உத்தரகோசமங்கை கோயிலின் சிறப்பு

ராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது உத்தரகோசமங்கை. இங்கு தொன்மையான உத்தரகோசமங்கை கோயில் உள்ளது. பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கட்டுவதற்கு முன்பே இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

இலங்கையை ஆண்ட ராவணனுக்கு மங்கல நாண் அணிவிக்கும் பாக்கியத்தை இங்குள்ள மூலவர் அருள்பாலித்ததால் ‘மங்களநாதர்’என்று அழைக்கப்படுகிறார். அம்மனை ‘மங்கள நாயகி’ என்று அழைக்கின்றனர்.

இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானுக்கு தாழம்பூ படைத்து வழிபாடு  நடத்தப்படுவதில்லை. ஆனால் இங்கு மங்களநாதருக்கு தாழம்பூவால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

தட்சிணாமூர்த்தி யோக நிலையில் அருள்பாலிக்கிறார். நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. கோயில் குளத்தின் கரையில் வேதாகம சுவடிகளுடன் மாணிக்கவாசகரின் சன்னதி உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது.

தல விருட்சமாக இலந்தை மரம் உள்ளது. இந்த மரம் பல நூற்றாண்டுகளை கடந்தது என்று கூறப்படுகிறது. இங்குள்ள நடராஜர் சிலை மரகதத்தால் ஆனது.

ஐந்தரை அடி உயரத்தில் உள்ள இந்த சிலை மீது வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அதிர்வலைகளால் மரகத சிலைக்கு சேதம் ஏற்படாத வகையில் சந்தன காப்பு செய்யப்படுகிறது. நடராஜர் சன்னதியில் மேளதாளம் மற்றும் மணியடிக்க அனுமதி கிடையாது.ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கு முந்தைய நாள் நடராஜர் சிலை மீதுள்ள சந்தன காப்பு களையப்படுகிறது.

பிற சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை பார்க்கவே பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். ஆனால் இங்குள்ள நடராஜர் சிலைக்கு சந்தனம் களையும் நிகழ்ச்சியை காண இந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

வருடம் முழுவதும் மரகத நடராஜர் சிலையில் சாத்தப்பட்டுள்ள சந்தன காப்பு மருத்துவ குணம் வாய்ந்தது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. நோய் தீர, குழந்தை பேறு பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com