கடன் தீர்க்கும் பாகலூர் கணபதி!

கடன் இல்லாத வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை. எனினும், இந்தக் காலத்தில் கடன் வாங்குவதும் கொடுப்பதும் தவிர்க்கமுடியாத விஷயங்களாகிவிட்டன. அவ்வகையில், தீராத வறுமையின் காரணமாகக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் வருந்தும் அன்பர்களும், உற்றார் உறவினருக்குக் கடன் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெற இயலாமல் தவிக்கும் அன்பர்களும் ஏராளம். அவர்களுடைய அந்தப் பிரச்னைகள் நீங்க அருள்பாலிக்கும் தெய்வமாகத் திகழ்கிறார், பாகலூரில் கோயில் கொண்டிருக்கும்  கடன் தீர்க்கும் கணபதி!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாகலூர் (ஓசூரிலிருந்து பேருந்து வசதி உண்டு). இங்கே அழகுற கோயில்கொண்டிருக்கிறார் அருள்மிகு வரசித்தி விநாயகர். இவரையே கடன் தீர்க்கும் கணபதி எனப் போற்றுகிறார்கள் உள்ளூர் பக்தர்கள். திருக் கோயிலில், ஈசான்ய மூலையைப் பார்த்த படி ஆவுடையாரின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார் இவர். இவருக்கு வலப்புறத்தில் அன்னை சொர்ணாம்பிகையும், இடப்புறத்தில் பழநி முருகனும் காட்சி தருகின்றனர். ஆவுடையார் மீது அருளும் இந்த விநாயகரை வழிபடுவதால், சிவனாரை வழிபட்ட பலனும் கிடைக்குமாம்.

கடன் தொடர்பான பிரச்னைகள் நீங்க இந்தப் பிள்ளையாருக்கு விசேஷ வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள். அதாவது, சங்கடஹர சதுர்த்தி தினத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து, தங்களின் கடன் பிரச்னைகள் நீங்கவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, தேங்காய் எண்ணெய் அல்லது நெய் கொண்டு 12 அகல் விளக்குகள் ஏற்றி வழிபடவேண்டும். பின்னர், அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தியில் ஒரு விளக்கைக் குறைத்து 11 விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இப்படியே, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளக்காகக் குறைத்து வந்து, கடைசி வழிபாட்டு நாளன்று ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வழிபடவேண்டும். இப்படி விளக்குகள் குறையக் குறைய கடன் சுமை களும் படிப்படியாகக் குறையும்; பிரார்த்தனை நிறைவடையும் நாளில் கடன் பிரச்னைகளும் முழுமையாக நீங்கிவிடும் என்பது பக்தர்களது நம்பிக்கை. பின்னர், அடுத்து வரும் திங்கள் அன்று விரதமிருந்து விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றவேண்டும் என்கிறார்கள்.

மேலும், குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள், விநாயகர் சதுர்த்தித் திருநாளில் இந்தப் பிள்ளையாருக்கு பால்குடம் எடுத்து வந்து வழிபடுகிறார்கள். இதன் மூலம், விரைவில் குழந்தைப் பேறு வாய்க்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பக்தர்கள்!

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com