காரிய சித்தி அளிக்கும் கருட தரிசனம்

கருடன்
பறவை இனங்களில் கருடன், காகம், மயில் ஆகியன தெய்வங்களின் வாகனமாக இருக்கும் அம்சத்தைப் பெற்றவைகளாகும். இவைகளில் கருடனை பட்சிகளின் ராஜாவாக வேதம் கூறுகின்றது. கருடனுக்கு கருத்துமன், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், மோதகாமோதர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், ஜெயகருடன், புள்ளரசு, சுவணன்கிரி, கிருஷ்ண பருந்து, ஓடும்புள், கொற்றப்புள் போன்ற பல பெயர்கள் உண்டு.

வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்தில் உள்ள அனுசாசன பர்வதத்தில் இடம்பெற்றுள்ளது. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீதசக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார். திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி, பிராகாம்யம் ஆகிய எட்டுவிதமான சம்பத்துக்களைக் கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இத்தகைய சிறப்பு மிக்க கருடனின் வழிபாட்டு முறையானது, பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன.

திருமால் வாசம் செய்யும் வைகுண்டத்தில் அவருக்கு எப்பொழுதும் தொண்டு (சேவை) செய்வதை, தங்கள் வாழ்வாக்கிக் கொண்டவர்களை ‘நித்ய சூரிகள்’ என்று குறிப்பிடுவர். அத்தகையவர்களில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாகவும், கொடி சின்னமாகவும் இருந்து திருத்தொண்டு செய்து வருகிறார். எனவே இவர் ‘பெரிய திருவடி’ என்றும் போற்றப்படுகிறார். புராணங்கள் கருடனின் அம்சமாக, பெரியாழ்வாரை குறிப்பிடுகின்றன. நரசிம்மர் அவதாரம் செய்த சுவாதி நட்சத்திரமும், வளர்பிறை பஞ்சமி திதியும் இணைந்த நன்னாளில் கருடன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசைக்கு அடுத்த ஐந்தாம் நாளில் வரும் பஞ்சமி திதியை ‘கருட பஞ்சமி’யாக அனைவரும் கொண்டாடுகிறார்கள்.

தட்சனின் மகள்களான வினதை, கத்ரு இரு வரும் காசியப முனிவரை மணந்தனர். வினதைக்கு பறவைகளான அருணன், கருடன் ஆகியோரும், கத்ருவுக்கு நூறு பாம்புகளும் பிறந்தன. ஒரு முறை வினதைக்கும், கத்ருவுக்கும் ஏற்பட்ட போட்டியில், கத்ருவின் சூழ்ச்சியால் அவளுக்கு வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருக்கும்படி வினதைக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தன் தாயின் நிலை கண்டு கருடன் வருத்தம் கொண்டார். கத்ருவிடமும், பாம்பு சகோதரர்களிடமும் தன்னுடைய தாய்க்கு விடுதலை அளிக்கும்படி கேட்டார். ஆனால் கத்ரு அதற்கு ஒரு நிபந்தனை விதித்தாள். அதாவது திருப்பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தை தன்னுடைய பிள்ளைகள் அனைவரும் அருந்தவேண்டும். எனவே அதனை தேவலோகத்தில் இருந்து கொண்டுவர வேண்டும் என்று கூறினாள்.

பாற்கடலைக் கடைவதற்காக, திருமாலின் கட்டளைப்படி மந்தார மலையை தன்னுடைய முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன். எனவே அவரால் அமிர்தத்தை கொண்டுவர முடியும் என்று கத்ரு நம்பினாள். அமிர்தத்தை எடுத்து வருவது தவறு என்றாலும், தன் தாய்க்காக அந்த காரியத்தைச் செய்ய ஒப்புக்கொண்டார்.

பின்னர் தேவலோகம் சென்று அங்கிருந்து அமிர்தத்தை எடுத்துக் கொண்டு, காற்றை விட வேகமாக பறந்து வந்தார். அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தை ஏவி கருடனை தாக்க முயன்றான். ஆனால் கருடனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வஜ்ராயுதம் திணறியது.

ஒரு கட்டத்தில் கருடன், “இந்திரனே! என் தாயை மீட்பதற்காகவே இதனை கொண்டு செல்கிறேன். என் தாய் விடுதலை ஆனதும் அமிர்த கலசத்தை தாங்களே மீட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

இதையடுத்து இந்திரன் அதற்கு அனுமதி அளித்தான். பாம்புகள் இருக்கும் இடத்திற்கு வந்த கருடன், “ஆகம முறைப்படி ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு என் தாயை விடுவிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்று வினதை விடுவிக்கப்பட்டாள். பாம்பு கள் நீராடுவதற்காக சென்றிருந்த நேரத்தில், இந்திரன் வந்து அமிர்த கலசத்தை எடுத்துச் சென்று விட்டான்.

கருடனின் சமயோசித புத்தியை கண்டு, திருமால் அவருக்கு காட்சியளித்தார். “நீ என் வாகனமாவாய், என் கொடியிலும் இடம்பெறுவாய்” என்று ஆசீர்வதித்தார் என்பதாக கருடனின் வரலாறு சொல்லப்படுகிறது.

கருட பஞ்சமி வழிபாடு

அடிக்கடி பாம்பு எதிர்படுதல், கெட்ட கனவு, காரணமில்லாத பயம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கருடபஞ்சமி விரதத்தை மேற்கொள்ளலாம். பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் வேண்டி கடைப்பிடிப்பார்கள். ‘சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்குச்சாதுரியம் போன்றவை கருடனை வணங்கும்போது கிடைக்கும்’ என ஈஸ்வர சம்ஹிதை என்ற நூல் விவரிக்கிறது. ‘கருடாழ்வாரை வணங்கி உபவாசம் இருந்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷநோய்கள் தீரும்’ என கருடதண்டகம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

கருடனை ஒவ்வொரு நாளிலும் வணங்க, ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும். ஞாயிறு – நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும். திங்கள் – குடும்ப நலம் கூடும். செவ்வாய் – தைரியம் ஏற்படும். புதன் – எதிரிகள் விலகுவர். வியாழன்- நீண்ட ஆயுள் கிடைக்கும். வெள்ளி – அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும். சனி – முக்தி கிடைக்கும்.

ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது என்பது வழக்கு. கருட தரிசனம் தன்னிகரற்றது. கெட்ட சகுணங்கள், துர்சேட்டைகள், துர்குறிகள் போன்ற அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும். “பறவைகளில் நான் கருடன்” என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளார். அழகிய கருட பகவானின் தரிசனம் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com