கார்த்திகை தீபம் தமிழ் மக்கள் கொண்டாடும் பழமையான பண்டிகைகளில் ஒன்று. இந்த விழா, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலும், அவ்வையாரின் கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கிறது. மேலும், சங்க இலக்கியத்தில் ‘பெருவிழா’ என்றும் குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை இந்துக்களால் அனுசரிக்கப்படும் விளக்குகளின் திருவிழாவான இது தமிழ் நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் (நவம்பர் முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானின் ஜோதி வடிவத்தை வழிபடுவார்கள்.
பொதுவாக கார்த்திகை தீபம் அன்று, வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்துவிட்டு, மண் விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். இப்படிச் செய்தால் சகல சவுபாக்கியங்களும் வாழ்க்கையில் கிடைக்கும் என்றொரு நம்பிக்கை உள்ளது. இந்த 27 விளக்குகள், 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது. 27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள், குறைந்தது 9 தீபங்களை ஏற்றலாம். முக்கியமாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்கை ஏற்றுவது சிறப்பு.
கார்த்திகை தீபம் அன்று ஏற்றப்பட வேண்டிய விளக்குகள் அனைத்தும் புதிதாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. தலைவாசலில் ஏற்றப்படும் இரண்டு விளக்குகள் மட்டும் நிச்சயம் புதிதாக இருக்கவேண்டும். மற்ற விளக்குகள் பழையதாக இருந்தாலும், அவற்றை நன்கு சுத்தம் செய்து விரிசல்கள் எதுவுமில்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அப்படி ஏதாவது விரிசல்கள் இருந்தால் அதனை உபயோகிக்கவேண்டாம். சுத்தம் செய்த அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரித்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிப் பயன்படுத்துங்கள். நிச்சயம் நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தவேண்டும். தீபம் ஏற்றி சிவபெருமானை மனமுருகித் தரிசிக்கும்போது, நிச்சயம் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.
“உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே”
இதுபோன்ற சிவபெருமான் பாடல்களைப் பாடியபடியே தீபங்கள் ஏற்றுவது மேலும் நன்மைகள் தரும். நெருப்பு ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்திருநாள் அன்று மாலையில் பெரிய தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக இந்த ஆண்டு பக்தர்கள் மலை ஏறவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.