அம்பரீஷனை காப்பாற்றிய ஏகாதசி விரதம்

மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் மேற்கொண்டான்.

அம்பரீஷன்! மாமன்னன். அதிகாரம், செல்வம், சுக போகங்கள் என அனைத்துமே அவன் கைக்கு எட்டிய நிலையில் இருந்தன. என்றாலும் அவன் அவற்றில் விழவில்லை.

அவன் மனம் எப்போதும் விஷ்ணுவின் மலர்ப்பதங்களையே எண்ணியது. அரச வாழ்க்கை சுகபோகத்தால் ஏற்படும் தடுமாற்றமோ மயக்கமோ அறவே அவனிடம் இல்லை.விரதமும் பூஜையுமாக உள்ளில் ஒங்கி நின்றான் அம்பரீஷன். அப்படி அவன் மேற்கொண்டிருந்த விரதம் ஏகாதசி விரதம்.

மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் மேற்கொண்டான்.

அதாவது, தசமியன்று மதியம் மட்டும் சாப்பிடுவான். இரவில் உணவை விலக்கி, மறுநாள் முழுவதும் சாப்பாடு இன்றி இறைவனை பூஜிப்பான். அடுத்த நாள் காலை துவாதசி திதியில் பாரணை செய்வது என்ற நியதி மாறாமல் பின்பற்றி வந்தான் அம்பரீஷன்.

ஆண்டுக்கணக்கில் பின்பற்றி வந்த அந்த ஏகாதசி விரதத்தை ஒருமுறை யமுனை நதிக்கரையில் அனுஷ்டிக்கலாம் என்று அம்பரீஷன் முடிவு செய்தான். இதையடுத்து மதுவனம் வந்து சேர்ந்தான் அம்பரீஷன். திட்டமிட்டப்படி விரதத்தை தசமியில் தொடங்கினான். ஏகாதசி உபவாசம் முடிந்து, துவாதசி திதி வந்து விட்டது. விரதத்தை முடித்து பாரணை செய்ய வேண்டும்.

அப்படிப்பட்ட சமயத்தில் அங்கு துர்வாசர் வந்து சேர்ந்தார். துர்வாச முனிவரை வரவேற்று உபசரித்தான் அம்பரீஷன். பிறகு தன்னுடன் உணவருந்த வருமாறு அழைத்தான். மன்னா! இதோ யமுனையில் நீராடிவிட்டு வருகிறேன் என்று போனார் துர்வாசர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. பாரணையை நிறைவு செய்வதற்கான காலம் முடியப்போகிறது.

அதைச் செய்யாவிடில், அதுவே தோஷமாகி விடும். என்ன செய்வது?

விரதத்தை முடிக்க இயலாமல் தடுமாறினான் அம்பரீஷன். ஆட்களை அனுப்பி நதியில் துர்வாசரை தேடச் சொன்னான். அரச படை வீரர்கள் யமுனை நதிக்கரையை சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனால் துர்வாசர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

அம்பரீஷனுக்கு மிகவும் கவலை யாகி விட்டது. மன்னனின் கவ லையை அறிந்த மந்திரிகள், மன்னா! கொஞ்சம் துளசி தீர்த்தத்தைப் பருகி, நீங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம். துர்வாச மகரிஷி வந்தவுடன் அவருடன் சேர்ந்து நீங்கள் உணவருந்தலாம். அதனால், விரதமும் நிறைவேறும். அதிதியை விட்டுவிட்டு சாப்பிடும் தோஷமும் ஏற்படாது என்றனர்.

மந்திரிகளின் யோசனை அம்பரீ ஷனுக்கு சரி என மனதில் தோன் றியது. மேலும் அந்த நேரத்தில் அதை தவிர வேறு வழியும் இல்லை. அதனால் அம்பரீஷன் அந்த ஆலோசனையை ஏற்றான். அவன் துளசி தீர்த்தத்தைப் பருகி பாரணை செய்த சிறிது நேரத்தில் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். தன்னை உணவருந்த அழைத்து விட்டு மன்னன் மட்டும் துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்து விட்டான் என்பதை உணர்ந்தார். அவருக்கு கோபம் தலைக்கேறியது.

‘அம்பரீஷா! என்னை அவமதித்து விட்டாய் அல்லவா? இதே பார்!’ என்று துர்வாசர் சீறினார். பிறகு தன் ஜடாமுடியில் ஒரு முடியைப் பிய்த்து வீசினார்.
அந்த முடியில் இருந்து ஒரு பெரிய பூதம் பயங்கர உருவில் வெளிப்பட்டது. அந்த பூதத்தை பார்த்த உடனே அனைவரும் நடுநடுங்கிச் சிதறி ஓடினார்கள். அதைக்கண்ட துர் வாசர் கடகடவென்று சிரித்தார். பூதமோ, அம்பரீஷனை நோக்கிப் பாய்ந்து சென்றது.

ஆனால் அம்பரீஷன் பயப்பட வில்லை. மாறாக கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தான். அதைப் பார்த்து துர்வாசரே ஆச் சரியப்பட்டார். உயிர் பிழைத்தால் போதும் என்று அனைவரும் அறியபடி ஓடுகின்றனர். ஆனால் இவன் ஓடவுமில்லை. என்னை மன்னித்து காப்பாற்றுங்கள் என்று தன்னிடம் சரண் அடையவும் இல்லையே என்று துர்வாசர் சிந்தித்தார்.

பூதம் அம்பரீஷனை நெருங்கியது. அப்போது தீப்பிழம்புகளை கக்கிக் கொண்டு, படுவேகமாகச் சுழன்றபடி வெளிப்பட்டது ஸ்ரீசுதர்சன சக்கரம். அதிர்ந்து போனார் துர்வாசர். இது ஏன் வெளிப்பட்டது? இது மகாவிஷ்ணுவின் ஆயுதமாயிற்றே! இப்போது வெளிப்பட்டது ஏன் என்று கேள்விகள் ஓடின அவருக்குள்.

இதை எதிர்கொள்ள பூதத்தாலும் முடியாதே என்று தோன்றியது அவருக்கு. ஸ்ரீசுதர்சனத்தை சக்ரராஜன் என் பார்கள். உலகிலுள்ள ஆயுதங்களுக்கெல்லாம் அவர்தான் தலைவன். அதை எதிர்கொள்ள எவராலும் இயலாது. அப்படிப்பட்ட சுதர்சனம் படுவேகமாக சுழன்று வருகிறது.

அம்பரீஷனைப் பிடிக்க முயன்ற பூதத்தை சுதர்சன சக்கரம் வெட்டித் தள்ளியது. அதன் பிறகு அது துர்வாசரை நோக்கித் திரும்பியது. இதுதான் சுதர்சனத்தின் சிறப்பு. அம்பை மட்டும் அது கவனிக்காது. ஏவியவரையும் அது கண்டுபிடித்து தண்டிக்கும். அப்படித்தான் பூதத்தை ஏவிய துர்வாசரை நோக்கிப் பாய்ந் தது சுதர்சனம்.

துர்வாசருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகி விட்டது. பூதத்தை வீழ்த்தியதோடு நில்லாமல்தன்னைத் துரத்தும் சுதர்சனத்தை எப்படி நிறுத்துவது என்று அவருக்கு புரிய வில்லை. அதனால் அவர் பிரம்மன், சிவன், விஷ்ணு என்று ஒவ்வொருவரிடமாக அபயம் தேடி ஓடினார். எல்லாரையும் நடுங்க வைக்கும் கோபக்காரரான துர்வாசருக்கு என்ன ஆபத்து? ஏன் அவர் ஓட வேண்டும் ? புரியாமல் எல்லோரும் விழித்தார்கள்.

முதலில் அவர் பிரம்மனிடம் சரண் அடைந்து சிருஷ்டி கர்த்தாவே, என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். அதற்கு இல்லை. இது என்னால் ஆகக்கூடியதல்ல. நீர் சிவபிரானிடம் சென்று கேட்டுப் பாரும் என்று பிரம் மன் கைவிரித்து விட்டார். அடுத்து துர்வாசர் சிவனிடம் ஓடினார். கயிலைநாயகா, காப்பாற்று என்னை என்று கூக்குரல் எழுப் பினார். ‘மகரிஷி! என்னால் சுதர் சனத்தைத் தடுக்க முடியாது. எனவே விஷ்ணுவைச் சரண் அடை யுங்கள் என்று விலகிக் கொண்டார் சிவபெருமான். சுதர்சன சக்கரம் அனல் பறக்க சுழன்று கொண்டே வருவதை பார்த்ததும், துர்வாசர் விஷ்ணுவிடம் சரண் புகுந்தார்.

லட்சுமி நாயகா! உன்னுடைய ஆயுதம் என்னைத் துரத்துகிறது அதைத்தடுத்து நிறுத்தி என்னைக் காப்பாற்று என்றார். உடனே விஷ்ணு, துர்வாசரே, சுதர்சனம் கோபப்படுமாறு நீர் என்ன செய்தீர்? என்ன நடந்தது? என்று கேட்டார். இதையடுத்து துர்வாசர் நடந்த சம்பவங்களை விளக்கமாக கூறினார். துர்வாசரின் விளக்கத்தைக் கேட்ட விஷ்ணு வருத்தம் ததும்ப மகிரிஷியே சக்கரத்தின் சினத்தைக் குறைக்க என்னாலும் முடியாது. ஆனால் ஒரு வழி இருக்கிறது என்று மெல்ல இழுத்தார்.

என்ன வழி? அதை உடனே சொல்லுங்கள் என்றார் துர்வாசர்.

அதற்கு விஷ்ணு, துர்வாசரே இது என்னால் செலுத்தப்பட்டிருந்தால் என்னால் நிறுத்திவிட முடியும். அம்பரீஷனும் இதை செலுத்த வில்லை. அவனுக்கு ஆபத்து என்பதால் தானாகவே கோபத்தில் சுதர்சனம் சுழல்கிறது. எனவே அம்பரீஷன் சுதர்சனத்தை பிரார்த்தித்தால், அதன் சினம் அடங்கும், உங்கள் ஆபத்தும் நீங்கும். இதைத் தவிர வேறு வழியே இல்லை என்றார்.

துர்வாசருக்கு தனக்கு ஏற்பட் டுள்ள சூழ்நிலை தெளிவாகப் புரிந்து விட்டது. யாரை அழிக்க முற்பட்டாரோ, அந்த அம்பரீஷனிடமே அபயம் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவுக்கு வந்தார். அம்பரீஷா, என்னைக் காப்பாற்று என்ற படியே யமுனை நதிக்கரைக்கு விரைந்தார். அங்கே அம்பரீஷன் தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.

மகிகரிஷியின் குரலைக் கேட்டு கண் விழித்தான். துர்வாசரை துரத்திக் கொண்டு வரும் சுதர்சன சக்கரத்தையும் பார்த்தான். என்னை நடந்ததென்று அவனுக்கு புரிந்து விட்டது. சக்ரராஜனே உலகம் அனைத்தையும் அழிக்க வல்லவரே உன்னை வணங்குகிறேன். மகிரிஷி என்னுடைய அதிதி. அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படா வண்ணம் காத்து அருள்புரிவாயாக என்று சுதர்சனரைத் துதித்தான்.

அனல் பறக்கச் சுழன்று வந்து கொண்டிருந்த சக்கரம் மறைந்து போயிற்று. துர்வாசர் மனம் அமைதி பெற்று மன்னனோடு உணவருந்தி புறப்பட்டு போனார்.
அப்படியரு அத்யந்தப் பாதுகாப்பை பேரருளை அம்பரீஷனுக்கு கொடுத்தது ஏகாதசி விரதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com