குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில்

குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில்

அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிரவாகமாக பெருக்கெடுத்து வரும் காவிரி அன்னையின் மடியில், திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருப்பதி ஏழுமலையானிடம் நீங்கள் வேண்டிக்கொண்டது நிறைவேறி விட்டது. ஆனால் அந்த வேண்டுதலை நிறைவேற்ற உடனே திருப்பதி செல்ல முடியாத சூழ்நிலை. ஐயோ, தெய்வகுற்றம் ஆகிவிடுமே என்று கவலைப்படாதீர்கள்.

வேண்டியதை வேண்டியவாறு கொடுக்கும் வள்ளல் வெங்கடாஜலபதிக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை செலுத்த உங்களுக்கு அருகாமையிலேயே ஒரு புண்ணியஸ் தலம் உள்ளது. என்ன, ஆச்சிரியமாக இருக்கிறதா. நம் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்தான் அது.

ஸ்ரீதால்பிய முனிவரின் அன்பைப் பெற்ற, அருந்தவ குணம் கொண்ட சீடர் குணசீல மகரிஷி, ஒரு சமயம் ஏழுமலைக்கு சென்ற குணசீலர் வேண்டியவருக்கு வேண்டு வதை அருளும் வேங்கட முடையான் ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசனம் செய்தார். வெங்கடாஜலபதியின் அருளில் மூழ்கிப்போன குணசீல மகரிஷி, அவரை விட்டு அகல முடியாது.

பிரிந்து வாழ முடியாது என்று எண்ணினார். தன் உள்ளக்கிடக்கையை எம்பெருமானிடம் கோரிக்கையாக கொட்டித்தீர்த்தார். தன் ஆசிரமத்துக்கு எழுந்தருளி, என்றென்றும் தனக்கும், மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும் என்று வரம் வேண்டினார்.

பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பரமாத்மா, தாம் திருவேங்கட மலையில் அர்ச்சாவதாரமாக இருந்து குபேரனிடம்தான் வாங்கிய திருமண கடனை அடைத்துக் கொண்டிருப்பதாகவும், கடன் தீரும் வரை தாம் அங்கிருந்து வர முடியாது என்றும் கூறினார்.

மேலும் குணசீலர் காவிரிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவம் புரிய வேண்டும் என்றும், வைகுண்டத்திலிருந்து ஸ்ரீவாசுதேவன்-ஸ்ரீலட்சுமியுடன் பிரசன்ன வெங்கடேசனாக தாம் அங்கு எழுந்தருளுவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி குணசீல மகரிஷியும் காவிரி வடகரையில் ஆசிரமம் நிறுவி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் எழுந்தருள கடும் தவம் புரிந்தார்.

அவரின் தவத்தை மெச்சி வெங்கடாஜலபதி பெருமாளும் கிருதயுகம், புரட்டாசி மாதம், சனிக்கிழமை, சிரவண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், தனுர் லக்னத்தில், சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் வேளையில் எம்பெருமான் திவ்ய மங்கள சொரூபராக பிரசன்னம் ஆகி குடி கொண்டார்.

இவ்வாறு எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதியை குணசீல மகரிஷி 3 யுகங்கள் தன் ஆசிரமத்தில் பூஜை புனஸ்காரங்களுடன், எவ்வித குறைபாடும் இன்றி வழிபட்டு வந்தார். இந்நிலையில் குணசீல மகரிஷி குரு ஸ்ரீதல்பிய முனிவர் பத்ரிகாசிரமம் சென்று தவம் புரிய விரும்பினார்.

தன் ஆத்மார்த்த சீடர் குணசீலரும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம். இதை தம் தவ வலிமையால் உணர்ந்த குணசீலருக்கு பெரும் குழப்பம். தவமிருந்து, கிடைத்தற்கரிய செல்வமாய் பெற்ற பிரசன்ன வெங்கடா ஜலபதியை விட்டுப் பிரிவதா? தன்னை இவ்வளவு தூரம் உயர்த்திய குருநாதன் தல்பிய முனிவரை விட்டுப் பிரிவதா என்று தெரியவில்லை.

விடை காணமுடியாமல் தவித்த குணசீலர், தனக்கு நல்லதொரு முடிவு தருமாறு எம்பெருமான் பிரசன்ன வெங்கடேசனையே வேண்டினார். பெருமாளும் குணசீலரே, பத்ரிகாசிரமத்திலும் யாமே குடிகொண்டுள்ளோம். குருபக்தி குறைய வேண்டாம். தல்பியருடன் சென்று உம் சேவை தொடரட்டும் என்று அருள்பாலித்தார்.

எம்பெருமானின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் புறப்படும் முன் குணசீலர் இறைவனிடம் ஒரு வாரம் வேண்டினார். `வேண்டிய வருக்கு வேண்டியதை அருளும் வெங்கடேசா! தங்கள் கட்டளைப்படியே தல்பிய முனிவருடன் பத்ரிகாசிரமம் சென்று குருசேவையை தொடருகிறேன்.

இந்த புண்ணியஸ்தலம் இனி என் பெயரால் விளங்க வேண்டும். தங்களை நாடிவந்து வேண்டுவோரின் முன் `வினைப்பயன்கள் அனைத்தும் நீங்க வேண்டும். தீராத நோய்கள் எல்லாம் தீர வேண்டும். குறிப்பாக சித்தப்பிரமை உடையவர்கள் இங்கு வந்தால் தெளிவு பெற்றுச் செல்ல வேண்டும்.

கேட்டது கிடைக்க வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும். தென்திருப்பதி என்று மக்கள் போற்றி, பிரார்த்தனை தலமாக விளங்க வேண்டும் என்று கேட்டார். தனக்காக வேண்டாமல், தரணியில் உள்ள மக்களுக்காக வேண்டிய குணசீலரின் எண்ணத்தை எம்பெருமான் பாராட்டினார்.

`நீர் வேண்டிய படியே நடக்கும். யாம் சங்கு-சக்கரம் தரித்து, செங்கோலுடன் இங்கு காட்சி தருவோம். சகல நோய்களும் தீரும்’ என்று அருள்பாலிக்க, குணசீல மகரிஷி பத்ரிகாசிரமம் புறப்பட்டு சென்றார். குணசீலர் போகும்முன்பு எம்பெருமானுக்கு சேவை செய்ய தன்சீடர்களில் ஒருவரை நியமித்து சென்றார்.

ஆற்றில் வெள்ள அடிக்கடி வந்ததால் பயந்துபோன சீடர் வெங்கடேசப் பெருமாளை தனியே விட்டு, விட்டு ஓடி விட்டார். எம்பெருமானோ தன்னைச் சுற்றி ஒரு புற்றை உண்டாக்கி அதனுள் குடி கொண்டார். வனம் நிறைந்த இந்த குணசீலம் அருகில்தான் மன்னர் ஞானவர்மாவின் கோசாலை இருந்தது.

கோசாலையில் இருந்து குணசீலம் வனத்தில் மேய்ந்து விட்டு சென்ற மாடுகளிடம் யாதவர் கள் பால் கறந்து புற்று அருகே சற்று இளைப்பாறி விட்டு அரண்மனைக்கு அனுப்புவது வழக்கம். ஒரு சமயம் அந்த மாடுகளிடம் இருந்து கறந்து குடங்களில் ஊற்றப்பட்டிருந்த பால் புற்று அருகே யாதவர்கள் ஓய் வெடுத்தபோது மாயமாய் மறைந்தது.

திடீரென்று மன்னரிடம் பயந்தபடி இதை சொன்னார்கள். நம்ப மறுத்த அரசர் வந்து நேரில் பார்த்த போதும் இதேபோல் பால் மாயமாய் மறைந்தது. அரசரும் திகைத்தார். அப்போது அந்த வழி வந்த ஒரு அந்தணர், அருள் வந்து வைகுண்டவாசனை நாம் பிரசன்ன வெங்கடேசனாக இங்கு சுயம்பு வடிவில் எழுந் தருளியுள்ளோம்.

புற்றை பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் உண்மை புரியும்’ என்று பிரசன்னம் சொன்னார். அதன்படி மன்னர் உத்தர விட, புற்றின் மீது குடம் குட மாக பால் அபிஷேகம் செய்ய புற்று கரைந்து, சங்கு சக்கர தாரியாய், ஆனந்த சொரூப னாய் காட்சியளித்தார்.

அன்று இரவில் அவரது கனவில் பிரச்சன்னமான வெங்கடேசன் தான் இருந்த இடத்தில் ஒரு ஆலயம் நிர்மாணிக்கும்படி கட்டளையிட, அதை தனக்கு கிடைத்த பாக்கியமாய் எண்ணி மன்னரும் ஆலயம் கட்டினார். இந்த ஆலயம்தான் இன்றைக்கு தென்திருப்பதிஎன்னும் சிறப்புடன் திவ்யதேசமாக புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது.

திருப்பதிக்கு வேண்டுதல் செய்து கொண்டவர்கள் தங்கள் காணிக்கைகள் இங்கு செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். இங்கு பிரார்த்தனை செய்தவர்கள் வேறுபெருமாள் கோவில்களில் வேண்டுதலை நிறைவேற்ற முடியாது. அப்படி காணிக்கை செலுத்தினாலும், இங்கு எழுந்தருளியிருக்கும் பிரசன்ன வெங்கடேசபெருமாள் தனக்கு வர வேண்டிய காணிக்கையை வசூலித்து வருவார் என்று கதைகள் கூறுகின்றன.

சித்த பிரமை உடையவர்களும், பில்லி-சூனியம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குணமாகும். புத்திர பாக்கியமில்லாதவர்கள் இங்கு வந்து நியமத்துடன் விரதமிருந்து கஞ்சி வடிக்காத அன்னத்தை ஒரு வேளை மட்டும் உண்டுவர நல்ல பிள்ளைப்பேறு கிடைக்கும்.

வரனுக்கு நல்ல கன்னிகையும், கன்னிப்பெண்களுக்கு நல்ல வரனும் அமையும். ஊமைகள் பேசுவார்கள், கண் தெரியாதவர்கள் பார்வை பெறுவார்கள், தீராத வியாதிகள் தீரும்’ என்று ஞானவர்ம மன்னருக்கு எம்பெருமான் காட்சியளித்த போது திருவாய் மலர்ந்தது போல் இன்றும் அருள்பாலித்து வருகிறார்.

போக்குவரத்து வசதி:

சென்னையில் இருந்து பஸ் மூலம் திருச்சி சென்று பின் அங்கிருந்து சேலம் நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி சென்று பின் அங்கிருந்து அரசு பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். இத்திருத்தலம்திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com