மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில் மாசி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மேல மாசி வீதியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்திபெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சாமி-அம்பாள் காலை, இரவில் கற்பகம், சிம்மம், கேடயம், ரிஷபம், சப்தவர்ணம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் 6-ம் நாளில் சைவ, சமய வரலாற்று கழுவேற்றல் லீலையும், மறுநாள் பிரதோஷம் அன்று பிட்சாடணர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. காலை 9.36 மணி முதல் 9.53 மணிக்குள் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. அப்போது அம்பாளாக மீனாட்சி அம்மன் கோவில் ஹாலாஷ் சிவாச்சாரியாரும், சாமியாக முரளி சிவாச்சாரியாரும் பங்கேற்று மாலை மாற்றி திருமாங்கல்யத்தை சூட்டினார்கள். கோவில் சிவாச்சாரியார் தர்மர் சிறப்பு பூஜை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை கோவிலில் மகா அபிஷேகமும், இரவு 8 மணிக்கு யானை, புஷ்ப பல்லக்கில் சாமி-அம்பாள் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் உலா வந்தனர்.
திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. இரவு சப்தவர்ணத்தில் சாமி-அம்பாள் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து மறுநாள் 10-ம் திருநாளில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன், மேலாளர் இளங்கோ, ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.