கிரிவலத்தால் கிடைக்கும் குருப்பெயர்ச்சி நற்பலன்

Related image

தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்’ என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் எந்த தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும், குரு பார்வ பட்டால் அந்த தோஷங்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.

குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார். ஜாதகங்களில் குரு சிறப்பாக அமைந்தால் ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை, உயர் பதவி, கல்வி, ஞானம், வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு, செல்வசெழிப்பு முதலியன சிறப்பாக அமையும். திருமணப் பேறு, புத்திரபாக்கியம் உண்டாகும்.

ஜாதகத்தில் குரு பார்வை சரி இல்லாதவர்களுக்கு பெரியோர் சாபம், மறதி, விஷப் பூச்சிகளால் பாதிப்பு, காது மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள், பணத்தட்டுப்பாடு, பேச்சு சம்பந்தமான பிரச்சினைகள், கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி துன்பத்தில் தவிப்பவர்கள் குருபகவானை வழிபட்டால் அந்த பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பழமையான சிவாலயங்களில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்கள் வழிபாடு, குருப்பெயர்ச்சி சமயத்தில் பக்தர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தருவதாக அமைந்துள்ளது.

குரு பகவான் பரிகாரத் த‌லங்களாக திருச்செந்தூர், திருஆலங்குடி, பட்டமங்கலம், முறப்பநாடு, மதுரை குருவித்துறை, சென்னை திருவலிதாயம், தேவூர், தென்குடி திட்டை, சுசீந்திரம், உத்தமர்கோவில், தக்கோலம், கோவிந்தவாடி என பல திருத்தலங்கள் கூறப்பட்டாலும், குருப் பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

ரமண மகரிஷியை அவரது அடியவர் ஒருவர், திருக்கயிலாய யாத்திரை செய்ய அழைத்தார். உடனே மகரிஷி சிரித்துக்கொண்டே ஒன்றும் தெரியாதவர் போல, ‘அங்கே அப்படி என்ன விசேஷம்?’ என்றார்.

‘திருக்கயிலாய மலை, சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான், பூதகணங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம்’ என்று ரமணரிடம் பதிலுரைத்தார் அந்த அன்பர்.

அதற்கு ரமணர், ‘அன்பனே! கயிலாயம் சிவன் வசிக்கும் தலம். ஆனால் திருவண்ணாமலை என்பதே சிவன் தான். சிவபெருமான் இங்கே இருக்க, அவரின் வீட்டை போய் பார்த்து வருவானேன்?’ எனக் கூறினார்.

உண்மையை உணர்ந்த அந்த அன்பரும் திருக்கயிலாய யாத்திரையை விடுத்து, திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தொழுதார்.

ஆம்.. இங்கு மலையே சிவபெருமான் தான்.Related image

‘செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே
எங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்
இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே’ என்ற திருநாவுக்கரசரின் திருமுறைப்பதிகமே திருவண்ணாமலையின் வரலாற்றை விளக்கிடும்.

ஒருமுறை விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்று வாதிடத் தொடங்கினர். சுவாரசியமாக ஆரம்பித்த வாதம், அனல் தெறிக்க இறுதியில் திருக்கயிலை நாதனான சிவபெருமானிடம் வந்து நின்றனர். கையில் அனல் ஏந்தி, நெற்றிக்கண்ணில் அனலோடு தகதகக்கும் பரம்பொருள் சிவபெருமான், ‘எமது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர்’ என்று கூறினார்.

அத்தோடு இருவரின் நடுவிலும் பெரும் தூண் போன்ற அருட்பெரும் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். உடனே ஈசனின் அடியைத் தேடி பன்றி உருக்கொண்டு விஷ்ணுவும், அன்னப் பறவை உருக்கொண்டு சிவபெருமானின் முடியைத் தேடி பிரம்மனும் புறப்பட்டனர். பூமியைத் தோண்டி பாதாளம் ஏழுக்கும் கீழே சென்றும் ஈசனின் அடியைக் கண்டறிய முடியாமல் விஷ்ணு தோல்வியோடு திரும்பி வந்தார்.

அன்னமாய் மாறி ஆகாயத்தில் பறந்து பல ஆண்டுகள் கடந்தும், ஈசனின் முடியை காண இயலாமல் பிரம்மனும் அயர்ந்து போனார். அப்போது ஈசனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ பல ஆயிரம் ஆண்டுகளாக கீழ்நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவிடம் ‘நான் சிவபெருமானின் முடியை தரிசித்து விட்டதாக பொய் சொல்’ என்றார்.
Image result for tiruvannamalai girivalam
தாழம்பூவும் அப்படியே பொய் சாட்சி சொன்னது. அப்போது ஜோதிப் பிழம்பில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், பொய்யுரைத்த பிரம்மனுக்குச் சாபமும், மகாவிஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் செய்தார்.

பிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானை தொழுதுநிற்க, ஜோதிப்பிழம்பு அக்னி மலையாய் நின்றது. அக்னிமலையான ஈசனும் உள்ளம் குளிர்ந்தார். அதுகண்ட பிரம்மனும் விஷ்ணுவும், ‘பரம்பொருளே! எங்கள் பொருட்டு இங்கு அக்னி மலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள். இந்த அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலை தான். உமக்கு பூச்சொரிய அண்ணாமலையில் வளரும் மரங்களால் தான் முடியும். உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும். உமக்கு ஆரத்தி எடுக்க சூரிய, சந்திரர்களால் தான் முடியும். எனவே கலியுகத்தில் மக்களும் உம்மை தீப, தூப அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க வேண்டும்’ என்றனர்.

உடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த சிவலிங்கமே, இன்று நாம் ஆலயத்தில் வழிபடும் அருணாச்சலேஸ்வரர் எனும் அண்ணாமலையார். உடனே தேவதச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான். பின்னாளில் பற்பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது திருஅண்ணாமலையார் திருக்கோவில்.

‘அண்ணுதல்’ என்றால் ‘நெருங்குதல்’ எனப்பொருள். ‘அண்ணா’ என்றால் ‘நெருங்க முடியாதது’ என்று பொருள்படும். அதாவது, மகாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத திருமலை என்பதால் இத்தலம் ‘திருஅண்ணாமலை’ ஆயிற்று.

திருஅண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மலையாகவும், பாமரர்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது.

இந்தத் தலத்தில் இறைவனின் உடலில் இடப்பாகம் பெறுவதற்காக பார்வதிதேவி தவம் செய்தார், அப்படி தவம் செய்ததோடு மட்டுமின்றி, கார்த்திகை பவுர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்த நன்னாளில் பிரதோஷ காலத்தில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்ததால், அன்னையின் ஆசை நிறைவேறியது. சிவபெருமான் அம்மனுக்கு தன்னுடைய உடலில் சரிபாதியை வழங்கி அருள்பாலித்தார்.

Related image
திருவண்ணாமலையை பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் கிரிவலம் செய்யலாம். அதிலும் குறிப்பாக கிரகண காலங்கள், பிரதோஷம், மாத சிவராத்திரி, கிரகப் பெயர்ச்சி காலங்களில் கிரிவலம் வந்து வழிபடுவது மிகச்சிறப்பாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் வரும் குருப்பெயர்ச்சி நன்னாளில் திருவண்ணாமலையை வலம்வந்து வழிபடுவது தோஷங்களை விலக்கி, அனைவருக்கும் நற்பலன்களை வழங்கும்.விழுப்புரத்தில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சுமார் 63 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது.
Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com