நவகிரகங்கள் பல இருந்தாலும் நன்மையான பலன்களை சற்று அதிகமாக தரும் ஒரு சில கிரகங்களில் புதன் கிரகமும் ஒன்று. குறிப்பாக ஒருவருக்கு சிறந்த சிந்தனை ஆற்றல், பணம் ஈட்டல் மற்றும் அந்த பணத்தை சேமித்தல் ஆகியவற்றிற்கு புதன் கிரகத்தின் அருட்கடாட்சம் அவசியமாகிறது. ஆனால் இந்த புதன் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லையெனில் அவருக்கு “புதன் கிரக தோஷம்” ஏற்படுகிறது. இந்த புதன் கிரக தோஷம் நீங்கவும், அந்த புதன் பகவானால் வாழ்வில் இதர வளங்களை பெறவும் துதிக்க வேண்டிய புதன் மூல மந்திரம் இதோ.
புதன் மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் க்ரோம் ஜம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா
இம்மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை ஜெபிக்க வேண்டும்.கோவிலுக்கு சென்று வழிபடுபவர்கள் நவகிரக சந்நிதியில் இருக்கின்ற புதன் பகவான் சந்நிதியில், பச்சைப்பயிறு அல்லது பச்சைப்பயிர் கொண்டு செய்யப்பட்ட ஏதேனும் ஒரு உணவு பண்டத்தை நிவேதனமாக வைத்து, தீபமேற்றி இம்மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை கூறி வழிபட புதன் பகவானால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும். சிறந்த ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் இருக்கும். வீட்டில் ஏற்பட்டிருக்கும் பண முடை நீங்கும். அதோடு தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம், எதிலும் வெற்றி இப்படி பல நன்மைகள் உண்டாகும்.
புதன் பகவான் பரிகாரங்கள்:
புதன் பகவானின் முழுமையான நல்லருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு புதன் கிழமை அன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவெண்காடு கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது புதன் பகவானின் அருளைப் பெற்றுத்தரும்.
மேற்கூறிய பரிகார பூஜை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் கிழமைகள் தோறும் காலை 8 மணிக்குள்ளாக சென்று புதன் பகவானுக்கு சிறிது பச்சை பயிறு பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, புதன் பகவானின் காயத்ரி மந்திரங்களை 108 முறை துதித்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை 9 வாரங்கள் முதல் 27 வாரங்கள் வரை செய்வதால் மட்டுமே புதன் பகவானின் முழுமையான அருளைப் பெற முடியும். இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிதளவை கிழித்து, அதில் சிறிது வெந்தயத்தை போட்டு முடிந்து கட்டிக் கொள்ள வேண்டும். இந்த முடிப்பை உங்கள் பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.
தினமும் காலையில் எழுந்து இந்த வெள்ளை முடிப்பை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, புதன் பகவானுக்கு உரிய மந்திரங்களை துதித்து வழிபடுவதால், வாழ்வில் செல்வ வளம் பெருகச் செய்யும். நாராயணனாகிய பெருமாள் புதன் பகவானின் அம்சம் கொண்டவராவார். புதன் கிழமைகளில் வீட்டிலேயே பெருமாள் படத்துக்கு தீபமேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் போற்றி போன்ற மந்திரங்களை துதித்து வந்தாலும் புதன் கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் நன்மைகள் உண்டாகும். உங்களால் முடிந்த போது பெருமாள் கோயில்களில் தாயாருக்கு பச்சை நிற புடவையை வஸ்திர தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும்.