நவகிரகங்களில் மற்ற எல்லா கிரகங்களையும் விட ஆற்றல் மிகுந்த கிரகங்களாக இருப்பது நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு மற்றும் கேது கிரகங்கள் ஆகும். இதில் கேதுபகவான் ஜோதிட சாஸ்திரத்தில் “ஞான காரகன்” என அழைக்கப்படுகிறார். இவர் சனிபகவானின் தன்மையை கொண்டவராக இருக்கிறார். எனவே ஒரு மனிதனுக்கு மிக அதிக செல்வத்தையும், ஞானத்தையும் கொடுப்பவராகவும் அதே நேரத்தில் மிகுந்த கஷ்டங்களையும், சோதனைகளையும் ஏற்படுத்தக்கூடிய கிரகமாக இருக்கிறார். அந்த கேதுபகவானின் நல்லருளை பெறுவதற்குரிய கேது காயத்ரி மந்திரம் இதோ.
கேது காயத்ரி மந்திரம்:
ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத்
பொருள்: குதிரைக் கொடியை வைத்திருக்கும் கேதுவை அறிந்து கொள்வோம். சூலம் ஏந்திய கரத்தை கொண்ட அவன் மீது தியானம் செய்வோம். கேது பகவானாகிய அவன், நம்மை காத்து அருள்புரிவான் என்பது இந்த கேது காயத்திரி மந்திரத்தின் பொதுவான பொருளாகும். இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் துதித்து வருபவர்களுக்கு, வேத, வேதாந்த அறிவு உண்டாகும். பிரச்சினைகள் விலகும். விஞ்ஞான, மெய்ஞான அறிவைப் பெறலாம். வியாதிகள் நீங்கும். பகைவர்களை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும். நல்ல நண்பர்கள் கிடைக்கப்பெறுவார்கள். தினமும் துதிக்க முடியதாவர்கள் சனிக்கிழமைகளில் இம்மந்திரத்தை துதிப்பதாலும் முழுமையான பலன்கள் கிடைக்கப்பெறுவர்கள்.
கேது பரிகாரங்கள்:
கேது பகவானின் முழுமையான நல்லருளைப் பெறுவதற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்பெரும்பள்ளம் ஊரில் இருக்கும் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலுக்கு ஏதேனும் ஒரு சனிக்கிழமை காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக சென்று சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பிறகு நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, பல வண்ண நிறங்களை கொண்ட வஸ்திரம் சாற்றி, கேது பகவானை வழிபட வேண்டும்.
இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது சிறப்பு. மேற்கூறிய பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் கோயிலில்களில் இருக்கும் நவக்கிரக சன்னதிக்கு சனிக்கிழமைகளில் காலை 7 லிருந்து 8 மணிக்குள்ளாக சென்று, பல வண்ணப் பூக்களை கேது பகவானுக்கு சமர்ப்பித்து, கொள்ளு நைவேத்தியம் வைத்து, நெய்தீபம் ஏற்றி கேது பகவான் காயத்ரி மந்திரங்களை 108 முறை 1008 முறை துதித்து வருவதால் கேது பகவானின் தோஷம் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரங்கள் முதல் அதிகபட்சம் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலன்களை பெற முடியும்.
இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் கோயில்கள் அருகில் வசிக்கும் குரங்குகளுக்கு வெல்லம் கலந்த உணவுகளை உண்ணக் கொடுப்பது கேதுவின் தோஷங்களை போக்கும். கோயில்களுக்கு வெள்ளை மற்றும் கருப்பு நிற வஸ்திரங்களை தானம் செய்யலாம். கடுமையான நோய்களால் பாதிக்கப் பட்டிருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு மருந்துகள் வாங்கிக் கொடுப்பதும், தினமும் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கருப்பு நிற நாய்க்கு உணவு அளிப்பதும் கேது பகவானின் அருளை பெற்றுத்தரும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.