காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலின் சிறப்பு

காலிங்கராயன் வாய்க்காலின் மேல்புறம் அமைந்துள்ளதால் வாய்க்கால் மாரியம்மன் என்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகின்றது. கோயிலின் எதிரில் உள்ள சிறு கோயிலில் காளியம்மன் நான்கு திருக்கரங்களில் நின்ற நிலையில் வடக்கு நோக்கி உள்ளார். கோயில் எதிரில் அரசமரமும், அதனைச் சுற்றி நாகர் சிற்பங்களும் உள்ளன. அங்கு பஞ்சமுக விநாயகர் எழுந்தருளியுள்ளார். தூரி, பலிபீடம், சிம்மம் இவைகளைக் கடந்து தென்மேற்கு மூலையில் பொங்குமடம்-மடைப்பள்ளி உள்ளது. கருவறையில் கத்தி, சூலம், பாசம், கபாலம் தாங்கிய நான்கு கரங்களுடன் மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். மூன்று கோயில்களிலும் பால்வடியும் மரங்களான வேப்பமரம், பாலைமரம், ஆலமரம், பாச்சா மரம், அரசமரம் ஆகியவற்றில் ஒன்றை கம்பம் நடுவதற்கு எடுத்துவருவர்.

இரண்டு கிளைகள் உள்ள பால் மரத்துடன் மூன்றாவது ஒரு கிளையை இணைத்து மூன்று கிளை பிரிவுபோல் அடிமரத்துடன் கம்பம் இருக்கும். கம்பத்தில் மாரியம்மன் முகம் போல் அமைப்பைச் செய்வர். கம்பத்திற்கு விபூதி, சந்தனம்,குங்குமம் அணிந்து நவதானியம் கட்டி,வேப்ப இலை மாலை அணிவர். மும்மூர்த்திகள் எழுந்தருள்வதாகவும், மாரியம்மன் மூவுலகத்துக்கும் தலைவி என்றும் கம்பத்தின் மூன்று பிரிவைக் குறிப்பர். கம்பம் நட்டபின் அதன்மீது பூவோடு வைப்பர். சந்தனம் அல்லது வேம்பை எரிபொருளாகப் பயன்படுத்துவர். சனிக்கிழமை மாலைப்பொழுதை கடந்த முன்னிரவில் கம்பம் நடும் முன்பு பட்டாலம்மனுக்கு பூஜை நடைபெறும். அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து மேளதாளத்துடன் அனைவரும் வாய்க்கால் மாரியம்மன் கோயில் செல்வர்.

அங்கு மூன்று மாரியம்மன் கம்பங்களும் இருக்கும். மூன்று கோயில் பூசாரிகளுக்கும் ஈரோடு கோட்டை திருத்தொண்டீசுவரர் கோயில் சிவாச்சாரியார் பூஜை புண்ணிய அர்ச்சனை செய்து காப்புக் கட்டுவார். காப்புக் கட்டி பண்டாரங்களுக்கு பூணூலும் அணிவிப்பர். விழா முடியும்வரை காப்பு கட்டியோர் வெளியூர் பயணம் மேற்கொள்ளக்கூடாது. காப்பு கட்டிய பூசாரி விரதம் இருந்து கோயிலிலேயே தங்கி இருப்பார். கம்பம் நடப்பட்ட நாள்முதல் சிறுவர், சிறுமிகளும், பெண்களும் கம்பத்திற்கு இரவு,பகலாக மஞ்சள் நீர்,பால் ஊற்றி வழிபடுவார்கள். பத்தாவது நாள் வியாழன் சின்ன மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். 11ம் நாள் முதல் 14ம் நாள் வரை அம்மன் திருவீதி உலா நடைபெறும். 15ம் நாள் அதிகாலை காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

பின்னர் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 16ம் நாள் புதுப்பானையில் பச்சரிசியால் வெண்பொங்கலோ அல்லது சர்க்கரைப் பொங்கலோ வைப்பர். பொங்கலை அம்மனுக்கு படைத்து எடுத்து வருவர். அன்று காலை சின்ன மாரியம்மன் கோயிலில் கொம்புகள் முழங்க தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறும். 19ம் நாள் சனிக்கிழமை கம்பம் எடுத்தல் விழா நடைபெறும். மாலை 3 மணி அளவில் மூன்று கோயில் கம்பங்கள் எடுக்கப்பட்டு மணிக்கூண்டு அருகில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து மேள தாளத்துடன் கம்பங்கள் ஆட்டம், பாட்டத்துடன் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக கம்பங்கள் எடுத்துச் செல்லப்படும்.

வழியெல்லாம் மலர் தூவியும், உப்பு இறைத்தும், மஞ்சள் நீர் ஊற்றியும் கம்பத்திற்கு பக்தர்கள் சிறப்பு செய்வர். மிளகு, பழம், சிறு அச்சு வெல்லம், நவதானியம், கடலை, காசு, வேட்டி, துண்டு போன்றவைகளையும் கம்பத்திற்கு படையலாக அளிப்பது உண்டு. ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்வர். புலி,கரடி போன்று பல்வேறு மாறுவேடம் அணிந்து ஆட்டத்துடன் மாரியம்மனை வழிபட்டுச் செல்வர். இறுதியில் மூன்று கம்பங்களும் காரைவாய்க்கால் சென்றடைந்து, காலிங்கராயன் வாய்க்காலில் விடப்படும். 20ம் நாள் மறு பூஜையுடன் விழா நிறைவடையும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com