கோவிலில் பிரதட்சிணம் செய்வது எதற்காக ?

பிரதட்சிணம் என்றால் வலம் வருதல். அதாவது கடிகார முள்ளின் திசையில் சுற்றுவது. உலகின் வடக்கு அரைக்கோளத்தில், அதாவது பூமத்திய ரேகையின் வடக்கு பகுதியில் இயற்கையிலேயே குறிப்பிட்ட சூழல் உள்ளது. வடக்கு அரைக்கோளத்தில் நீங்கள் ஒரு குழாயைத் திறந்தால், வாளியில் நீர் விழும்போது, அது வலதுபுறமாக சுழித்து விழும். இதை நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா?

பலரும் இதை கவ னித்து இருக்க மாட்டார்கள். நீர் மட்டுமல்ல. இப்பகுதியில் இயற்கையிலேயே எல்லாமே பிரதட்சிணமாக சுற்றுகிறது. ஆனால், தெற்கு அரைக்கோளப் பகுதியில், நீங்கள் குழாயைத் திறந்தால் அப்போது நீர் அப்பிரதட்சிணமாக விழும்.

எனவே, வடக்கு அரைக்கோளத்தில் ஒரு சக்தியான இடம் இருக்கும்போது, அதன் முழுப் பயனையும் நீங்கள் பெறவேண்டும் என்றால், நீங்கள் அந்த இடத்தை பிரதட்சிணமாகச் சுற்றவேண்டும். இன்னும் அதிக பலன் வேண்டும் என்றால் உங்கள் தலை ஈரமாக இருக்க வேண்டும். இன்னும் அதிகபலன் வேண்டும் என்றால் உங்கள்உடையும் ஈரமாக இருக்க வேண்டும். இன்னும் இன்னும் அதிகபலன் வேண்டும் என்றால் நீங்கள் உடை உடுத்தக் கூடாது. ஆனால் உடைஇல்லாமல் வலம் வருவதைவிட, ஈரஉடையுடன் வலம் வருவது நல்லது. ஏனென்றால் ஈரஉடல் விரைவில் காய்ந்து விடும்; அதுவே உடைஈரமாக இருந்தால் அதிக நேரம் அந்தஈரம் தங்கும்.

ஈர ஆடையுடன் ஒரு சக்தியான இடத்தை சுற்றிவந்தால் நீங்கள் அங்குள்ள சக்தியை அதிகமாக உள்வாங்கிக் கொள்வீர்கள். உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகப்படுத்தும் வழியே, இந்தஈர உடை பிரதட்சிணம்.

எனவே நீங்கள் பிரதட்சிணம் செய்யும் போது, இயற்கையின் சுழற்சியுடன் இணைத்து சுற்றுகிறீர்கள். மேலும், பிரதிஷ்டை செய்யப்பட்ட எந்த ஒரு இடமும் ஒரு நீர்ச்சுழலைப் போல செயல்படுகிறது. இந்தச் சுழல், அதிர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் அதே சமயம் ஒருவரை உள்ளே ஈர்ப்பதாகவும் இருக்கிறது. எனவே, இறைத் தன்மையும் உங்கள் தன்மையும், ஒன்றோடு ஒன்று கலந்து விடுகிறது.

நம் கலாச்சாரத்தில் நாம் கடவுளைச் சந்திக்க விரும்புவதில்லை; அந்தகடவுளாகவே மாறிவிடவிரும்புகிறோம். இது பேராசைதான், இல்லையா? நாம் கடவுளை உணர்ந்து, அவனாகவே மாறிவிட விரும்புகிறோம். கடவுளை காண்பதில் நாட்டம் கொள்வதில்லை. அதனால்தான் தியானத்தில் கண்களை மூடிக் கொள்கிறோம். கடவுளாகவே ஆகிவிடவிழைகிறோம்.

எனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் இருப்பதே, இறைமைக்கும் மனிதருக்குமான இந்தப் பரிமாற்றம் நிகழவேண்டும் என்பதற்காகத்தான். அப்போது உங்கள்உடல் இறைமையின் உறைவிடமாகிவிடும். உங்கள் உடலை நீங்கள் ஒரு மிருகம் போலவும் வைத்துக் கொள்ள முடியும். புனிதமாக, இறைத்தன்மை கொண்டதாகவும் ஆக்கிக் கொள்ளமுடியும்.

எனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தை பிரதட்சிணமாக சுற்றி வருவது, மேற்கூறிய வாய்ப்பை ஏற்படுத்தத்தான். குறிப்பாக, பூமத்திய ரேகை முதல் 32 டிகிரி அட்சரேகை வரையில் இந்தத் தன்மை மிகவும் தீவிரமாக உள்ளது. எனவேதான் 32 டிகிரி அட்சரேகை வரையிலான பரப்பில் அதிக கோயில்கள் அமைந்துள்ளன.

இன்னும் கவனித்துப் பார்த்தால், வடக்கு நோக்கிச் செல்லச் செல்லஅங்குள்ள கோயில்கள், அதிகமாக பக்தியை மையமாகக் கொண்டிருக்கும். ஆனால் தென்திசையில், பக்தி என்பது இருந்தாலும், தென்னாட்டுக் கோயில்கள் விஞ்ஞானப் பூர்வமாகவும் பிரம்மாண்டமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கும். அவற்றைக் கட்டிமுடிக்க தலைமுறை தலைமுறையாகக்கூட வேலை செய்திருப்பார்கள்.

இப்படித்தான் கோயில் என்னும் கலாச்சாரம் உருவானது. இக்கோயில்களின் பிரம்மாண்டம் என்பது வெறும் தற்பெருமைக் கதைஅல்ல. இப்படி இருந்தால்தான் அது மக்களுக்கு வேலை செய்யும் என்பதை தெரிந்தே உருவாக்கினார்கள். பிரதோஷம் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், அது ஒரு மாதத்தின் 13வது நாள். சிவராத்திரிக்கு முந்தையநாள். அப்போது கோயிலில் அப்பிரதட்சிணமாகச் சுற்றுவதாகச் சொல்கிறீர்கள். அது அப்பிரதக்ஷணம் அல்ல.

அன்று நிலவு மெல்லியபிறை வடிவத்தில் உள்ளது. எனவே, அவர்களும் அந்த பிறைவடிவில் சுற்றுகிறார்கள். அன்று கோயிலில் இருக்கும் லிங்கத்தைப் பிறையின் பாதையில் நடந்து சுற்றுகிறார்கள். இதற்கு யோகத்தில் ‘சோம ரேகை’ என்று பெயர். அன்று நிலவு ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருக்கிறது. ஒரு சக்தியான கோயிலில், சோம ரேகை இயல்பாகவே அமைந்து விடுகிறது. ‘சோம’ என்றால் நிலவு. ‘சோம’ என்றால் எழுச்சியூட்டும் வடிவம் என்றும் பொருள். எனவே பிரதோஷம் என்றால் பேரானந்தமும் எழுச்சியும் அடைவதற்கானநாள்.

அன்று சோம ரேகையில் நடந்தால் நீங்கள் அசைவற்ற தன்மையும் எழுச்சியும் ஆனந்தமும் கொண்டவராக ஆகிவிடுவீர்கள். இத்தகைய விஷயம் சராசரி மக்களுக்கும் தெரிந்திருக்கிறது என்பது மகிழ்ச்சிதான். ஆனால், முழுவட்ட அப்பிரதட்சிணம் செல்வது சரியான முறை அல்ல. பொதுவாக, மக்களிடம் சோம ரேகையை பார்க்கும் அளவுக்கு நுட்பம் இப்போதெல்லாம் இருப்பதில்லை.

பிரதோஷம் முக்கியமான ஒரு நாள். மறு இரவு சிவராத்திரி என்பதால், சிவன் போலவே அசைவற்ற தன்மையாக ஆவதற்கு முயற்சிக்கிறோம். இயற்கையே உங்களுக்கான வாய்ப்பை வாரி வழங்குகிறது, அதுவும் இலவசமாக!

பூக்களையும் இலைகளையும் பறிக்க வேண்டாம். பூஜைப் பொருட்களை வாங்க வேண்டாம். வெறுமனே நீங்கள் இயற்கையுடன் ஒத்திசைவுடன் இருந்தால் அந்நாளில் பேரானந்தம், அசைவற்ற தன்மை மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை ஒரு சேர நீங்கள்உணரமுடியும்.

பிரதோஷம் என்பது வெற்றி கொள்ளும் நாள்அல்ல. அது நிலவின் பாகமாகவே ஆகும் நாள். ஒரு யோகியின் அசைவற்ற தன்மையின் சமநிலையும், அதே சமயம் பித்தனைப் போன்ற பேரானந்தமும் ஒருசேர உணரும் வாய்ப்பே இந்நாள்.

இந்த இரண்டும் சேர்ந்ததுதானே வாழ்க்கை!

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com