்தி உள்ளார். 1328-ம் ஆண்டு ஆடி மாதத்தில் ஆடி திருநாள் என்ற பெயரில் திருபுவன சக்கரவர்த்தி, திருவேங்கடநாத யாதவ ராயலு காலத்தில் பிரம்மோற்சவ விழா நடந்துள்ளது.

1429-ம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் மன்னர் வீரபிரதாப ராயலு காலத்தில் பிரம்மோற்சவ விழா நடந்துள்ளது. 1446-ம் ஆண்டு மாசி திருநாள் என்ற பெயரில் மன்னர் ஹரிஹரராயலு பிரம்மோற்சவ விழாவை நடத்தி உள்ளார். 1530-ம் ஆண்டு அச்சுதராய பிரம்மோற்சவத்தை அச்சுதராயலு என்ற மன்னர் நடத்தி உள்ளார். 1583-ம் ஆண்டில் 12 மாதங்களிலும் 12 பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளன.

அதன் பிறகு ‘லீப்’ வருடத்தில் அதிக நாட்கள் வந்ததால் ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று வருடாந்திர பிரம்மோற்சவ விழா என்றும், மற்றொன்று நவராத்திரி பிரம்மோற்சவ விழா என்றும் அழைக்கப்பட்டன. பின்னர் நாளடைவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தது. அந்த நடைமுறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. விழாவில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேரோட்டம் ஆகியவை நடக்காது. மற்ற அனைத்து வாகன சேவைகளும் வழக்கம்போல் நடக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com