கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்

வருகிற 9 மற்றும் 12-ந்தேதிகளில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அகிலாண்டேஸ்வரி கோவில் வளாகத்தில் புதுப்பொலிவுடன் காணப்படும் மகிஷாசுரமர்த்தினி ஓவியம்.
நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய ஐம்பூதங்களில் இறைவன் சிவ பெருமான் நீர்த்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ் வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். 18 ஏக்கர் பரப்பளவில் உயரமான மதில் சுவர்கள், 4 திசைகளிலும் எழில்மிகு கோபுரங்கள், 5 பிரகாரங்களை கொண்ட இக்கோவிலை 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் கோச்செங்கட் சோழன் என்ற மன்னன் கட்டியதாக கோவில் தல வரலாறு கூறுகிறது.

இக்கோவிலின் தலமரம் வெண்நாவல் மரமாகும். பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம் இக்கோவிலின் தல தீர்த்தங்களாகும். இலங்கையில் நடந்த போரில் ராவணன், அவனது தம்பி கும்பகர்ணனை கொன்று சீதையை ராமன் மீட்டு திரும்பியபோது ராமனை பிரம்ம ஹத்தி தோஷம் தொடர்ந்தது.

இதில் ராவணனை கொன்ற தோஷத்தை ராமன் ராமேஸ்வரத்தில் சிவ வழிபாடு செய்து தீர்த்தார். ஆனால் கும்பகர்ணனின் ஆவி ராமனை பேயுருவில் தொடர்ந்ததால் அயோத்தி செல்லும் பயணம் தடைபடவே சில முனிவர்களின் வழிகாட்டுதல் படி திருவானைக்காவல் நாவற்காட்டில் சிவலிங்கம் அமைத்து சிவ பூஜை செய்து பிரம்ம ஹத்தி தோஷத் தை ராமன் நீங்க பெற்றதாகவும் கூறப்படுகிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகிய 4 சமய குரவர்களும் இத்திருத்தலத்தில் வழிபாடு செய்து உள்ளனர்.

யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி முடியும் நிலையில் இருப்பதை படத்தில் காணலாம்.

இத்தகைய சிறப்புக்குரிய திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் மகா கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (டிசம்பர்) 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. 9-ந்தேதி பரிவார மூர்த்திகளுக்கும், 12-ந்தேதி அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி பரிவார மூர்த்தி சன்னதிகளில் ஏற்கனவே பாலாலயம் செய்யப்பட்டது.

ராஜகோபுரம் மற்றும் 4 திசைகளிலும் உள்ள கோபுரங்கள், பரிவார மூர்த்திகளின் சன்னதி விமானங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டன. கும்பாபிஷேகத்தின் போது கோபுர உச்சியில் அர்ச்சகர்கள் ஏறி புனித நீர் ஊற்றுவதற்கு வசதியாக சவுக்கு கம்புகளால் சாரங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதே போல் கோவில் உள் பிரகாரங்களில் வர்ணம் தீட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக யாக குண்டங்கள் பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. முன்னதாக 6-ந்தேதி காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் காவிரி படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

யாகசாலை பூஜைகள் நடைபெறும் நாட்களில் தினமும் கோவில் வளாகத்தில் இன்னிசை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், திருப்பணியில் ஈடுபட்டுள்ள சிவ தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com