கோடி நலம் தரும் கோடியம்மன் கோவில்

முன்னொரு காலத்தில் சோலைகள் சூழ்ந்த, அழகாபுரி என்னும் தஞ்சையில் பராசரர் என்ற முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அப்போது தாரகன், தஞ்சகன் என்ற அரக்கர்கள் முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்து கொண்டி ருந்தனர். அரக்கர்கள் இருவரும் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிடம் வரம் பெற்றிருந்த காரணத்தால், அவர்களை அழிக்க முடியாது என்று கருதிய முனிவரும் தேவர்களும், அன்னை பராசக்தியிடம் சரணடைந்தனர்.

 தஞ்சபுரீஸ்வரர் என்னும் சிவாலயத்தில் மேற்கு நோக்கிய ஈஸ்வரனும், தெற்கு நோக்கிய ஆனந்தவல்லி என்ற அம்பிகை யும் வீற்றிருப்பதைக் கண்டு, அந்த அன்னையிடம் தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். இதையடுத்து ஆனந் தவல்லி விஸ்வரூபம் எடுத்து, கோடி உருவங்களாக மாறி போர்க்கோலம் பூண்டு, அரக்கர்களை வதம் செய்தாள். அன்னை கோடி உருவம் பெற்றதால், ‘கோடியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டது. அன்னையால் வதம் செய்யப்பட்ட தஞ்சகன் என்ற அரக்கன், இறக்கும் தருவாயில் வேண்டிக் கொண்டபடி, தஞ்சன் ஊர் என்பதே ‘தஞ்சாவூர்’ ஆன தாக வரலாறு கூறுகிறது.

கோவில் அமைப்பு :

இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தோரண வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், விநாயகரும், பாலமுருகனும் இருபுறமும் காட்சி தருகின்றனர். கோவிலுக்கு முன்பு காவல் தெய்வமான மதுரை வீரன் ஒரு சன்னிதியிலும், அய்யனார் பூரணம், பொற்கொடி ஆகிய கிராம தேவதைகள் மற்றொரு சன்னிதியிலும் கிழக்கு பார்த்து வீற்றிருக்கின்றனர். பலிபீடமும், அதன் அருகே நந்தியும் உள்ளது. இத்தல அன்னை சிவசக்தி சொரூபம் என்பதால் நந்தி வாகனமாக இருக்கிறது.

மகா மண்டபத்தின் உட்புறம், அரக்கர்களை அழிக்க அம்பாள் எடுத்த அவதாரமும், போர் நிகழ்வுகளும் அழகிய வண்ணங்களில் ஓவியமாக தீட்டப்பட்டு கண்களைக் கவருகின்றன.

துவார சக்திகள் இருபுறமும் நிற்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், பச்சைக்காளியும், பவளக்காளியும் இரு புறங்களிலும் கற்சிலைகளாக காட்சி தருகின்றனர். அபிஷேகம் என்றால் இவர்களுக்குத் தான். உள்ளே கோடியம்மன் ‘வெற்றி தேவதை’யாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வன்னி மரத்தினை பீடமாகக் கொண்டு, முழுவதும் சுதையினால் ஆன அன்னை, சிவப்புத் திருமுகம் காட்டி திரிசூலத்தைக் கீழே பாய்ச்சிய படி எட்டு கரங்களுடன் அருள்மழை பொழிகிறாள்.

திருமணத் தடை நீங்கவும், மகப்பேறு கிடைக்கவும் பெண்கள் இத்தல அன்னையை வழிபாடு செய்கிறார்கள். மேலும் சாலை ஓரமாக இருப்பதால் வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள். கண் திருஷ்டி விலகவும், பகை வெல்லவும், வறுமை நீங்கவும் கண்கண்ட தெய்வமாக கோடியம் மனைக் கும்பிடுகிறார்கள்.

தேவியைத் தரிசித்து விட்டு பிரகாரம் வலம் வரும்போது, தென் கிழக்குப் பகுதியில் கணபதி, சிவன், சிவதுர்க்கை, விஷ்ணுதுர்க்கை, கால பைரவர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

இயற்கையிலேயே பசுமை வண்ணத்தில் பச்சைக் காளியாக இருக்கும் பராசக்தி, அரக்கனை அழிக்கப் புறப்பட்டபோது, கோபத்தின் காரணமாக சிவப்பு நிற பவளக் காளியாக மாறினாள். எனவே இந்த ஆலயத்தில் நடைபெறும் பச்சைக்காளி – பவளக்காளி விழா இத்தலத்தின் தனிச்சிறப்பு.

தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சித்திரைத் திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்பாக, கோடியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அப்போது முதல் திங்கட்கிழமை ‘அய்யனார் காப்பு’ என்றும், செவ்வாய் ‘அம்மன் முதல் காப்பு’ என்றும், அதற்கடுத்த செவ்வாய் ‘அம்மன் இரண்டாம் காப்பு’ என்றும் சொல்லப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com