ஏழரைச் சனியால் திருமணத் தடை உருவாகுமா?

‘ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சனி பகவான்ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம், பிறருடைய கோபமும், சாபமுமே. தோஷங்களே மனிதப் பிறப்பிற்கு காரணமாக அமைகிறது. தோஷங்கள் இல்லை என்றால் பிறப்பு இல்லை. பல ஜென்மங்களில் ஒருவர் செய்த பாவம், புண்ணியங்களின் ஆடிட்டிங் தீர்ப்புதான் இந்த பிறப்பு.

அந்தத் தீர்ப்பை உலகிற்கு வழங்கும் நீதிபதியாக சனி பகவான் இருக்கிறார். மனிதன் இந்தப் பிறவியில் அனுபவிப்பது எல்லாம், அவனுடைய கர்ம பலன்களே ஆகும். இந்த கர்ம பலன்களை கொடுக்கும் கிரகம் ‘கர்ம காரகன்’ எனப்படும் சனி பகவான். மகா சக்தி படைத்த இவர், வலிமை வாய்ந்த கிரகம். தன் நிலையில் இருந்து வழுவாமல் பாரபட்சம் இன்றி தீர்ப்பை வழங்குபவர். அதனால்தான் துலாபாரத்தை சின்னமாகக் கொண்ட துலாம் ராசியில், சுவாதி நட்சத்திரத்தில் சனி பகவான் உச்சம் பெறுகிறார்.

நவக்கிரகங்களில் உள்ள எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை இரண்டையுமே தருகின்றன. ஆனால் நாம் அனைவரும், ‘சனி பகவான் மட்டுமே கெடுபலன்களைத் தருகிறார்’ என்று எண்ணிக்கொள்கிறோம். எந்த கிரகத்தின் தசா புத்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும், அது சனி பகவானாலேயே வருகிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, ‘ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. ஏழரைச் சனிக்கும், மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம், வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல சுப நிகழ்வுகள், சனியின் பிடியில் இருக்கும்போது எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடிந்துவிடும்.

சராசரியாக பெண்களுக்கு 21 வயதிலும், ஆண்களுக்கு 23 வயதிலும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுக, போகங்களை அனுபவிக்கும் பாக்கியம் ஆரம்பமாகும். திருமணம் என்ற பந்தத்தில் ஆண், பெண் இருவரின் கர்ம வினைகளும் கலந்து பூர்வ புண்ணிய, பாக்கிய ஸ்தானங்கள் முழுமையாக இயங்கும்.

ஒரு ஆணுக்கு ஏழரைச் சனி நடைபெறும் காலகட்டத்தில், அவருக்கு ‘குடும்பம் என்றால் என்ன?’, ‘மனைவி – குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற கடமைகள் என்ன?’, ‘உழைப்பின் அவசியம்’, ‘உழைப்பால் உயரும் நெறி முறை’ போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை சனி பகவான் புரிய வைப்பார்.

அதே போல் பெண்களுக்கு, ‘கணவர் மற்றும் புகுந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது?’, ‘கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்’,

‘குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்’ என்பது போன்ற இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார்.

சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகிறது . ராசி சக்ரத்தை ஒரு சுற்று சுற்றி வர, தோராயமாக 30 ஆண்டுகள் ஆகிறது. அதனால் பெரியவர்கள் பேச்சு வழக்கில் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை; 30 வருடம் தாழ்ந்தவரும் இல்லை என்பார்கள். அதாவது ‘30 வருடம் எந்த துன்பத்தை மட்டுமே அனுபவித்து வாழ்ந்த மனிதரும் இல்லை. 30 வருடமும் இன்பமாக மட்டுமே வாழ்ந்தவரும் இல்லை’ என்பதே இதன் பொருள். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குறைந்த பட்சம் 60 வருடம் என நிர்ணயம் செய்தால், அதில் 30 வருட காலம் சனி பகவானின் பிடியில் மட்டுமே மனிதர்களின் வாழ்க்கை இருக்கும்.

கோச்சாரத்தில் சனிபகவான் ராசிக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் முன்னேற்றமான பலன்களையும், ராசிக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும்போது சற்று ஏற்றம் இறக்கம் நிறைந்த சுப – அசுப பலன்களையும் தருவார்.

ஏழரைச் சனி (7 அரை ஆண்டுகள்) என்பது, ராசிக்கு 12, 1, 2 ஆகிய இடங்களில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் ஆகும் . ஜென்ம ராசிக்கு 12-ல் (2 அரை ஆண்டுகள்) சஞ்சரிக்கும் காலம் ‘விரயச் சனி’ என்றும், உங்கள் ராசியில் (2 அரை ஆண்டுகள்) சஞ்சரிக்கும் காலம் ‘ஜென்ம சனி’ என்றும், ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் (2 அரை ஆண்டுகள்) காலம் ‘குடும்பச் சனி’ அல்லது ‘பாதச் சனி’ என்றும் அழைக்கப்படுவார்.

அஷ்டமச் சனி (2 அரை ஆண்டுகள்) என்பது, ராசிக்கு 8-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலமாகும். அர்த்தாஷ்டமச் சனி (2 அரை ஆண்டுகள்) என்பது, ராசிக்கு 4-ல் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலமாகும். கண்டகச் சனி (2 அரை ஆண்டுகள்) என்பது, ராசிக்கு 7-ல் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலகட்டமாகும்.

சனி பவான், ராசிக் கட்டத்தை ஒரு முறை வலம் வரும் 30 ஆண்டுகளில், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என 15 ஆண்டுகள் ஒரு ராசியை தன் பிடிக்குள் வைத்திருப்பார். அதன்படி மனிதனின் சராசரி ஆயுள் காலமாக 60 ஆண்டுகளில் 2 சுற்று வலம் வரும் சனி பகவான், ஒருவரை 30 ஆண்டுகள் தன் பிடியில் வைத்து, ஒருவரின் கர்ம வினைக்கு ஏற்ப, ஏற்ற- இறக்கத்தைத் தந்து வாழ்வின் தத்துவத்தை புரிய வைப்பார்.

இந்திய அரசியல் சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18; ஆணின் திருமண வயது 23. இருந்த போதிலும் படிப்பு, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது குறைந்த பட்சம் 25 வயதிற்கு மேல்தான் திருமணத்தை பற்றியே பலரும் சிந்திக்கிறார்கள். ஒரு சிலர் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையாத காரணத்தால் ஏழரைச் சனியின் மேல் பழி போடுகிறார்கள். ஏழரைச் சனி வந்தால் திருமணம் செய்யக்கூடாது என்று திருமணத்தைத் தள்ளிப் போடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறி வருபவர்களுக்குக் கூட, ஏழரைச் சனியின் ஆதிக்க காலத்தில் திருமணம் நடைபெற்று விடும் என்பதுதான் சனி பகவானின் மகத்துவம்.

ஜனன கால ஜாதக ரீதியாக பல்வேறு தோஷங்களால் சரியான திருமண வாழ்வு கிடைக்காமல் மன நிம்மதி இழந்து தவிப்பவர்கள், ஏழரைச் சனியின் காலத்தில் முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும். ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com