Tweet அ-அ+
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள்பாலித்த காட்சி. உள்படம்: நடராஜருக்கு தீப மை வைக்கப்பட்ட போது எடுத்த படம்.மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதன்படி, நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று காலை சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு தீபாராதனை நடந்தது.
இதனையடுத்து சாமிக்கு கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி மகா தீபம் அன்று அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டது.. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீப மை பிரசாதம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து, கோவில் நிர்வாக அலுவலகத்தில் தீப மை பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நேற்று அதிகாலை 2.45 மணி முதல் இன்று அதிகாலை 1.43 மணி வரை மார்கழி மாத பவுர்ணமி உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.