ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதியில் இருந்து தினமும் திருவிளையாடல்களை விளக்கும் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் ஆவணி மூலவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். திருவிழாவின் 4-ம் நாளான நேற்று தருமிக்கு பொற்கிழி அளித்த திருவிளையாடல் லீலை நடந்தது. தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை புராணம் வருமாறு:-

மதுரையை ஆண்ட வங்கிய சூடாமணி பாண்டியன் இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணமிக்க செண்ப மரங்களை தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தான். ஒரு சமயம் அரசியும் அந்த நந்தவனத்திற்குள் இருந்தாள். அப்போது மன்னன் நந்தவனத்திலே உன்னதமான ஒரு புதிய வாசனையை உணர்ந்தான். அது தன் அரசியின் கூந்தலில் இருந்து வருவதாக உணர்ந்த அவன் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம் கொண்டான். தன்னுடைய ஐயத்தை போக்குபவர்களுக்கு ஆயிரம் செம்பொன் கொடுப்பதாக அறிவித்து, அந்த செம்பொன் கொண்ட பொற்கிழியை சங்க மண்டபத்திலே தொங்கவிட்டான். பல புலவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை பாடினார்கள். ஆனால் அரசனின் ஐயம் தீரவில்லை.

இதற்கிடையில் தருமி என்ற ஆதி சைவ பிரம்மச்சாரி ஒருவன் சொக்கநாதரை பூசிக்க விரும்பினான். ஆனால் திருமணம் முடிந்த பிறகே இறைவனை பூஜை செய்ய முடியும். எனவே தனக்கு அந்த பரிசை கிடைக்கும் படி செய்தால் அதை வைத்து திருமணம் செய்து கொண்டு இறைபணி செய்யலாம் என்று நினைத்து இறைவனிடம் சென்று வேண்டினான்.

சுவாமியும் அவனுக்கு

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழிஇய நட்பின் பயிலியற்

செறியெயிற் றிரிவை கூந்தலில்

நறியவு முளதோ நீ அறியும் பூவே” என்ற பாடல் எழுதிய ஓலையினை வழங்கினார்.

தருமியும் சங்கத்திற்கு சென்று அந்த பாடலை படித்து காட்ட, அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி அப்பொற்கிழியை தருமிக்கு அளிக்க உத்தரவிட்டார். அப்போது அங்கிருந்த நக்கீரர் அதனை தடுத்தார்.

உடனே தருமி, இறைவனிடம் சென்று ஐயனே உன் பாட்டில் குற்றம் கூறினால் யார் உன்னை மதிக்க வல்லவர்? என்று புலம்பி வருந்தினான்.

எனவே சுவாமியே ஒரு புலவர் வடிவத்தில் சங்க மண்டபத்திற்கு வந்தார். அங்கு தன்னுடைய பாட்டில் என்ன குற்றம் கண்டீர்கள் என்று கேட்க, நக்கீரர் எழுந்து பொருட்குற்றம் உள்ளது என்று கூறினார். அதனால் இருவருக்குமிடையே வாதம் தொடர, இறுதியாக தன் நெற்றிக் கண்ணை திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார் என்று அறிந்த பின்னரும் நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என வாதாட இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அந்த கண்ணில் இருந்து வந்த வெப்பம் தாளாமல் பொற்றாமரைக்குளத்தில் நக்கீரர் விழுந்தார். பின்னர் இறைவனும் அங்கிருந்து மறைந்தார்.

இவ்வாறு நக்கீரனின் தமிழ் புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன், மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இணங்க பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரனை உயிர்ப்பித்து கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி செய்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

விழாவில் நேற்று இரவு சுவாமி தங்கச்சப்பரத்தில், அம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூலவீதி கீழபட்டமார் தெரு, வடக்கு கிழக்கு சித்திரை வீதி வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com