குழந்தை பாக்கியம் அருளும் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்

மதுரை அருகே உள்ள விராதனூரில் பழமையான ‘அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்’ என்று அழைக்கப்படும் சிவபெருமான் கோயில் உள்ளது. மூலவராக ‘அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்’ உள்ளார். அர்த்தமண்டபத்தில் விநாயகர், முருகன் சிலைகளும், தனி மண்டபத்தில் நந்தி சிலையும் உள்ளன. மேலும் பத்ரகாளி, வீரபத்திரர், முத்துக் கருப்பண்ணசாமி, ராக்காயி, சப்பாணி, காவல் கருப்பு, முனியாண்டி சிலைகளும் உள்ளன. கோயிலின் வாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. பெரும்பாலும் சிவாலயங்களில் மையப் பகுதியில்தான் மூலவர் சன்னதி இருக்கும். ஆனால் இங்கு வடமேற்கு மூலையில் மூலவர் சன்னதி அமைந்துள்ளது. இந்த கோயில் மூலஸ்தானத்தில் விஷ்ணு இடபவாகனமாக உள்ளார். இதனால் சிவபெருமான், சக்தி மற்றும் பெருமாளை ஒரே சன்னதியில் காண முடிகிறது. பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால் இங்கு ரிஷபாரூடர் மூலவராக அருள்பாலிக்கிறார். பிரதோஷ நாட்களில் மூலவரையே ரிஷபாரூடராக வழிபடுவது கோயிலின் சிறப்பாகும்.

தல வரலாறு

உத்திரகோசமங்கை பகுதியை சேர்ந்த 2 குடும்பத்தினர், 750 வருடங்களுக்கு முன்பு, அழகர்கோயிலில் உள்ள கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்த கிளமபினர். வழியில் மதுரை அருகேயுள்ள விராதனூரில் அவர்கள் தங்கி இளைப்பாறினர். அங்கிருந்த மரத்தில் தொட்டில் கட்டி தங்களது குழந்தையை தூங்க வைத்தனர். பின்னர் நடந்து வந்த களைப்பில் அனைவரும் தூங்கி விட்டனர். திடீரென அவர்கள் கண் விழித்து பார்த்தபோது தொட்டிலில் இருந்த குழந்தையை காணவில்லை.
அருகிலிருந்த மரத்தின் உயரமான கிளையில் அந்த குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர், ‘‘இறைவா! எங்களது குழந்தையை காப்பாற்று” என்று சிவபெருமானை வேண்டி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் மனமிரங்கிய சிவபெருமானும் அந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். பின்னர் அப்பகுதியில் தனக்கு கோயில் கட்டி வழிபடும்படி அவர்களிடம் தெரிவித்து விட்டு மறைந்தார்.

சிவபெருமானின் விருப்பப்படி, அப்பகுதியில் கோயில் எழுப்பிய அவர்கள், மூலஸ்தானத்தில் ரிஷபாரூடர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். குழந்தையை காணாமல் அழுத பெற்றோரின் கண்ணீரை போக்கியதால், அந்த கோயிலுக்கு “அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்’ என்ற பெயர் ஏற்பட்டது. குழந்தை இல்லாதவர்கள், குழந்தை வரம் வேண்டி இங்குள்ள மூலவரை மனமுருக வணங்குகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிகளுக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மன வலிமை வேண்டியும், திருமணத் தடை நீங்க வேண்டியும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷம், நவராத்திரி, பெரிய கார்த்திகை உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com