ஆணவத்தை அழித்தால் ஆறுமுகனை காணலாம்

கலியுக தெய்வமாக, அடியார்கள் நாடிய பொழுதெல்லாம் துணையாகத் திகழ்பவர் தமிழ்க் கடவுள் முருகன். கந்த சஷ்டி தொடங்கும் இன்று அவரது பெருமையை அறிந்து கொள
ஆணவத்தை அழித்தால் ஆறுமுகனை காணலாம்்ளலாம்.

கலியுக தெய்வமாக, அடியார்கள் நாடிய பொழுதெல்லாம் துணையாகத் திகழ்பவர் தமிழ்க் கடவுள் முருகன். ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்று முருகப் பெருமானின் பெருமையையும் குன்றுதோறும் குமரன் கொண்டாடப்படுவதையும் தொல்காப்பியம் பேசும். தேவேந்திரன் தொடங்கி அருணகிரிநாதர், இராமலிங்க வள்ளலார், பாம்பன் சுவாமிகள் தொடர்ச்சியாக, கந்தக் கடவுளின் அருளால் உயர்வு பெற்றவர்கள் ஏராளம்.

கந்தனுக்கு ஆறுமுகங்கள்; இதனாலேயே, ஆறுமுகர், ஷண்முகர், ஷடானனன் போன்ற திருநாமங்கள். முருகனுக்கு ஏன் ம
ூவிரு முகங்கள்?

நம்முடைய உள்மனக் குரலுக்கு விடையளிப்பதுபோல், பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் இதே விஷயத்தைப் பேசிக் கொண்டார்கள். ‘இந்தப் பிள்ளைக்கு ஏன் ஆறுமுகங்கள்?’ என்று அம்மைவினவ, ஐயன் விடை கூறினார்: ‘எமக்கு ஐந்து முகங்கள்; உனக்கு ஒரு முகம் தேவி; ஐந்தும் ஒன்றும் இணைய, ஆறானது’ என்றாராம். சிவனாருக்கு ஐந்து முகங்கள். இவற்றோடு அம்பிகையின் அழகுமுகமும் சேர, பிள் ளைக்கு ஆறுமுகங்கள் கிட்டினவாம்.

இதற்குள் இன்னும் ஏதேனும் தாத்பரியம் உண்டா? உண்டே!

சிவனாரின் ஐந்து முகங்களும் ஒவ்வொரு திசையைப் பார்த்தவை; மொத்தத்தில், வெளிப்புறம் பார்த்தவை. ஆனால், அம்பிகையின் முகம் உள்முகம் பார்த்தது; அதாவது, அதோமுகம். நம் ஒவ்வொருவரின் ஜீவசக்தி ஆகிற அம்பிகை, நமக்குள்ளேயே நம்முடைய ஆற்றல் சக்தியாகச் சுருண்டு, தன்னுடைய முகத்தை உள்முகமாக வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது சக்தி தத்துவம். அப்படியானால், ஐயனும் அம்மையும் இணைந்து உருவாக்கும் ஆறு முகங்களுக்கு என்ன பொருள்?

இப்பொருளை விளங்கிக்கொள்ளும் முன்னர், நம்முடைய அன்றாட வாழ்க்கையின் செயல்கள் சிலவற்றைச் சிந்தித்துப்பார்க்கலாம். நிறைய பணம் செலவாகிறது; கையிருப்பு குறைகிறது. – என்ன செய்வோம்? – மாதம் தொடங்கி, பனத்தை எங்கே, எப்படி எதற்காகச் செலவழித்தோம் என்று கணக்கெழுதுவோம்; வேண்டாத செலவுகள் கண்ணுக்குப் புலப்படும்; ஆராய்ந்து பார்த்து இனி மேல் குறைத்துக் கொள்வோம். நேரம் வீணாகிறது; வேலைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை – என்ன செய்வோம்? – காலை முதல் இரவு வரை என்ன செய்தோம் எப்படிச் செய்தோம் என்று எழுதிப் பார்ப்போம்; தேவையில்லாத அரட்டை, கோபதாபம் போன்றவை தெரிய வரும்;

அவற்றைக் குறைத்தால் நேரம் நிறையக்கிடைக்கும் என்பது புரியவரும். நம்முடைய குணத்தைப் பற்றி உறவினர்கள் குறை கூறுகிறார்கள் – என்ன செய்வோம்? – இரவு உட்கார்ந்து நம்மை நாமே எடை போட்டுப் பார்ப்போம்; தவறுகளைக் குறைத்துக் கொள்ள முயற்சிப்போம். அப்படியானால்… எந்தச் செயலையும் சூழலையும் அலசி ஆராய்ந்து நம்மை நாமே எடை போட்டுப் பார்த்தால், குறைகள் பலவற்றைக் களையலாம்; மேம்பாடு பெறலாம். அதாவது, உள்முகச் சிந்தனை வெற்றியைத் தரும். உள்முகச் சிந்தனையும் அதன் வெற்றியும் தாம் கந்தக்கடவுள்.

எந்த நிலையிலும் நம்மைச் சுற்றி என்ன உள்ளது, என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகப் புறம் நோக்கிய முகங்கள்; அதே சமயத்தில், நமக்குள் என்ன இருக்கிறது என்பதைக் கண்டாராய்ந்து கொள்வதற்காக அகம் நோக்கிய முகம்; புறப்பார்வையால் தெரிவு பெற்று, அகப்பார்வையால் தெளிவு கொண்டு, இரண்டாலும் குறைகளைக் களைந்தால் நிறைவு கிட்டும். – அத்தகைய நிறைவே ஞான பண்டிதனான முருகன்.

முருகனுடைய அவதாரம் ஏன் நிகழ்ந்தது?

சூரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காகவே கந்தக் கடவுள் அவதாரம் எடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதிதானே என்கிறீர்களா? சூரபத்மன் என்னும் அரக்கனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் முறையிட்டார்கள். சிவஅம்சம் மட்டுமே தன்னை அழிக்கமுடியும் என்று வேறு சூரன் வரம் வாங்கியிருந்தான். சூரனை அழிப்பதற்காகவே, சிவனுடைய நெற்றிக்கண்ணிலிருந்து சிவ குமாரராகக் கந்தக் கடவுள் அவதாரம் எடுத்தார். சூரனோடு போர் செய்வதற்கு முன்னாள், சூரனின் சகோதரர்களோடும் உறவினர்களோடும் போரிட்டு அவர் களை அடக்கினார்; அழித்தார். பின்னர், இறுதியாகவே சூரனையும் அழித்தார்.

முருகனுடைய இந்த வரலாற்றில் நாம் அறியவேண்டிய அற்புதங்கள் யாவை?

சூரனைப் பற்றி சிறிது காணலாம். அசுரர்களுக்குத் தலைவனாக இருந்தவன் அசுரேந்திரன். இவன் நல்லவன். நல்ல வழியில் வாழவேண்டும் என்று எண்ணியவன். அதே நேரத்தில் தன்னுடைய குலகுருவான சுக்ராசார்யரிடமும், பொதுவாகவே பெரியவர்களிடமும் மதிப்பு வைத்தவன். இவனுக்கு மகள் ஒருத்தி பிறந்தாள். குருவினிடத்தில் குழந்தை வளர்ந்தால் நன்மை கிட்டும் என்றெண்ணி, அந்த மகளை சுக்ரரிடம் ஒப்படைத்தான்.

அவரோ அசுரகுரு. அசுர குலம் தழைக்க வேண்டுமென எண்ணினாரேயன்றி, தர்மம் தழைக்கவேண்டும் என்று எண்ணினார் இல்லை. ஆகவே, அந்தப் பெண்ணுக்கு ‘மாயை’ என்று பெயர் சூட்டி (பெயரே சரியில்லையே!), மாயாஜாலங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். பருவப் பெண்ணாக அவள் மலர்ந்ததும், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த மாமுனிவர் காச்யபரை அடையாளம் காட்டி, அவரை மயக்கி, அவர் வழியாகக் குலத்தைப் பெருக்கி, அசுரகுலம் விரியும்படி செய்யச் சொன்னார்.

வளர்ப்புத் தந்தையின் வார்த்தை களைச் சிரமேற் கொண்ட மாயை, தவம் புரிந்த காச்யபரை மயக்கினாள். இர வின் முதல் ஜாமத்தில், இருவரும் அழகிய மானுடர்களாக இருந்த நிலையில் அவர்களுக்குப் பிறந்த மகனே அழகில் சிறந்தவனாகவும் ஒளி படைத்தவனாகவும் விளங்கிய சூரன். இரவின் இரண்டாம் ஜாமத்தில் அவல் பெண் சிங்கமாக மாற, அவரும் அதற்கேற்ப ஆண் சிங்கமாக மாற, அப்போது தோன்றிய மகனே சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசுரன்.

இரவின் மூன்றாம் ஜாமத்தில் அவள் பெண் யானையானாள்; அவர் ஆண் யானை ஆனார்; அவர்களுக்கு அப்போது பிறந்தவன் யானைத் தலை கொண்ட தாரகாசுரன். இரவின் நான்காம் ஜாமத்தில், அவள் பெண் ஆடாக, அவர் ஆண் ஆடாக, அப்போது ஒரு மகள் பிறந்தாள்; அவளே ஆட்டு முகம் கொண்ட அஜமுகி (அஜம்-ஆடு).

இந்தக் கதையைக் கேட்கும்போது மனத்துக்குள் ஏதோ குடைகிறதல்லவா? ஆமாம், சூரனும் அவனுடைய சொந்தக் காரர்களும் வேறு யாரோ அல்ல. நமக்குள் இருக்கும் பலவிதமான வக்கிரங் களும் குற்றங்களும்தாம்! எப்பேர்ப்பட்டவர் காச்யபர் – அவரே மாயைக்கு மயங்கினார். முதலில் மறுதலித்தவர் பின்னர் மயங்கினார். அறிவு சரியாக வேலை செய்யும்போது மாயைகளையும் மாயை போன்ற வசதி-ஆடம்பரங்களையும் மறுதலிக்கிற நாம், பின்னர், பேராசை,-மயக்கம்-,ஆசை,-சினம்-, இறுமாப்பு போன்ற குணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மாயாஜாலத்தில் வீழ்ந்து விடுகிறோம்.

அத்தகைய தருணங்களில் நமக்குள் துளிர்விட்டு ஜனிப்பவர்களே சூரனும் அவனு டைய சொந்தக் காரர்களும். காச்யபர்தான் தேவர்களுக்கும் தந்தை; சூரன் போன்ற அசுரர்களுக்கும் தந்தை. அசுரத்தனம் தலை தூக்காமல் நல்ல குணங்களும் தவமும் (தவம் என்பது சுயக்கட்டுப்பாடு, ஆடம் பரமின்மை) தலை தூக்கும் என்றால் நாமும் தேவர்கள் ஆவோம்; அசுரத்தனம் ஆட்டம் போட்டால் அசுரர்கள் ஆவோம்.

சூரனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் கிரவுஞ்சன். அவன் மலைபோல் வடிவம் எடுத்துக் கொள்வான். அந்த வழியாக வரக்கூடியவர் களைத் தன் னுடைய பள பளப்பால் மயக்குவான். ஆங்காங்கே தென்படும் பளபளப்பான குகைகளுக்குள் அவர்கள் புகு வார்கள். அவ்வாறு புகுந்தவுடன், குகையின் திசையை மாற்றி அவர்களை உள்ளுக்குள்ளேயே அழித்துவிடுவான்.

அவன்போலத்தான் நம்மிடம் இருக்கும் ஆடம்பரமும் ஆட்டம் பாட்டமும் – ஏதோ மலைபோல் பெரியவர்கள் என்றெண்ணிக் கொண்டு, நம்மை நாமே உயர்த்திக் கொண்டு, வெற்றுப் பளபளப்பிலும் வேண்டாத மினுமினுப்பிலும் மயங்கிப்போகிற தன்மை. நம்முடைய தூய ஆன்மாவை மயக்கி ஆங்காங்கே இழுத்தடித்துக் கடைசியில் விழுங்கியே விடுகிற கிரவுஞ்சத்தனம்.
அஜமுகி ஆட்டுமுகம் கொண்டவள். ஆடு சாது போல் தோற்றம் தரும்.

ஆனால், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும். அறியாமை என்பதைக்கூட அறிந்துகொள்ளாமல், ஏதோ தனக்குத் தான் எல்லாம் தெரிந்ததுபோல் குதிக் கும்; முட்டும். அஜமுகி துர்வாசரை நாடி அவரை அராஜகமாக வசப்படுத்தியதால் தோன்றியவர்கள் வாதாபி, இல் வலன் என்னும் இரு மகன்கள். மூர்க்கத் தனமான அறியாமை துர்வாசச்சினத் தோடு சேர்ந்தால் பிறரைத் துன்பப்படுத் தும் குணங்கள் வந்துவிடும்.

சூரனும் அவனுடைய சகோதரர் களுமாகச் சேர்த்து மொத்தம் மூவர். தாரகன் இளையவன்; யானைத்தலைக்காரன். யானை புத்திசாலி விலங்கு. ஆனால், தான் புத்திசாலி என்னும் நினைப்பிலேயே மதம் கொள்ளும். மனித புத்தியும் அப்படித்தான். தனக்கு எல்லாம் தெரியும் என்னும் எண்ணத்திலேயே மதம் பிடித்து அலையும். இளையவனுக்கும் மூத்தவனான சூரனுக்கும் நடுவில் சிங்கமுகன். சிங்கம் நேர்மையான விலங்கு. வீரமானது. ஆனால், காட்டுக்குள் சிக்கியதாலேயே அதன் வீரமும் நேர்மையும் வீணாகிப்போகின்றன. மனி தனுக்குள்ளும் அவ்வப்போது நேர்மையும் நியாயமும் வீரக் குரலும் தலை தூக்கும். ஆனாலும், பல நேரங்களில் அவற் றைப் பயன்படுத்தாமல், அதர்மக் காட்டுக்குள் சிக்கியே அவை அமுங்கிப்போகும்.

தாரகன், சிங்கமுகன், சூரன் ஆகிய மூவரும் ஆன்மாவைப் பற்றி நிற்கும் மூன்று மலங்கள் (பாவ அழுக்குகள்) என்று கொள்ளலாம். ஜீவன் என்னும் ஆன்மா, கடவுள் என்னும் பரமனை விட்டுப் பிரிந்திருக்கிறது. இது மீண்டும் அங்குதான் சேரவேண்டும். ஆனால், இதைச் சேரவிடாமல் செய்பவை இந்த மூன்று மலங்களே ஆகும். முதல் மலம் – ஆணவ மலம். இந்த ஜீவன், தான் பரமனுடைய ஒரு துளி என்பதை உண ராமல், ஏதோ தான் ஒரு தனிப்பிறவி என்றும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும் எண்னிக்கொண்டு, ‘நான் நான்’ என்று பீற்றிக்கொள்ளும் தன்மையே ஆணவம். இதையே அஹங்காரம் (அஹம்=நான்;அஹங்காரம்=நான் என்னும் நினைப்பு) என்கிறோம்.

இரண்டாவது மலம் – கன்ம மலம். ஜீவன் பரமனிடமிருந்து பிரிந்தபோதே, ஜீவனைச் சுற்றிக்கொண்ட முதல் உறை ஆணவம் என்று வைத்துக் கொண்டால், அடுத்த உறை கன்மம் எனலாம். கன்மம் என்பது என்ன? கர்மவினை அல்லது முற்பிறவிகளில் செய்துவிட்ட வினைகளின் பயன். ஒரு ஜீவன், மனித உடலுக்குள்ளோ விலங்கு உடலுக்குள்ளோ அல்லது வேறேதேனும் வடிவத்திற்குள்ளோ நுழைவதற்கு எது காரணம்? அந்த ஜீவன் செய்திருக்கும் கர்மவினைகளே காரணம் இல்லையா? ஆகவே, நம்முடைய பிறப்பை நிர்ணயிக்கும் உறையாகக் கன்ம மலம் சூழ்கிறது.

இதற்கும் அடுத்ததாகச் சூழ்வது மூன்றாவது மலமான மாயாமலம். இது என்ன? எதைக் குறிக்கிறது? ஜீவன், கர்ம வினைகளின் பயனாக, ஓரளவுக்கு நல்ல கர்மங்கள் செய்திருந்ததால், மனித உடலுக்குள் புகுந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். அழகிய மனிதப் பிறவி எடுக்கிறது. ஆனால்… தான் பிறந்த இடத்தை வைத்து எவ் வளவு மதம் கொள்கிறது? என் வீடு, என் அதிகாரம், என் செல்வம், என் பிள்ளைகள், என் பலம், என் சுற்றம் என்று தன்னுடைய உலக இருப்பைக் கொண்டு எத்தனை மதம் – இதெல்லாம் மாயைதானே! வீடும் வாசலும் வசதியும் வாய்ப்பும் போதையேற்றும் மாயைகளில்லையா?

மாயாமலம், கன்ம மலம், ஆணவ மலம் ஆகிய மூன்றும் அழிந்தால், ஜீவன் நிரந்தரமாகப் பரமனிடம் ஐக்கியப்பட்டுவிடும். இதுதான் சூரன் கதை.
சகோதரரும் உறவினரும் அழிந்த பின்னரும், தன்னுடைய வர பலம் முடிந்துவிட்டது என்று தெரிந்தும், விடுபட்ட ஓரிரு சொந்தக்காரர்கள் ஆலோசனை சொல்லியும், எதற்கும் அடங்காமல், தன்னுடைய ஆணவத்தில் ஆட்டம் போட்டான். சிவகுமாரனை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணி, மாறுவேடங்களில் சண்டையிட்டான். எந்த வேடத்திற்கும் கலங்காமல் கந்தக் கடவுள் போர் செய்ய. . . . கடைசியில், வடிவத்தை மாற்றிக்கொண்டு மாமரமாக மாறினான். மரமாக நிற்கும்போதே சூரனுடைய ஆர்ப்பாட்டமும் தன்னால் முடியும் என்னும் அசைவுகளும் அடங்கிவிட்டன.

மாமரத்தைத் தம்முடைய சக்தி வேலாயுதத்தால் பிளந்தார் முருகப்பெருமான். மரம் பிளவுபட்டது; ஒரு பாதி சேவலானது; மறுபாதி மயிலானது. சேவலை எடுத்துத் தம்முடைய கொடியில் சூட்டிய முருகப்பெருமான், சேவல் கொடியோன் ஆனார்; மயிலை எடுத்துத் தம்முடைய வாகனமாக்கி, மயில் வாகனனும் ஆனார்.

இறுதிவரை ஒட்டிக்கொண்டிருந்த ஆனவ மலம், அசைவு அடங்கியபோது அழிந்தது. ஆணவமும் அற்றுப்போன அந்த ஜீவன், சேவலும் மயிலுமாகிப் பணிந்தது. இரண்டையும் தம்முடன் இணைத்துக் கொண்டார் பரம்பொருள்.

நிறைவாக ஒன்றை நினைத்துப் பார்க்கலாமா? சூரன் வதம் என்று யாரும் சொல்வதில்லை. ராவண வதம் என்றும் வாலி வதம் என்றும் இரணியன் வதம் என்று சொல்வதுபோல் சொல்வதில்லை. சூர சம்ஹாரம் தான்! ஹாரம் என்பது மாலை; சம்+ஹாரம் என்றால் நல்ல மாலை. அழுக்குகள் அழிந்த உயிரை, கந்தக் கடவுள் தமக்கான மாலையாகச் சேர்த்துக் கொள்கிறார். தமக்கான ஆபரணம் ஆக்கிக் கொள்கிறார்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com